சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 72 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2015 முதல் 2019 வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு தெரிய வந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் இந்த தகவல்களை தெரிவித்தது.
2019ஆம் ஆண்டில் நாடு முழுவதும் யுஏபிஏ சட்டத்தின் கீழ் 1226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1948 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015 முதல் 2018 வரை முறையே 897, 922, 901 மற்றும் 1182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1128, 999, 1554 மற்றும் 1421 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2019இல் மணிப்பூரில் அதிகப்படியாக 306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிர்ச்சியளிக்கும் வகையில் 270 வழக்குகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜம்மு கஷ்மீரில் 255 வழக்குகளும் ஜார்கண்டில் 105 வழக்குகளும் அஸ்ஸாமில் 87 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் அதிகப்படியாக 498 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மணிப்பூரில் 386 நபர்களும் தமிழகத்தில் 308 நபர்களும் ஜம்மு கஷ்மீரில் 227 நபர்களும் ஜார்கண்டில் 202 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 180 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதால் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு பிணை கிடைப்பது கடினமாகவே இருக்கிறது.
பொதுவாக ஆட்சியாளர்கள் தங்களின் அரசியல் எதிரிகளையும் தங்களை எதிர்ப்பவர்களையும் மிரட்டுவதற்கு இச்சட்டத்தை பயன்படுத்துவதால் இக்கருப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை சமீப ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் வேளாண் மசோதாகளை எதிர்த்து போராடிய மற்றும் போராடி வரும் மக்கள் மீது அரசாங்கம் யுஏபிஏ சட்டத்தை பிரயோகித்து வருகிறது. யுஏபிஏ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதும் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை வலுப்படுத்துகிறது.
2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் வெறும் 2.2 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தது. குஜராத்தில் சில நாட்களுக்கு முன் யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நூற்றுக்கும் அதிகமான நபர்கள் 21 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.