மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை தாமதப்படுத்துவதாக நீதிமன்றம் கண்டனம்

0

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை தாமதப்படுத்துவதாக நீதிமன்றம் கண்டனம்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களில் ஐந்து நபர்களை, அவர்கள் இவ்வழக்கை தாமதப்படுத்துகின்றனர் என்று கூறி மும்பை சிறப்பு நீதிமன்றம் கண்டித்துள்ளது.
இது குறித்து தனது கருத்தை தெரிவித்த NIA நீதிமன்ற சிறப்பு நீதிபதி வினோத் பதல்கர் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்த ஐந்து பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இவ்வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவை மதித்து நீதிமன்றத்தில் ஆஜராக அதுவே கடைசி வாய்ப்பு என்று எச்சரித்துள்ளார்.

“குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்ப்பதாக தெரிகிறது. அடுத்த தேதியில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அது தொடர்பான உத்தரவுகள் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும்.” என்று நீதிபதி பதல்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தங்கள் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கர்னல் புரோஹித் அளித்த மனுவை நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. புரோகித்கின் மனுவை நிராகரித்த NIA சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் பதல்கர், புரோகித் மற்றும் பிரக்யா சிங் மீது 2009 ஜனவரி 17 ஆம் தேதி மற்றும் 2011 ஏப்ரல் 20 ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் செல்லும் என்று கூறி உத்தரவிட்டார். இதன்படி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூர், மேஜர் ரமேஷ் உபாத்யாய், சமீர் குல்கர்னி, அஜெய் ராகிர்க்கர், சுதாகர் திவேதி மற்றும் சுதாகர் சதுர்வேதி ஆகியோர் தீவிரவாத சதித்திட்டம் மற்றும் அவர்களின் செயல்களுக்காக UAPA சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள். இத்துடன் இவர்கள் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழும் கொலை, கொலை முயற்ச்சி, சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் வெடிபொருட்களை சட்டத்தின் கீழும் விசாரிக்கப்படுவார்கள்.

Comments are closed.