மத வாரியான கணக்கெடுப்பு உணர்த்தும் உண்மைகள்

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் மத அடிப்படையிலான விபரங்களை மோடி அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 1936ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்த முதல் சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனத்தை பதிவு செய்தபோதும், அதனை வெளியிடாமல், யாரும் கோரிக்கை எழுப்பாத நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிறுத்தியே மதவாரியான கணக்கெடுப்பு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதன் பின்னணியில் உள்ள அரசியல் இலாபத்தை விட ஊடகங்கள் இதனை கையாண்ட விதம் வெட்கக் கேடானது.

ஒரு உண்மையை, தங்களுடைய விருப்பத்திற்கேற்ப எவ்வாறெல்லாம் திரித்து வெளியிடலாம் என்பதை மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த செய்திக்கு முக்கிய பத்திரிகைகளும், தொலைக்காட்சி சானல்களும் அளித்த தலைப்புகளிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

செய்திகளை வெளியிடும்போது அதில் உள்ள உண்மை விபரங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதன் பின்னணியில் ஏதேனும் உத்தேசம் ஒளிந்திருக்கும் என்பது மறுக்கவியலாது.

மதவாரியான கணக்கெடுப்பு விபரங்கள், கிடைக்க வேண்டியவர்களுக்கு முன்னரே கிடைத்துவிட்டது. அதன் மீது விவாதங்கள் மட்டுமல்ல, தேர்தல் பிரச்சாரங்கள் கூட நடந்து முடிந்துவிட்டன. அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை அடிப்படையாக கொண்டுதான் அமெரிக்காவின் ஃப்யூ ரிசர்ச் செண்டர் சில ஆய்வுகளை வெளியிட்டிருந்தது. இதனை சாக்காக வைத்து பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இந்து சமூகத்திடம் அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். முஸ்லிம்களின் மக்கள்தொகை அபரிமிதமாக வளர்ந்து வருகிறது என்ற மாயையை ஏற்படுத்தினர். ஆனால், தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதையும் 2001 – 2011 பத்தாண்டுகளுக்கு இடையே அனைத்து சமூகத்தினரின் வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளதையும் கணக்கெடுப்பு காட்டுகிறது.

2001 இலிருந்து 2011 வரையிலான பத்தாண்டுகளில் இந்து மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 16.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. முஸ்லிம் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் 24.6 சதவீதமாகும். ஆனால், அதற்கு முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது பார்வை இன்னும் தெளிவாகும். 1991 இலிருந்து 2001 வரையிலான பத்து ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி வகிதம் 29.3 சதவீதமாக இருந்தது. பத்தாண்டில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் 5 சதவீதம் குறைந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் எந்தவொரு பத்தாண்டிலும் முஸ்லிம் மக்கள் தொகை இந்த அளவுக்கு குறைந்ததில்லை. இதே நிலை தொடர்ந்தால் 2011-2021 தசாப்தத்தில் முஸ்லிம் மக்கள் தொகை விகிதம் 20 சதவீதத்திற்கு கீழேச் சென்று தேசிய சரணிசரியை தொட்டுவிடும்.

மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவது மதமோ, நம்பிக்கையோ அல்ல. வாழ்க்கை சூழகள்தாம் தீர்மானிக்கின்றன. கல்வியில் முன்னேற்றம், திருமண வயது அதிகரிப்பு, வாழ்க்கை தரம் உயர்வு ஆகியன பிரசவவயதிலும், இனப்பெருக்கத்திலும் கணிசமான தாக்கத்தை ஏற்பட்டுள்ள மாற்றமே மக்கள்தொகை விகிதம் குறைவதற்கு காரணமாகும். முஸ்லிம் பெண்கள் அதிகமாக பிரசவிப்பதாலேயே அவர்களின் மக்கள் தொகை பெருகுகிறது என்ற வாதத்தையும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் மறுக்கின்றனர். குழந்தைகளின் மரண விகிதம் இந்துக்களில் அதிகமாகும். வாழ்க்கை ஒழுங்கும், மன ஆரோக்கியமும் முஸ்லிம்களின் ஆயுளை நீட்டிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, இதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரணிக் பகைமையை தூண்டுவது முட்டாள்தனமாகும். ஆனால், உண்மைக்கு சற்றும் தொடர்பில்லாத இந்துத்துவா சக்திகள் வரும் காலங்களில் முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி என்ற கற்பனையை ஆயுதமாக்கிக் களமாடும் வாய்ப்புள்ளது.

அதற்கான முன்னறிவிப்பாகவே அவசர, அவசரமாக வெளியிடப்பட்டுள்ள மதவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பும், அதற்கு ஆதரவாக இச்செய்தியை பா.ஜ.க. ஆதரஅ ஊடகங்கள் கையாண்ட விதமும் அமைந்துள்ளது. கம்யூனிச சிந்தனையாளர் ஒருவர் கூறியதுபோல, ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு கூர்மையான கத்திப் போன்றது. அதனை எதற்காக உபயோகிக்கிறோமோ அதனைப்பொறுத்தே அதன் நன்மையும், தீமையும் அமைந்துள்ளது.’

(செப்டம்பர் 2015 இதழின் தலையங்கம்)