மியான்மரில் ஜனநாயகம் மலருமா?

 – அ.செய்யது அலீ

மியான்மரில் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் எதிர்கட்சி தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியின் நேசனல் லீக் ஃபார் டெமோக்ரஸி(என்.எல்.டி) கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியிருப்பது ஜனநாயகத்தை நேசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாகும்.அறுபது ஆண்டுகளாக நீடித்த இன வெறி அடக்குமுறை இராணுவ ஆட்சியில் இருந்து மியான்மரை விடுவிப்பதில் என்.எல்.டியின் வெற்றி உதவும் என்பது பலரது நம்பிக்கை.

1990 ஆம் ஆண்டு சூகியின் கட்சி பெரும் வெற்றியை பெற்றபோதும் இம்மாதிரியான நம்பிக்கைகள் துளிர்விட்டன. ஆனால், இராணுவ தளபதிகள் சூகியையும், எதிர்கட்சி தலைவர்களையும் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இராணுவம் நடத்திய தேர்தல் நாடகம், அதன் கேலித்தனத்தால்தான் மக்களின் கவனத்தை ஈர்த்தது. பொதுவாக மியான்மர் மக்கள் அந்த தேர்தலை புறக்கணித்தனர்.

தற்போது நடைபெற்ற தேர்தல் சூகி உள்பட எதிர்கட்சி தலைவர்களுக்கு சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு கிடைத்ததால் முந்தைய தேர்தல்களை விட வெளிப்படையாக நடந்தது எனலாம். ஐரோப்பிய யூனியனின் தேர்தல் பார்வையாளர்களும் கிட்டத்தட்ட இதே கருத்தை கூறியுள்ளனர். 2011-ஆம் ஆண்டு சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படும் தெய்ன் ஸெய்ன் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு குடிமக்களுக்கு கூடுதலான உரிமைகள் கிடைத்தன. ஆனால், அவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்த பொருளாதார தடைகளை நீக்குவதற்கான தந்திரம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது கூட முக்கிய முடிவுகளை இராணுவம்தான் தீர்மானிக்கிறது.

2008-ஆம் ஆண்டு நடத்திய ஒரு பொது வாக்கெடுப்பின் பின்புலத்தில் அமலுக்கு வந்த அரசியல் சாசனச் சட்டத்தின் படி 25 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தால் நியமிக்கப்படுகின்றார்கள். அதுமட்டுமல்ல, சூகி கட்சி வெற்றி பெற்ற போதிலும் அவரால் அதிபராக இயலாது. ஏனெனில் அவரது கணவரும், பிள்ளைகளும் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்றிருப்பது காரணமாம். மேற்கத்திய நாடுகளுக்கு மியான்மரின் இயற்கை வளங்களை அபகரிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதால் தற்போது அவர்கள் மவுனத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இறுதியாக ஆங் சான் சூகி இன, மத பிரிவினைகளுக்கு அப்பால் மியான்மர் மக்களின் குடியுரிமைகளை எவ்வாறு மீட்டெடுக்கப்போகிறார்? என்பது குறித்தும் சந்தேகம் நிலவுகிறது. ஏற்கெனவே மியான்மரின் மண்ணின் மைந்தர்களான எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது புத்த தீவிரவாதிகள் இனவெறி தாக்குதலை நடத்தியபோது சூகி மவுனம் காத்தார். புத்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறி கடல் மார்க்கமாக அண்டை நாடுகளுக்கு புகலிடம் தேடிச் சென்ற ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிலர் அந்தமான் கடல் பகுதியில் மூழ்கி மரணித்தபோது தலாய் லாமா உள்ளிட்ட தலைவர்கள் கூட அரசுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டனர்.ஆனால், சூகியிடம் இருந்து எவ்வித ஆறுதலான வார்த்தைகளும் வெளிவரவில்லை.

15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒரு ஜனநாயக போராளியிடமிருந்து உலகம் இத்தகையதொரு மவுனத்தை எதிர்பார்க்கவில்லை. கடந்த அக்டோபர் மாதம் யங்கூனில் ஆர்கனைஷேசன் ஃபார் ப்ரொடக்‌ஷன் ஆஃப் நேசனாலிட்டி அண்ட் ரிலிஜியன் என்ற புத்த தீவிரவாதக் குழு நடத்திய பிரம்மாண்ட பேரணியில் சூகியின் என்.எல்.டி முஸ்லிம்களின் கட்சி என்று அதன் தலைவர் அஸின் விராது குற்றம் சாட்டினார். இதன் காரணமாக என்.எல்.டியின் வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆளுங்கட்சியிலும் முஸ்லிம் வேட்பாளர் கிடையாது. புத்த தீவிர வலது சாரிகளுக்கு இராணுவத்திலும், அதிகார வர்க்கத்திலும் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதால் மியான்மர்,  இராணுவ ஆட்சியில் இருந்து இனரீதியான ஜனநாயக ஆட்சியை நோக்கி திரும்புமே தவிர முழுமையான ஜனநாயக தேசமாக இருக்காது என்பதுதான் உண்மை.