முஸ்லிம் – கம்யூனிஸ்ட் – கறுப்பர் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் மால்கம் X?

மால்கம் X – ஓர் எளிய அறிமுகம்

அமெரிக்க சேரி ஒன்றில், கறுப்பின தம்பதிகளுக்குப் பிறந்த (1925) மால்கம் லிட்டில் என்ற சிறுவனின் கனவு, அந்தத் தேசத்துக்கே உரிய இனவெறியால் கசக்கி எறியப்படுகிறது.

வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்த மால்கம் லிட்டில் வழக்கறிஞராக வேண்டும் என்ற தன் ஆவலை, ஆசிரியரிடம் கூற, ஒரு கறுப்பனுக்கு எந்த அளவுக்கு கல்வி முக்கியமோ அந்த அளவுக்கு நீ படித்து முன்னேறினால் போதுமானது என்ற தொனியில், நீ ஏன் ஒரு தச்சனாக கூடாது என கேட்கிறார் ஆசிரியர். அப்போது முதல் அமெரிக்க சமூகத்தின் மற்றுமொரு அழுக்காக மாறுகிறார் மால்கம் லிட்டில்.

8-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திய மால்கம் லிட்டில், தெருப் பொறுக்கியாக திரிந்து மதுவுக்கு அடிமையாகி, போதைப் பொருட்களை விற்பனை செய்து, அடியாளாக உயர்ந்து, ரவுடியாக வலம் வந்து போலீஸின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பயந்து, தலைமறைவாகி, இறுதியில் வெள்ளைக்காரப் பெண்களின் சகவாசத்தோடு வயிற்றுப் பிழைப்புக்கு வீடுகளில் திருடி இறுதியில் போலீஸில் சிக்குகிறான்.

திருட்டுக் குற்றத்துக்கு தண்டனை வழங்குவதை விட, வெள்ளைப் பெண்களுடன் எப்படி பழகலாம் என கோபப்பட்ட வெள்ளையின நீதிபதிகள் மால்கம் லிட்டிலை சிறையில் தள்ளுகின்றனர்.

21 வயதில் சிறைக்குச் சென்ற மால்கம் லிட்டிலுக்கு இஸ்லாம் அறிமுகமாகிறது. கறுப்பர்களின் விடுதலைக்கு இஸ்லாம் ஒன்றே வழி என போதித்த நேஷன் ஆஃப் இஸ்லாம் என்ற அமைப்பின் மூலம் சிறையில் வைத்தே முஸ்லிமான மால்கம் லிட்டில், அனைத்து கெட்ட பழக்கங்களில் இருந்தும் விடுபட்டு புது மனிதனாக உருவெடுக்கிறார்.

பாதியில் நின்று போன கல்வியை சிறையிலேயே கற்கிறார். அங்குள்ள நூலகங்களில் உள்ள புத்தகங்களை தீவிரமாக வாசிக்கிறார். சிறை வளாகத்தில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்று ஒரு பேச்சாளனாகவும் தன்னை தகவமைத்துக் கொள்கிறார்.

27 வயதில் சிறையிலிருந்து விடுதலையான மால்கம் லிட்டில் (ஆகஸ்ட் 7, 1952) நேசன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் வழிகாட்டுதலின்படி தன்னுடைய பெயரை மால்கம் X என மாற்றிக் கொள்கிறார். தீவிர செயற்பாட்டாளராக மாறும் மால்கம் X, அமெரிக்க கறுப்பர்கள் மத்தியில் இஸ்லாமிய அழைப்புப் பணியை விரைவுபடுத்துகிறார்.

1952 வாக்கில், நேசன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் வெறும் நூற்றுக் கணக்கான உறுப்பினர்களே இருந்தனர். அதுவும் வயதான கறுப்பர்கள்தான். அந்த அமைப்புக்கென நான்கு பள்ளிவாசல்களே செயல்பாட்டில் இருந்தன. பத்து பள்ளிவாசல்கள் பெயரளவுக்கு இருந்தன.

மால்கம் X தன்னுடைய பேச்சாற்றலால், இளைஞர்களைக் கவர்ந்திழுத்து, இயக்கத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறார். அனல் தெறிக்கும் அர்த்தப்பூர்வமான உரைவீச்சுக்களால், தானே ஓர் இயக்கமாக மாறி, கறுப்பர்களின் போர்க்குரலை அமெரிக்க அரங்கில் ஒலிக்கச் செய்கிறார். நான்கே ஆண்டுகளில் 22 மாகாணங்களில் ஐம்பது பள்ளிவாசல்களை உருவாக்கி ஆற்றல் படைத்த தலைவராக உருவெடுத்தார் மால்கம் X.

மால்கம் X முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, அந்நாட்டின் அதிபர் கென்னடியே பதில் அளிக்கும் அளவுக்கு அரசியலிலும் கோலோச்சி, கறுப்பர்களின் ஒட்டுமொத்த குரலாக மாறுகிறார் மால்கம் X.

அந்த அமைப்பின் தலைவரின் பாலியல் முறைகேடுகளை அறிந்த மால்கம் X, நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பிலிருந்து வெளியேறுகிறார். முஸ்லிம் பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்குகிறார்.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார். ஹஜ் பயணத்தில் மால்கம் X-ன் ஒட்டுமொத்த அரசியல் பார்வையும் மாறுகிறது. அதுவரை வெள்ளையர்களை ‘பிசாசு’ என வர்ணித்து வந்ததோடு, வெள்ளையர்களை விட்டு கறுப்பர்கள் விலகி தனி தேசமாக உருவாக வேண்டும் என பிரிவினை பேசி வந்தார். ஆனால் புனித ஹஜ் பயணத்திற்குப் பின்பு, வெள்ளையர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அமெரிக்க இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என பிரச்சாரம் செய்தார்.

அரசியல் களத்தில் அனைத்து கறுப்பர்களையும் உள்ளடக்கிய போராட்டத்தை முன்னெடுக்கவே அவர் விரும்பினார். அப்படியே இறுதி வரை செயல்பட்டார். அதற்காகத்தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.

இஸ்லாமியப் போராளி?

மால்கம் X ஓர் இஸ்லாமியப் புரட்சியாளர் என சிலரால் சிலாகிக்கப்படுகிறார். இந்தக் கருத்தை சிலர் மறுத்து, அவரை ஒரு வட்டத்துக்குள் சுருக்க முடியாது, கூடாது என வாதிடுகின்றனர்.

மால்கம் X சிறந்த பேச்சாளர். புகழ்பெற்ற அவரது உரைகளில் மிக மிக முக்கியமானதாக கருதப்படும், ‘வாக்கு அல்லது வேட்டு’ (The Ballot or the Bullet) என்ற தலைப்பிலான உரையில், இஸ்லாத்தை தன் சொந்த வாழ்க்கையின் பகுதியாக குறிப்பிட்டுவிட்டு, அனைத்து கறுப்பர்களுக்குமான போராளி என்று தன்னை முன்னிலைப்படுத்தினார் மால்கம் X.

நான் ஒரு முஸ்லிம். என்னுடைய மதம் இஸ்லாம். பல்வேறு தேவலாயங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ மத ஊழியம் செய்பவர்கள் இங்கு வந்திருந்தாலும், அவர்கள் கிறிஸ்தவ மத ஊழியர்கள் என்பதற்காகவே இங்கு குழுமவில்லை. இவர்கள் அனைவரும் குடியுரிமைப் போராளிகள். இவர்களைப் போல நானும் இஸ்லாமிய மத ஊழியம் செய்யக்கூடியவன்தான், எனினும் நானும் கறுப்பின தேசியவாத விடுதலைப் போராட்ட வீரன்தான்.

ஒற்றை முனையில் இருந்து மட்டுமல்ல, அனைத்து தளங்களிலும் போராட வேண்டும் என்பதை நம்புகிறேன். இஸ்லாம் என்னுடைய மதமாக இருந்தாலும், அதனை என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கையாகத்தான் பார்க்கிறேன். இங்கு வந்திருக்கக்கூடியவர்களின் மத நம்பிக்கை அவர்களுக்கும் அவர்கள் நம்பக்கூடிய கடவுளுக்கும் இடையிலானதைப் போலவே, என்னுடைய மத நம்பிக்கையும் எனக்கும் நான் நம்பக்கூடிய கடவுளுக்கும் இடையிலானது. நாங்கள் மதம் குறித்து உரையாடத் தொடங்கினால், எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாங்கள் ஒன்றிணைய முடியாது.

என்னுடைய மத நம்பிக்கை இஸ்லாம். என்னுடைய அரசியல், சமூக, பொருளாதார தத்துவம் என்பது கறுப்பின தேசியவாதமாகும். நாங்கள் மதம் குறித்து பேசினால், முரண்பாடுகள்தான் மிஞ்சும். ஒன்றுபட முடியாது.

ஆனால், நாம் நம்முடைய மத நம்பிக்கைகளை தனிப்பட்ட விஷயமாக வைத்து விட்டு, நம்முடைய பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரண்டால் நம்மை நாமே சகோதரர்களாக பாவித்துக் கொள்ள முடியும்.

நாம் மதத்தை முன்னிறுத்தினால் அது விவாதங்களையே முன்னிறுத்தும். விவாதங்களையும் வேறுபாடுகளையும் களைய சிறந்த வழி, நம்முடைய மத நம்பிக்கைகளை வீடுகளுக்குள் வைத்திருப்பதுதான்… உங்களுக்கும் உங்கள் கடவுளுக்கும் இடையில் வைத்திருப்பதுதான்…

சிவப்பு வண்ணத்தில் மால்கம் X

அமெரிக்க அரசு மால்கமை ஒரு கம்யூனிஸ்ட் என்றே சந்தேகித்தது. அவர் அங்கம் வகித்த நேசன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு, அரசியல் போராட்டங்களில் எதிலும் பங்கெடுத்தது கிடையாது. மட்டுமல்ல, தேர்தலில் வாக்களிப்பது கூட கறுப்பர்களுக்கு எந்த பலனையும் பெற்றுத் தந்துவிடாது என பிரச்சாரம் செய்தது.

ஆனால், ஒரு கம்யூனிஸ்ட்டுக்கே உரிய போர்க்குணத்தோடு, மால்கம் செயல்பட்டார். கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போலவே அரசை எதிர்த்து முழங்கினார்.

இதையெல்லாம் தாண்டி, மால்கம் ஒரு ‘சிவப்பு அபாயம்’தான் என FBI முற்று முழுதாக சந்தேகப்பட காரணம், அப்போது உலகின் எதிரியாக அமெரிக்காவால் வர்ணிக்கப்பட்ட கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஐநா-வில் அவையில் உரையாற்ற அமெரிக்கா வந்திருந்த போது, அவர் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகம் முறையான காரணம் இன்றி வெளியேற்றியது.

மால்கம் X தன்னுடைய சொந்த பாதுகாப்பில், ஹார்லெம் சேரியில் கறுப்பர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ஹோட்டலில் ஃபிடல் காஸ்ட்ரோவை தங்க வைக்கிறார். இது அமெரிக்க அரசுக்கு பெருத்த அவமானமாகி விட்டது.

இந்த நிகழ்வின் அடிப்படையில், மால்கம் X ஒரு கம்யூனிஸ்ட்தான் என வர்ணிப்பவர்களும் உண்டு.

தன்னுடைய விரிவான வாசிப்பு அனுபவத்தால் மால்கம் X மார்க்சிய சித்தாந்தத்தை உள்வாங்கி இருந்தார். லெனின் குறிப்பிட்டுச் சொல்லும் புரட்சிகரவாதியாக மால்கம் இருந்தார் என்றுகூடச் சொல்லலாம். முதல் உலகப் போர் காலகட்டத்தில் லெனின் எழுதிய கட்டுரையில் குறிப்பிடும் புரட்சிகரவாதியின் இலக்கணத்துக்கு ஒப்ப வாழ்ந்தார் மால்கம்.

1) சமூக தேசிய வெறியர் (Social Chauvinist) – தாய் நாட்டின் பாதுகாப்பு, தேசிய பெருமை, தேச நலன் இதைப் பற்றி கவலை கொள்பவர். இதன் வழியாக முதலாளி வர்க்கத்தில் சேர்ந்து விட்டவர்கள் சமூக தேசிய வெறியர்கள்.

2) நடுநிலைவாதிகள் (Centre) – சமூக தேசிய வெறியர்களுக்கும் உண்மையான சர்வதேசியவாதிகளுக்கும் இடையில் ஊடாடுபவர்கள். இவர்கள் தொழிலாளி வர்க்கத்திற்குள் இருக்கும் முதலாளியவாதிகள்.

லெனின் குறிப்பிடும் இந்த இரண்டு வகையிலும் சேராத உண்மையான புரட்சியாளராக இருந்தார் மால்கம்.

மால்கம் X உரைகளில் மற்றொரு பிரபலமான உரையான ‘இளம் தலைவர்களுக்கு எனது தூது’ (A Message to the Grass Roots) என்ற தலைப்பில் பேசும் போது,

புரட்சி என்பது இரத்தம் சிந்துவது. புரட்சி என்பது பகை முடிப்பது. புரட்சி என்பது சமரசமில்லாதது. தன்னுடைய வழியில் எதிர்ப்படும் அனைத்தையும் அழித்து புரட்டிப் போடுவதுதான் புரட்சி.

என்று குறிப்பிட்டார்.

அதேசமயம், வர்க்கப் பார்வையிலும் அவர் வேறொரு கோணம் கொண்டிருந்தார். அதனை மார்க்சியர்கள் ஏற்றுக் கொள்வார்களா எனத் தெரியவில்லை. வெள்ளையர்களிடம் அடிமையாக இருந்த கறுப்பின தொழிலாளர்களையே அவர் இரண்டு பிரிவினராக பிரித்தார். ‘அங்கிள் டாம்’ என்ற அழைக்கப்பட்ட வெள்ளையர்களின் வீடுகளில் வேலை பார்த்த கறுப்பர்களை (மனை நீக்ரோ – Home Negro) ஒரு பிரிவாகவும் நிலத்தில் உழுத கறுப்பர்களை (பண்ணை நீக்ரோ – Field Negro) மற்றொரு பிரிவாகவும் வரையறை செய்தார். நிலத்தை உழுத கறுப்பர்களை-பண்ணை நீக்ரோக்களை, மனை நீக்ரோக்களான அங்கிள் டாம்கள் வெறுத்தனர். பண்ணை நீக்ரோக்கள விட தாங்கள் உயர்ந்தவர்கள் என மனை நீக்ரோக்கள் கருதினர்.

கறுப்பின தேசியவாதியா?

மால்கம் X தன்னை ஒரு கறுப்பின தேசியவாதியாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். கறுப்பினம் என்பதை வெறும் ‘நீக்ரோ’ அல்லது ‘ஆஃப்ரிக்கர்’ என்ற புரிதலில் தட்டையாக முன்வைக்கவில்லை.

‘வெள்ளையர் அல்லாத’ ‘மேற்கின் அடக்குமுறை சிந்தனை இல்லாத’ மக்கள் திரள் என்பதாகவே தன்னுடைய கறுப்பின தேசியவாதத்தை அவர் முன் வைத்தார்.

‘வெள்ளை’ நிறம் என்பதற்காக மட்டும் அவர் அமெரிக்க வெள்ளையர்களை எதிர்க்கவில்லை.

ஜப்பானைச் சேர்ந்த வெள்ளை நிறம் கொண்ட யூரி கொச்சியாமா என்ற பெண், மால்கமின் இயக்கத்தில் தீவிரமாக களமாடினார்.

அடக்குமுறை, சுரண்டல் – இரண்டிற்கு எதிராகவுமே மால்கமின் குரல் ஓங்கி ஒலித்தது. எந்த இன மக்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ அல்ல.

உலகின் எந்த மூலையில் அடக்குமுறை, சுரண்டலுக்கு எதிராக யார் ஒருவன் முஷ்டியை உயர்த்திகிறானோ அவனைப் பிரதிந்தித்துவப்படுத்துகிறார் மால்கம்..

அவருடைய பிறந்த நாளில் அவரின் தீரத்தை நெஞ்சில் ஏந்துவோம்