மறவோம் உம்மை

பொருளடக்கம்

1. யார் மீது பழிபோட?
2. ஆறடி நிலமின்றி
3. யார் அந்த பெண்?
4. ஒருநாயகி உதயமாகிறாள்
5. சிறப்புக்கே சிறப்புசேர்க்கும் பட்டங்கள்
6. ஒரு புயல்… சிறு அமைதி… மீண்டும் சூறாவளி
7. ஒரு தீக்குச்சிபோதும் பனைமரகாடு வீழ்த்த
8. உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் ஆட்சி
9. முதல் சுதந்திர போரின் ஆன்மா
10. தோல்வியிலும் வீழேன்
11. மறவோம் உம்மை

யார்மீது பழிபோட?
0 ஜான்சி ராணி! வீரத்துக்கும் தைரியத்திற்கும் பேர் போனவர். பட்டிதொட்டிகளிலும் எல்லோராலும் எளிதாய் உச்சரிக்ககூடிய  பெயர். அனைவரும்  அறிந்த வீரமங்கை! தைரியமாய் பேசும் பெண்கள் , களப்பணியாற்றும் பெண்களை  “ஜான்சிராணி” என சொல்வதுண்டு. இப்படித்தான் ஒருமுறை ஓர்  சகோதரரிடம் ஜான்சிராணி போன்ற பெண்கள் பற்றி பேசுகையில் அவர் குறுக்கிட்டு “ஏன் ஜான்சிராணியையே எல்லாரும் சொல்றீங்க… ஜான்சிராணி விட வீரமங்கை   நம்மில் உண்டு . அவரை பற்றி நம்மை போன்றவர்களும் கூட ஒரு உவமைக்கேனும் பயன்படுத்தாமல் இருப்பதால் தான் நாளடைவில் நம்மவர்கள் நம்மவர்களாலேயே மறக்கடிக்கபடுகிறார்கள் என்றார். அவர் சொன்ன  பெயர் எனக்கு அந்த நொடிதான் அறிமுகம். சற்று அதிர்ச்சியுடன் விக்கியில் சர்ச் செய்தால் இன்னும் ஓர் அதிர்ச்சி அங்கே எனக்கு காத்திருந்தது. அவர் வாழ்ந்ததும் புரட்சியும் நிகழ்த்திய இடம்  ’லக்னோ’ .

நான் லக்னோவில் சிலகாலம்  அந்த வீரமங்கையின் நினைவிடத்திற்கு சற்றுதொலைவில் வசித்தும் அவரை பற்றி எதுவும் இப்போதுவரை தெரியாது. படிப்படியாய் மறைக்கப்பட்டவர்களில் அவர் ஒருவர்  என வரலாற்றை திரித்தவர்களின்  மீது பழியை சுமத்தி நம்  மனதை தேற்றிக்கொள்வதா?  நம் வரலாறுகளை தேடி படிக்காத நம் அறிவை நினைத்து நொந்துக்கொள்வதா? என்ற கேள்வி அன்றிலிருந்து ஆழமாகவே மனதில் பதிந்துக்கொண்டது.

ஆறடி நிலமின்றி :

1பகதூர் ஷாக்கும் இப்பெண்ணுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு!. நாடாளும் அரசனை தேசதுரோக வழக்கில் குற்றம் சாட்டியதுடன் தனது வெறியை தீர்த்தும் 300 ஆண்டுகால முகலாயர் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளியிட்டும், சொந்த நாட்டிலேயே தன் உடலுக்கு ஆறடிநிலம் இன்றி நாடுகடத்தப்பட்டு மியான்மரிலேயே உயிர்நீத்தார் ஷா .  நாம் பார்க்கவிருக்கும் வீரமங்கைக்கும் இதே நிலை தான்! தன் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டும் கூட ஆட்சி செய்ய நாதியின்றி கிடந்த தன் கணவனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியை அந்நிய கைக்கு கிடைக்கவிடாமல் சாதூரியமாய் கைப்பற்றி , மாபெரும் சக்தியாய் விளங்கிய அவர்களை  எதிர்த்து போர்புரிந்து இறுதியாக நாடுகடத்தப்பட்டு நேபாளம் தஞ்சம் புகுந்த வீர மங்கை இறுதியில் வறுமையில் வாழ்ந்து  அந்நியமண்ணிலேயே!  உயிர்நீத்தார். நறுமணம்கொண்ட தேவதை[i] , அவாத்தின் ராணி என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்ட அந்த மாபெண்மணி  ஏன் அந்நிய மண்ணில் உயிர்நீத்தார்? சரித்திரத்தை சற்று நேரம் (சு)வாசிக்கலாம் வாருங்கள்..

யார்அந்தபெண்?:
நாம் அறிந்து வைத்திருக்கும் புதுகோட்டை சமஸ்தானம், ராமநாதபுர  ஜமீன்  போலவே  இந்தியா முழுவதும் ஒவ்வொரு சிறுசிறுபகுதிகளும் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டன. வடநாட்டில் முகலாயர்களை தலைமையாக கொண்ட சமஸ்தான பகுதிகளில் ,  உத்திரபிரதேசத்திலிருக்கும் ஒரு சமஸ்தானத்தின் பெயர் ’அவாத்’. பைசாபாத்தை தலைநகராக கொண்டு செயல்பட்ட இந்த சமஸ்தானம் பின்னர்  லக்னோவில்  தனது  தலைநகரை  நிறுவியது[ii]  (அவத்,ஔத்,அவாத் என்றும் உச்சரிக்கலாம்).

முகலாயர்களின் தலைமை என்றதும் பெரிதாய் ஆச்சர்யபடவேண்டாம். இந்தியாவின் பரந்த பகுதியை ஆண்ட முகலாய வம்சம் வேகவேகமாக தனது எல்லைகளை சுருக்கிக்கொண்டே வந்ததில் செங்கோட்டை எனும் கீரைபாத்தியையே அரசாண்டுகொண்டிருந்தது[iii]  அதன் விளைவாக அவாத்  ஆட்சியாளர்களின் அதிகாரம் மந்திரிகள் எனும் நிலையிலிருந்து ப்ரோமோஷன் ஆகி மன்னர்களாக மாறும் அளவுக்கு  சுதந்திரமானதாக மாறிவந்தது.[iv] . அவாத் ஆட்சியாளர்களில் மந்திரிகள் வரிசையில் பதினோறாவதும்[v]  அரசர்களின் வரிசையில் ஐந்தாவதும் கடைசி அரசனுமான வாஜித் அலி ஷா –வின் மனைவி தான் நம் கதாநாயகி பேகம் ஹஜ்ரத் மஹல்[vi]

ஒருநாயகி உதயமாகிறாள் :

அடிமைகள் சந்தை என்பது இந்தியாவிலும் ஒரு காலகட்டத்தில் படுஜோராய் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம். லக்னோ பகுதியிலும் இத்தகைய அடிமைகள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவாத் ஆட்சிக்கு உட்பட்ட பைசாபாத்தில் அவாத் பகுதியில் ஓர் ஆப்ரிக்க அடிமையின்[vii] வீட்டில் 1880ல் பிறந்த அழகு பதுமைக்கு அவர்களின் வழக்கப்படி நடனம் கற்பித்துக்கொடுத்தனர். வயதில் 2 ஆண்டு[viii] இளையவரான வாஜித்தின் அவையில் நடனமாடிய அப்பெண்ணை பார்த்த மாத்திரத்தில் தன்னை பறிகொடுத்தார் மன்னர். நடனமும் அழகும் மட்டுமல்ல அவரை கவர்ந்தது! அதையும் தாண்டி ’முஹம்மதி கானும்’ கண்ணில் தெரிந்த ஒளி  அவளின் ஆளுமையும், புத்திகூர்மையும் காட்டிக்கொடுக்க , அவளை தனக்கே உரியதாக்கிக்கொண்டார்.

 

சிறப்புக்கே சிறப்புசேர்க்கும் பட்டங்கள்:

2வாய் திறக்கவேண்டாம்… அதிர்ச்சியாக வேண்டாம்….வாஜித் அலி ஷாவிற்கு மொத்தம் 375 மனைவிகள் என சொல்லபடுகிறது. உண்மையோ பொய்யோ…!!  முதல் மனைவி என்ற அந்தஸ்தை பெற்றது முஹம்மதி கானும் தான்…இதுதான் அவரின் உண்மையான –தாய்தந்தை சூட்டியபெயர்.  வாஜித் அலிஷாவை மணம் புரிந்ததும் மன்னர் தன் மனைவிக்கு ’ இப்திகார்-உன்-நிஷா (the Pride of all Women) என்ற பெயரை சூட்டினார்[ix].

அரசாளும் வாரிசை முதலில் கொடுக்கும் பெண் தான் பேரசியாய் கருதப்படும் வழக்கம் அப்போதிருந்தது. முதல் குழந்தையை பெற்றெடுத்ததும் தாய் எனும் தகுதியுடன் அரசின் ராணியாகும் தகுதி கிட்டியது. அது முதல் இப்திகாருன்னிஷாவாக இருந்த முஹம்மதி கானும் ’ஹஜ்ரத் மகல்’ எனும் சிறப்பு பெயர் கணவரால்  பெற்றார்.   அரச மரபில் தன் ஆசை மனைவிக்கு ஆசை ஆசையாய் அளிக்கும் பட்டமே  , பேராக நிலைப்பது இயல்பு. எளிய உதாரணம்- ஆக்ரா தாஜ்மஹாலின் நாயகி யின் உண்மைப்பெயர் அர்ஜுமண்ட் பானு . காதல் கணவன்  ‘அன்பிற்குரிய அரண்மனையின் அணிகலன் எனப்பொருள்படும் மும்தாஜ் மஹல் எனும் பட்டத்தை வழங்க அதுவே பெயராக நிலைத்திருப்பதை அறிவோம்[x] மணிகர்னிகாவுக்கு  கணவன் சூட்டிய பெயர் ராணி லட்சுமிபாய்.  பேகம் ஹஜ்ரத் மஹல் என்பதும் அதுபோன்ற சிறப்பு பெயர் தான். பேகம் என்பது அன்றைய காலங்களில் அரசகுடும்ப பெண்களுக்கு வழங்கப்படும் பட்டம்[xi]

 

ஒரு புயல்… சிறு அமைதி… மீண்டும் சூறாவளி :

3திருமணத்திற்கு பின்  தெளிந்த நீரோடையாய் சென்றுகொண்டிருந்த ராஜா ராணியின் வாழ்க்கையில் தீடீரென எங்கிருந்தோ பாய்ந்து வந்த  கல் சகதிகளை கிளப்பி நீரை கலங்கடித்தது போலவே விவாகரத்து எனும் வடிவில் இன்ப வாழ்க்கையை குழப்பி முடிவுக்கு வர வைத்தது. தனக்கென ஒதுக்கப்பட்ட நாகினா -வாலி பரதாரி மாளிகையில் தன் மகனுடன் வசித்து வந்தார் ஹஜ்ரத் மஹல். 6 வருடங்கள் கழிந்தோடியது.

 பிளாசி போரில் அறுவடை செய்த கம்பெனியினர் வங்காளம் முழுவதும் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். மண் ஆசை யாரை விட்டது? எடு  அடுத்த போரை! இம்முறை முகலாய அரசர் 2ம் ஷா ஆலமுடன்! இந்த பக்சர் போரிலும் கம்பெனியினர் ஜெயிக்க 1764ல் முகலாயர்களின் ஒரிஸ்ஸா, பீகார் , உபி முதலியவையும் ஆங்கிலேய மண் ஆசைக்கு பசி தீர்த்தன. கைப்பற்றபட்ட பகுதிகளில் இருக்கும் ஆட்சியாளர்களிடம் ஒப்பந்தம் செய்து வரி வாங்கி கஜானாவை நிரப்பிக் கொண்டிருந்தது. இப்படிதான் மந்திரியாய் இருந்த அவாத் ஆட்சியாளர்கள் அரசர்களானார்கள். வரி செலுத்திக்கிறேன், நீ எப்ப போன்னு சொன்னாலும் ஒடனே இடத்தை காலி பண்ணிடுறேன் என்ற அடிப்படையில் கம்பெனியினருடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர் அவாத் ஆட்சியனர்[xii]

தான் உண்டு தன் ’மிருகங்கள்’கலெக்‌ஷன்  உண்டுன்னு கிடந்தாலும் சிறப்பாகவே நிர்வாகம் செய்துகொண்டிருந்த வாஜித் மீது ஆங்கிலேய வல்லூறுகளின் கண் பட்டது!  ஆட்சி செய்துகொண்டிருந்த 9 ஆண்டுகளில் ‘நீ சரிபட்டு வரமாட்ட’ என முத்திரை குத்தி ‘இந்தா வச்சுக்கோ’ என்று வருட ஓய்வூதிய தொகையாக 15 லட்சம்[xiii] கொடுக்கபடும்னும் ஆசை காட்டி கொல்கத்தா பக்கம் கை நீட்டினர். மன்னரும் தன் மனைவிமக்களுடனும், தன் ஆசை ஆசையாய் சேர்த்த மிருகங்களையும் அழைத்துக்கொண்டு நாடு துறந்தார் வீரமங்கை ஹஜ்ரத் மஹலை தவிர! இதெல்லாம் நடந்தது சிப்பாய் கலகம் நடைபெறுவதற்கு சற்று முன்பாக! 1856ம் ஆண்டு வாக்கில்…

 

ஒரு தீக்குச்சிபோதும் பனைமரக்காடு வீழ்த்த :

4தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுகொண்ட யானையாய் ஆங்கிலேயர்கள் தனது ராணுவ நடவடிக்கைகளில் புகுத்திய சில மாற்றங்கள் அவர்களையே பீதிக்குள்ளாக்கும் என அவர்கள் அறியவில்லை. பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் சேர்த்து தடவபட்ட என்பீல்டு துப்பாக்கியின் தோட்டா  உறையை பற்களால் தான் கடித்து திறக்கவேண்டும் என மேலதிகாரிகள் அடம்பிடிக்க உடனடியாய் மல்லுகட்டி நின்றனர் சிப்பாய்கள்[xiv]

மார்ச் 29 1857ல் 34ம் ரெஜிமெண்டை சேர்ந்த தீவிர இந்துவான மங்கல் பாண்டே தனது மேல் அதிகாரி லெப்டினன்ட் பாக்[xv] அவர்களை கொல்ல உடனடியாய் மற்ற வீரர்களும் பொங்கி எழுந்தனர்.  இந்த விஷயம் காட்டுதீ போல் பரவியது. கிளர்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்தனர்.  அந்தந்த பகுதியின்  பதவி பறிகொடுத்த, பயந்துகொண்டிருந்த சிறுபகுதி ஆட்சியாளர்களை தலைமையாக்கிகொண்டனர். இந்த ஆட்சியாளர்கள் அனைவரும்   பகதூர் ஷா வை தலைவராக்கிக்கொண்டனர்.  இந்த கிளர்ச்சி மூலம் இழந்த தன் பகுதிகளை மீட்க பகதூர்ஷாவும் தலைமை ஏற்றார்[xvi]

உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் ஆட்சி :

5இதற்கிடையில் அரசனில்லாத அவாத்  அச்சில்லாத  தேராக மாறி, குற்றுயிர்  கொலையுயிராக தள்ளாடி கொண்டிருந்தது.  .  தன் தாய்மண்ணில் தன் வம்சம் ஆட்சி செய்த பகுதியை அந்நிய ஓநாய்க்கு தாரை வார்த்துகொடுப்பதில் அந்த வீரமங்கைக்கு சிறிதும் விரும்பமில்லை!  ஒரு சராசரி பெண்ணாய் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ அந்த ’பெண்குலத்தின் பெருமை’க்கு பெருமையாக தெரியவில்லை. சரித்திரத்தை மாற்றி எழுத தீர்மானித்தார்.  இதனால் தான் She was a better man than her husband and lord [xvii] என்று பேராசிரியர் N  தனது நூலில் இவரை இவ்வாறு சிறப்பித்தார். ஒவ்வொரு பகுதி அரசர்களும் கிளர்ச்சிபடையை ஒருங்கிணைக்க பேகம் அவர்களுடன் கைகோர்த்தார். பேகம் ஆதரவாளர்களை திரட்டி சராஅஃபாத் தௌலா, மஹாராஜா பால் கிருஷ்ணா, ராஜா ஜெய்லால் சிங் , மேமான் கான் உடன் கூட்டணி சேர்ந்து கிழக்கிந்திய கம்பெனி வசம் இருந்த லக்னோவை அதிரடியாய் பறிமுதல் செய்தார்.

612 வயது  தன் மகன் இளவரச பிர்ஜிஸ் காதிரை[xviii]  21  குண்டுகள் முழங்க ஜூலை 5, 1857ல்[xix] அரியணையில் ஏற்றி ’இனி இளவரசர் தான் அவாத்தின் மன்னர்’ என பிரகடனம் செய்தார்.  இளவரசர் சுயமாய் முடிவெடுக்கும் பருவம் வரை தானே ஆட்சியை வழிநடத்த போவதாகவும் அறிவித்தார். அவாத் மக்கள் கொண்டாடினர்!   ஏற்கனவே கிளர்ச்சி பரவுவதை தடுக்க முடியாமல் தலைவலியோடு அழுது கொண்டிருந்த கம்பெனியினர்க்கு,  அதிரடியாய் அவாத்தை கைப்பற்றிய   பேகம் ஹஜ்ரத் மஹலின் துணிவுமிக்க செயல் காதில் விழ சுவற்றில் முட்டிக்கொண்டனர். அவாத்தின் ஆட்சியாளர்களில் இவ்வளவு வீரமான செயலை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை… தன் அரச குடும்பத்துக்கே பெருமை சேர்த்தார் பேகம்!

”அவாத் அரசகுடும்பத்தில் ஒட்டியிருந்த கோழைத்தனத்தின் கரும்புள்ளியை பேகம் ஹஜ்ரத் மஹல் துடைத்தெறிந்தார்”[xx] என பேகம் குடும்பத்தார் மட்டுமல்ல  வரலாறு தனது பக்கத்தில் பதிவு செய்துகொண்டது

முதல் சுதந்திர போரின் ஆன்மா :

7ஆன்மாவா???
ஆம்! பேகம் ஹஜ்ரத்தின் வரலாற்றை ஆய்வு செய்த பெண் எழுத்தாளர் கெனிஸ் மௌராத் தனது In the City of Gold and Silver   எனும் பேகம் ஹஜ்ரத் மஹல் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இவ்வாறு தான் பதிவு செய்துள்ளார்[xxi] . ஆனால் நமக்கு அவாத்தும் தெரியாது ஹஜ்ரத் மஹலும் தெரியாது! எவ்வளவு பெரிய இருட்டடிப்பு?    விக்டோரியா மகாராணியின்      பிரகடனத்திற்கு   ஹஜ்ரத் மஹல்     கொடுத்த கவுண்டர் அட்டாக் அவரின் வீர செறிவுக்கு முன்னுதாரணம்[xxii] நாட்கள் செல்ல செல்ல பேகத்தின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமிருந்தது. கிளர்ச்சிபடையினரின் லக்னோ பிரிவுக்கு தலைமை தாங்கி வழிநடத்தினார் பேகம் எவ்வளவு மகத்தான பொறுப்பு? லக்னோவில் இருந்த பிரிட்டீஸ் தூதரகத்தை அழித்தார்.

செப்டம்பர் 16, 1857ல் மேஜர் ஓட்ராம் மற்றும் லார்ட் க்ளைட் தலைமையிலான படை மிக துணிச்சலாக ‘காலை உணவுக்கு பின் அரண்மணையை விட்டு அரசகுடும்ப பெண்கள் வெளியேறிவிட ஆயத்தமாகட்டும்” என ஏளனமாய் பிரகடனம் செய்தார்கள். ஆனால் வீரமங்கையோ அதனை துச்சமென தனது காலில் மிதித்தார். தனது லக்னோவை கைப்பற்ற ஆங்கிலபடை தொடர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. பேகம் ஹஜ்ரத் மஹலின் படையும் தீவிரமாய் உழைத்தது.[xxiii]..

பகதூர்ஷாவை பற்றி படித்தவர்களுக்கு மேஜர் ஹாட்சன் பற்றி தெரிந்திருக்கும். ஷாவின் மகன்கள் தலையை கொய்து தாம்பூலத்தில் ஏந்தி வந்த கொடியவன் அவன்! போர் உச்சகட்டத்தின்போது ’பேகம் கோதி’ மாளிகையை முற்றுகையிட்ட அவனை 11 மார்ச் 1858ல்  தீர்த்துகட்டியது பேகமின் படையினர் தான்.[xxiv] இப்படியாக வெற்றிமேல் வெற்றிகனி ஈட்டுக்கொண்டிருந்த ராணியின்  படை பலம் குன்ற, கம்பெனியின் படை கை ஓங்கியது. தொடர்ந்து 6 மாதங்கள் நடந்த போரில் , துரதிஷ்ட்டமாய் போதிய படைபலமும் ஆயுத பலமும் இன்றி ஒவ்வொரு பகுதியையும் இழக்கவேண்டி வந்தது . உதவ வேண்டிய அண்டை நாட்டு மன்னர்களும்  உதறிவிட பேகம் தனி ஆளாய் இறுதிவரை தனது படையை வழிநடத்தினார்    இறுதியாக மெல்ல மெல்ல லக்னோவை முழுவதும் தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது கம்பெனி படை![xxv] இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

தோல்வியிலும் வீழேன் :

8போரில் தோற்று கைது செய்யபடும் தலைவர்களை பிரிட்டீஸ்ஸார் நடத்தும் விதமோ தவளையின் வாயில் சிக்கிய எலி போல  தான்! ஓநாயின் கையில் சிக்குவதை விட அந்நிய மண்ணில் மறைவதே சிறந்தது என முடிவெடுத்தார் பேகம். புலி பதுங்குவது பாய்வதற்குதானா என அஞ்சிய பிரிட்டீஸ்ஸார் 2 லட்சம் வருடாந்திர ஓய்வூதியம் தருவதாகவும் , இனி மீண்டும் புது பிரச்சனையுடன் தங்கள் தலையை குடைய கூடாதென்றும் அதிகாரமாய் கெஞ்ச ஹஜ்ரத் மஹலோ அவர்களின் வெகுமதிகளையெல்லாம்  விட்டெறிந்தார்! கேவலம் உன் பணத்திற்கா நான் ஆசைபடுவேன்?!! ராணி நேபாளில் தஞ்சம் புகுந்தார். ஆரம்பத்தில் இடம் தர மறுத்த நேபாளிய அரசன் பின்னர் ராணியின்  கரூவூலத்தில் மயங்கி இடமளித்தார். ராணியுடன் அவரது ஆதரவாளர்களும் கூட அகதிகளாய் நேபாளம் வந்தனர். தனக்கென ஒரு மாளிகை கட்டி இறுதி வரை அங்கேயே வாழ்ந்து 1879ல் உயிர்நீத்தார்.    அவரின் கல்லறை காட்மாண்டு ஜாமா மஸ்ஜித்க்கு அருகே ஜாமா மஸ்ஜித் நிர்வாக குழுவினரால் பராமரிக்கப்பட்டுவருகிறது. வருடா வருடம் நேபாள அரசு நினைவுதினமும் கொண்டாடுகிறது [xxvi].

 

மறவோம் உம்மை :

9பேகம் ஹஜ்ரத் மஹலின் வீரதீர செயல்கள் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தோடு தொடர்புடைய அவரின் பங்களிப்பு அபரிதமானது.  பேகமை சிறப்பிக்கும் வகையில் லக்னோ ஹஜ்ரத் கஞ்ச் பகுதியில் ”பேகம் ஹஸ்ரத் மஹால் பார்க்” 1962 ல் அமைக்கப்பட்டது. [xxvii]. மே 10 1984 இந்திய அரசு 15,00,000 அஞ்சல் தலையும் வெளியிட்டு கௌரவித்தது[xxviii]. ஆனாலும் கூட நம்மில் பலருக்கு அவரை பற்றி தெரியாது?

நம் இளைய தலைமுறையினருக்கு மிகமிக தேவையான பேகமின் வரலாறுகளை நடமாடவிடாமல் பூட்டி வைத்து கரையானுக்கு உணவாக்கிக்கொண்டிருக்கிறோம்!!! உண்மைகளை மண்ணோடு மூடியிட்டு மக்கச்செய்வதும் கொலைக்கு சமம் தான்! இணையம், புத்தகம் என பல வழிகள் இருந்தும் ,தன் சமூகம், பாரம்பரியம், முன்னோர்களின் தியாகம் ஆகியவற்றை அறியாதவர்களும் , அறிய முற்படாதவர்களும் அவமானத்தால் வெட்கித்தலைகுனிய வேண்டும்! “இந்தியாவுக்காக என்ன செய்தீர்கள்” என கேள்விகேட்டு ஒருவன் நம் முகத்தில் காரி உமிழும் போது பதில் சொல்ல தெரியாமல்  தலைகுனியும் கேவலமான நிலை – தியாயகம் செய்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் துரோகமே! இனியேனும் விழிப்போம்! இந்த வீரபெண்மணியை போற்றுவோம்…இன்னுமின்னும் பூட்டிவைத்திருக்கும் வரலாறுகளை உடைத்தெறிந்து பரப்ப முயல்வோம். இதுவே அவர்களின் தியாகத்திற்கான நம் சிறு நன்றிகடனாகும்.

அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக.ஆமீன்


[i]  மஹஹ்பாரி-mahak pari- வாஜித் வழங்கிய பட்டம்

[ii] http://en.wikipedia.org/wiki/Awadh

[iii] முஸ்லிம் மன்னர்கள் ஆண்ட இந்தியா – தாழை மதியவன்

[iv] http://en.wikipedia.org/wiki/Nawab_of_Awadh#Establishment_of_the_State_of_Oudh

[v] http://en.wikipedia.org/wiki/Nawab_of_Awadh#Establishment_of_the_State_of_Oudh

[vi] http://en.wikipedia.org/wiki/Wajid_Ali_Shah

[vii] The Last King in India-Author Rosie Llewellyn-Jones

[viii] பேகம் மஹல் பிறப்பு -1820, வாஜித் பிறப்பு – 30 July 1822 (wiki)

[ix] http://oudh.tripod.com/bhm/bhmparex.htm

[x] http://www.tajmahal.gov.in/mumtaz.html

[xi] http://en.wikipedia.org/wiki/Begum

[xii] Wiki- http://tiny.cc/j48nrx

[xiii] http://oudh.tripod.com/bq/bqapprl.htm

[xiv] Wiki – http://tiny.cc/nl8nrx

[xv] http://en.wikipedia.org/wiki/Mangal_Pandey#The_1857_incident

[xvi] http://www.tribuneindia.com/2007/20070510/1857/main1.htm

[xvii] Sen, Prof. S. N. Eighteen-fifty Seven. the Ministry of Information and Broadcasting Government of India

[xviii] http://www.worldstatesmen.org/India_princes_A-J.html#Awadh

[xix] http://oudh.tripod.com/bq/bqapprl.htm

[xx] “ She wiped out the blot of cowardice from the face of the ruling family of Avadh. ”
—Prince Anjum Quder (grandson of Birjis Qadr)

[xxi] http://www.thehindu.com/books/books-reviews/fact-and-fiction/article4884100.ece

[xxii] முழு பிரகடனம் வாசிக்க : oudh.tripod.com/bhm/bhmproc.htm

[xxiii] http://archive.thedailystar.net/magazine/2013/02/01/history.htm

[xxiv] http://en.wikipedia.org/wiki/William_Stephen_Raikes_Hodson#Death

[xxv] http://en.wikipedia.org/wiki/Capture_of_Lucknow

[xxvi] http://www.business-standard.com/article/pti-stories/india-recalls-hazrat-mahal-s-contribution-to-freedom-struggle-114040700649_1.html

[xxvii] http://www.mapsofindia.com/my-india/travel/the-famous-memorial-of-begum-hazrat-mahal-in-lucknow

[xxviii] http://www.indianpost.com/viewstamp.php/Currency/Paisa/Alpha/B/BEGUM%20HAZRAT%20MAHAL