– இப்னு ஹாஜா
அமெரிக்காவின் புதிய அதிபரால் மீண்டும் உலக நாடுகளில் ரத்த ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுமோ என்ற அச்சம் உலக மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகும் தகுதி உள்ள ஜெஃப் புஷ்ஷின் போக்குதான் இதற்கு காரணம். சதாம் ஹுஸைன் பேரழிவு ஆயுதங்கள் வைத்துள்ளதாக கூறி கடந்த 2003ஆம் ஆண்டு அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடுத்த கொடூரத் தாக்குதலின் விளைவால் 2013 ஆம் ஆண்டு வரை ஐந்து இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட போர்கள், ஐ.எஸ். அமைப்பின் கோரத்தாண்டவம் என எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் மீள முடியா துயரத்திற்கு ஈராக் சென்றுள்ளது.
பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹுஸைன் மறைத்து வைத்துள்ளதாகக் கூறி இந்த போரை அமெரிக்க அறிவித்தது. ஆனால் எந்த பேரழிவு ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை. அமெரிக்காவின் இந்த போர் வெறிக்கு காரணமாக அமைந்தது அமெரிக்காவின் 43வது அதிபரான ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் வெளிநாட்டுக் கொள்கையும் அதனை வடிவமைத்தவர்களும் தான். அந்த போர் வெறி அதிகாரிகள் தற்போது மீண்டும் அமெரிக்காவில் தலையெடுப்பதுதான் தற்போதைய அச்சத்திற்கு காரணம்.
புஷ்ஷின் குடியரசுக் கட்சி கடந்த இரண்டு முறை அதிபர் பதவியை கைப்பற்ற முடியாத நிலையில் ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியின் ஆட்சியில் இந்த போர் வெறியர்களால் அவ்வளவாக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதே நேரம், ஒபாமாவின் ஆட்சியில் உலக நாடுகளுக்கு எதிராக எந்த சதியும் நடந்துவிடவில்லை என்று கூறமுடியாது. இந்த நிலையில் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் குடியரசுக்கட்சியின் சார்பாக அமெரிக்காவின் 41வது அதிபரான ஜார்ஜ் எச்.டபுள்யூ புஷ்ஷின் இளைய மகனும், 43வது அதிபரான ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் இளைய சகோதரருமான ஜெஃப் புஷ் போட்டியிட உள்ளதாக ஊடகங்கள் செய்திகளை கசியவிட்டு வருகின்றன. இதில் கவனிக்க வேண்டியது, ஜெஃப் புஷ் போர் வெறி பிடித்தவரா என்பதுதான்.
அவர் தனது சகோதரரின் வெளிநாட்டு கொள்கையை பின்பற்ற மாட்டார் என கூறப்பட்டாலும், அவர் தனது ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பெயர் ஜனநாயக வாதிகளை குலைநடுங்க வைக்கிறது. ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் வெளியுறவுக் கொள்கை ஆலோசனை குழுவில் இடம் பெற்றிருந்த 21 நபர்களில் 17 பேரை ஜெஃப் புஷ் தனது ஆலோசகராக நியமித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கவர்தான் உல்ஃப்போ விட்ஸ்.
யார் இந்த உல்ஃப்போ விட்ஸ்?
இவர்தான் ஈராக் போருக்கு முழுமுதல் காரணம் என முன்னணி சர்வதேச பத்திரிகையான மதர் ஜோன்ஸின் கட்டுரையாளர் டேவிட் கார்ன் குறிப்பிடுகிறார். இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு சற்றும் தொடர்பில்லாத சதாம் ஹுஸைனை அமெரிக்காவின் முதன்மை எதிரியாக சித்தரித்தது இந்த உல்ஃப்போவிட்ஸ்தான் என்கிறார் டேவிட் கார்ன். இதற்கு அவர் ஆதரமாக எடுத்துக் கொண்டது, வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர் என கூறிக்கொண்டு ஆதாரமற்ற தகவல்களை பரப்பிய லாரி மிலோரி என்ற பெண்ணின் ஆய்வுகளைத் தான்.
லாரி மிலோரி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றியவர். இவரது பல கருத்துகளை அமெரிக்க புலனாய்வுத்துறை நிராகரித்ததுடன், அவற்றை பொய் என்றும் நிரூபித்துள்ளது.தொடர்ந்து சதாம் ஹுஸைனுக்கு எதிரான கருத்தாக்கத்தை உருவாக்கி வந்த மிலோரி 1993ஆம் ஆண்டு அமெரிக்க வர்த்தக மையம் அருகே நடைபெற்ற தாக்குதல் மூலம் தனது
பிரச்சாரத்தை உக்கிரப்படுத்தினார்.
அந்த தாக்குதலுக்கு ஈராக் உளவுத்துறைதான் காரணம் என குற்றம்சாட்டினார். ஆனால் அவரது இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவின் சி.ஐ.ஏ, எஃப்.பி.ஐ. போன்ற உளவு நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்ததுடன் இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல் என தெரிவித்தன. ஆனால் மிலோரி தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.
இஸ்ரேல் தீவிர ஆதரவாளர்களான நியோகான்ஸ் எனப்படும் தீவிர வலதுசாரி சிந்தனையாளர்கள் மிலோரியின் கருத்தை தொடர்ந்து தூக்கிப் பிடித்தனர். முக்கியமாக உல்ஃப்போவிட்ஸ் மிலோரியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது, ஜான் ஹாப்கின்ஸ் பள்ளியில் சர்வதேச அரசியல் துறையின் டீனாக இருந்த உல்ஃப்போவிட்ஸ், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஈராக் விவகாரத்துறையின் மேற்பார்வையாளராக இருந்த மார்டின் இண்டிக் என்பவரை சந்தித்துள்ளார். மிலோரியின் கருத்தாக்கத்தை ஏற்க வேண்டும் என அவரை வற்புறுத்தினார்.
ஆனால் இந்த விவகாரத்தை சி.ஐ.ஏ, எஃப்.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே முடித்து விட்டனர் என அவருக்கு மார்டின் பதில் அளித்துள்ளார். இதனை கடைசி வரை உல்ஃப்போவிட்ஸ் ஏற்கவில்லை. இந்த தகவலை மார்டின் தன்னிடம் தெரிவித்ததாக பத்திரிகையாளர் டேவிட் கார்ன் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் பதிவு செய்துள்ளார். இனி மிலோரி விசயத்திற்கு வருவோம்.
1995ஆம் ஆண்டு நடைபெற்ற ஒக்லஹாமா குண்டுவெடிப்பு, 1998 ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகத் தாக்குதல், 2000ஆம் ஆண்டு யமன் கடற்கரையில் அமெரிக்க படையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என அனைத்திற்கும் காரணம் சதாம் ஹுஸைன் என குற்றம்சாட்டினார். இவை அனைத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விட சதாம் ஹுஸைனை மிகப்பெரிய எதிரியாக அமெரிக்கா கருத வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அமைந்தவை. 2000ஆம் ஆண்டில் ஒரு புத்தகத்தை மிலோரி எழுதினார். குtதஞீதூ ணிஞூ கீஞுதிஞுணஞ்ஞு: குச்ஞீஞீச்ட் ஏதண்ண்ஞுடிண’ண் க்ணஞூடிணடிண்டஞுஞீ ஙிச்ணூ அஞ்ச்டிணண்t அட்ஞுணூடிஞிச் என்பது அந்த புத்தகத்தின் பெயர். இந்த புத்தகத்தை எழுத உல்ஃப்போவிட்ஸ் உதவியதாகவும், உல்ஃப்போவிட்ஸ்-ன் மனைவி கிலோர் இதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் புத்தகத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தில்தான் சதாம் ஹுஸைன் பற்றி பல்வேறு கட்டுக்கதைகளும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், ஈராக் மீதான தனது கொள்கையை அமெரிக்கா மாற்ற வேண்டும் என்ற கருத்தாக்கமும் இடம் பெற்றன. ஜார்ஜ் டபிள்யூ புஷ் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த பிறகு உல்ஃப்போவிட்ஸ் பாதுகாப்புத்துறையில் இரண்டாவது முக்கிய இடத்தை பிடித்தார். செப்டம்பர் 11,2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரம் மீதான தாக்குதலின் போதும் அவர் பார்வை சதாம் ஹுஸைன் மீதுதான் இருந்தது.
மிலோரியின் புத்தகத்தை மறுஆய்வு செய்யுமாறு பாதுகாப்புத்துறை, உளவு நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவ்வாறு ஆய்வு செய்த போது அதில் எந்த உண்மையும் இல்லை. மேலும் மிலோரி கோட்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை மறுஆய்வு செய்யுமாறு அவர் சி.ஐ.ஏ.வையும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே தாக்குதலுக்கு பிறகு நடைபெற்ற பாதுகாப்புத்துறை உயர்மட்டக்கூட்டத்தில் ரிச்சர்டு கிளார்க் என்ற பாதுகாப்புத்துறை நிபுணர் ஒசாமா பின் லேடனையும், அல்காய்தா தலைவர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தார். ஆனால் இதனை கடுமையாக எதிர்த்த உல்ஃப்போவிட்ஸ், ஈராக் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
இதேபோல் தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த மிலோரி நிச்சயமாக ஒருநாட்டின் துணை இல்லாமல் ஒசாமா பின் லேடனால் இதுபோன்ற தாக்குதலை ஒருபோதும் நடத்தமுடியாது என ஈராக்கை நோக்கி கையை நீட்டினார். அவரது கருத்து புஷ் – சென்னி அரசை வெகுவாக கவர்ந்தது. எனவே இந்த தாக்குதலில் சதாம் ஹுஸைனுக்கு தொடர்புள்ளதா என்பது பற்றி விசாரிக்க ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டார்.
செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பேசிய உல்ஃப்போவிட்ஸ் இந்த தாக்குதலுக்கு சதாம் ஹுஸைனின் ஆதரவு இருப்பது 10 முதல் 50 சதவீதம் வரை உறுதியாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஈராக் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்மொழிந்தார். ஆப்கானிஸ்தானைவிட ஈராக் மீது போர் தொடுப்பது எளிமையான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய அடுத்தடுத்த குறிப்பாணைகள் ஈராக் மீது போர் தொடுப்பதை மையமாக கொண்டிருந்தன. ஊல்சே என்ற அதிகாரியை லண்டனுக்கு சென்று இதுதொடர்பான ஆதாரங்களை திரட்டுமாறும் உல்ஃப்போ விட்ஸ் உத்தரவிட்டார். ஆனால் ஊல்சே வெறுங்கையுடன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் திடீர் திருப்பமாக ஜார்ஜ் புஷ் ஆப்கானிஸ்தான் மீது போரை அறிவித்தார். இதனால் உல்ஃப்போவிட்ஸ் – மிலோரியின்
‘சதாம் ஹுஸைன் அனைத்திற்கும் காரணம்’ என்ற கோட்பாடு பின்னடைவை சந்தித்தது. அதே நேரம் அவர்கள் இருவரும் தங்கள் கோட்பாடுகளை கைவிடவில்லை. இதனிடையே காபூல் வீழ்ந்ததை தொடர்ந்து ஈராக் போருக்காக போர் விமானங்களை திரும்ப அழைக்குமாறு பாதுகாப்புத்துறை செயலாளர் டொனால்டு ரம்ஸ்பீல்டிற்கு புஷ் உத்தரவிட்டார்.
மார்ச் 17, 2002 ஆம் ஆண்டு பிரிட்டன் தூதருடன் மதிய உணவு உண்ட உல்ஃப்போவிட்ஸ், உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு சதாம் ஹுஸைன் காரணம் எனத் தெரிவித்தார். மறுபக்கம் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரித்த மிலோரி, சதாம் ஹுஸைன் மீதான குற்றச்சாட்டுகளை சி.ஐ.ஏ. மூடி மறைப்பதாக
குற்றம்சாட்டினார். உல்ஃப்போவிட்ஸ் இந்த கருத்தை ஆணித்தரமாக ஆதரித்தார். இதே கருத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் அவர் உலா வரச்செய்தார்.
உலக வர்த்தக மையத்தை விமானத்தை கடத்தி தகர்த்த முகமது அட்டா என்பவரை பராகுவே நாட்டில் ஈராக் உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்து பேசியதாக ஆதாரமற்ற தகவலை வெளியிட்டார். ஆனால் சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ. அதிகாரிகள் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தனர். (ஈராக்கை முழுமையாக ஆக்கிரமித்த பிறகு அட்டா-ஈராக் உளவு அதிகாரிகள் சந்திப்பு குறித்த ஆவணங்களை தேடுமாறு உல்ஃப்போவிட்ஸ் உத்தரவிட்டும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை).
இதனிடையே இரட்டை கோபுரதாக்குதலுக்கும் ஈராக்கிற்கும் தொடர்புள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லது சித்தரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு துறையை உல்ஃப்போவிட்ஸ் உருவாக்கினார். ஈராக் மீது போர் தொடுத்தால் ஏற்படும் நிலை குறித்து உல்ஃப்போ விட்ஸ் வெளியிட்ட கணிப்புகள் அனைத்தும் பொய்யானது.
போருக்கு பிறகு அங்கு பிரிவுகள் இருக்காது என்றும் எண்ணெய் வளத்தின் மூலம் நாட்டை சீரமைக்கலாம் என்பன உள்ளிட்ட அவரது எந்த மதிப்பீடும் உண்மையாகவில்லை. நிறைவேறவில்லை. இதன் காரணமாக கடும் விமர்சனத்திற்கு ஆளான உல்ஃப்போவிட்ஸ் அரசியல் மைய நீரோட்டத்தில் கலக்கவில்லை. அதே நேரம் ஜார்ஜ் புஷ் அவரை பாராட்டி ‘மெடல் ஆஃப் பிரீடம்’ என்ற பட்டத்தை அளித்து, உலக வங்கியின் தலைவராகவும் அவரை முன்மொழிந்தார்.
அவரது பதவி காலத்தில் ஊழல் நிறைந்த நிர்வாகம் நிலவியது குறிப்பிடத்தக்கது. உல்ஃப்போவிட்ஸ் மிலோரி ஆகியோர் ஏன் சதாம் ஹுஸைனுக்கு எதிராக களமிறங்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவர்கள் ஏன் தங்கள் கருத்தில் பிடிவாதமாக இருந்தார்கள்? ஆதாரமே இல்லாமல் போர் தொடுக்கும் அளவிற்கு அமெரிக்க அரசை அவர்கள் நிர்ப்பந்தித்தது எப்படி? அரசும் அதற்கு தலைவணங்கியது எப்படி? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் நம்முன் நிற்கின்றன.
தங்கள் நாட்டிற்கு அருகே பலம் வாய்ந்த ஒரு நாடு இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இஸ்ரேல் இந்த சதி செயல்களுக்கு பின்னணியில் இருந்ததா என்ற சந்தேகமும் எழுகின்றது. பொய்யான கருத்துகளை மூலதனமாக வைத்து பல லட்சம் உயிர்களை காவு வாங்கிய பெருமைகளுக்கு சொந்தக்காரரான இந்த உல்ஃப்போவிட்ஸ்தான் தற்போது அதிபர் வேட்பாளராக கருதப்படும் ஜெஃப் புஷ்ஷிற்கு முக்கிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெஃப் புஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரது வெளிநாட்டு கொள்கை எப்படி இருக்கும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
You must be logged in to post a comment.