ரமலான் சிந்தனைகள்: நோன்பு ஒரு ஆன்மீகப் போராட்டம்

 – செய்யது அலீ

ஆன்மீக வளர்ச்சிக்கு சிறப்பானதொரு ஏற்பாட்டை நிச்சயித்த வாழ்வியல் நெறியே இஸ்லாம். அதில் முக்கியமானது ஐந்து நேர தொழுகையாகும்.அன்றாட வாழ்க்கையின் ஒழுக்கம் தொழுகையின் மூலம் முறைப்படுத்தப்படுகிறது. ரப்பும், மலிக்கும், இலாஹுமான(அல்குர்ஆன் :114) இறைவனுடன் அடியான் தனிப்பட்ட ரீதியில் நடத்தும் உரையாடலே தொழுகை.அது, அகிலங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் ரப்புல் ஆலமீனுக்கு சமர்ப்பிக்கப்படும் புகழுரையாகும்.

‘என்னை நினைவு கூர்வதற்காக தொழுங்கள்’ என்று புனித துவா பள்ளத்தாக்கில் வைத்து அல்லாஹ், மூஸா நபி(அலை) அவர்களுக்கு கட்டளையிட்டான்.

நிச்சயமாக நான்தான் அல்லாஹ்!என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. (அல்குர்ஆன் 20:14)

அல்லாஹ்வை குறித்த நினைவு வாழ்க்கையை வடிவமைக் இரண்டு முறையில் குர்ஆன் இந்த வடிவமைப்பைக் குறித்து கூறுகிறது.முதலாவது,ஒரு மனிதனின் வணக்கங்களை(இபாதத்) அடிப்படையற்ற பாரம்பரியங்களில் இருந்து விடுவித்து இறைமார்க்கத்தில் நிறுவுவதும், பொருளாதார ஒழுக்கத்தை முறைப்படுத்துவதுமாகும்.இதுகுறித்து குர்ஆன் கூறுகிறது:

ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படி செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது? (அல்குர்ஆன் 11:87)

இரண்டாவது, அனைத்து தீமைகள், மானக்கேடான செயல்களை விட்டும் தடுப்பது.

நிச்சயமாக தொழுகை (மனிதர்களை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.(அல்குர்ஆன் 29:45)

அதாவது சிலவற்றை ஏவுவதற்கும், சிலவற்றை தடுப்பதற்கும் சக்தி பெற்ற ஆன்மீக அதிகார மையமே தொழுகை என்பதை திருக்குர்ஆன் நமக்கு கற்பிக்கிறது.அதுதான் திக்ருல்லாஹ்வின் உட்பொருள்.

மிகவும், வெகுஜனமயமாக்கப்பட்ட அன்றாட வாழ்வில் ஐந்து முறை கட்டாயமாகவும், அது தவிர உபரியாகவும் (நஃபில்) நிறைவேற்ற பணிக்கப்பட்டுள்ள  தொழுகையை வணக்கங்களின் தலைமை பீடம் என்று அழைக்கலாம்.

தொழுகைக்கு அடுத்து நமது வணக்க வழிபாடுகளின் மிகவும் தீவிரமான அனுபவமே நோன்பு. தொழுகையின் சிறப்பு அதன் தொடர்ச்சியான நிலையாகும்.உடலையும், உள்ளத்தையும் ‘திக்ருல்லாஹ்’வில் கட்டிப் போடும் சக்தி நோன்புக்கு உண்டு.அந்த சக்தியை திருக்குர்ஆன் ‘தக்வா’ என்று கூறுகிறது.

குர்ஆன் இறையச்சமுடையோருக்கு வழிகாட்டும் (அல்பகரா:2), இபாதத் ஒருவரை இறையச்சமுடையோராக மாற்றும் (அல்பகரா:21), நோன்பு ஒருவரை இறையச்சமுடையோராக மாற்றும் (அல்பகரா:183). குர்ஆன், இபாதத், நோன்பு இவை ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. மூன்றின் நோக்கமும் இறையச்சமுடையவர்களை உருவாக்குவதே. குர்ஆனுக்கும், இபாதத்திற்கும் இடையேயான உறவு என்ன? இபாதத் என்றால் என்ன? என்பதற்கான விளக்கமே குர்ஆன்.

குர்ஆனின் கூற்றின்படி வாழ்க்கையை அல்லாஹ்வுக்கு அர்ப்பணிப்பதே இபாதத்.அல்லாஹ்வின் முன்னால் சுஜூத் செய்வதும், அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆதமுக்கு சுஜூது செய்வதும் அல்லாஹ்விற்கு செய்யும் இபாதத். ஜும்ஆ தினமான வெள்ளிக்கிழமையன்று வியாபார ஸ்தாபனங்கள், விவசாய நிலங்கள், கல்வி சாலைகள், தொழிற் கூடங்களில் இருந்தெல்லாம் வெளியேறி மஸ்ஜிதுக்கு வருவது அல்லாஹ்விற்கு செய்யும் இபாதத்.

அதைப் போலவே வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி விட்டு வியாபார ஸ்தாபனங்கள், விவசாய நிலங்கள், கல்வி சாலைகள், தொழிற்கூடங்களுக்கு சென்று மீண்டும் தமது பணியை தொடருவதும் அல்லாஹ்விற்கு செய்யும் இபாதத்தே. வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் தொடும் இந்த இபாதத்திற்கு நம்மை தகுதியுடையவர்களாக மாற்றுகிறது குர்ஆன். அந்த குர்ஆனை மனிதனுக்கு அளிப்பதற்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதமே ரமலான். குர்ஆன், வானிலிருந்து பூமிக்கு அருளப்பட்ட மாதம் என்பதாலேயே ரமலானில் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது.

ரமலான், அல்குர்ஆனின் மாதம்.ரமலானில் நோன்பு என்பது குர்ஆனிய வாழ்க்கையை பயிற்றுவிப்பதற்கான ஆன்மீக நிகழ்ச்சி.அதாவது வாழ்க்கையை முழுவதும் இபாதத்தாக மாற்றுவதற்கான பயிற்சி.குர்ஆனின் மூலம், இபாதத்தின் ஊடே, நோன்பின் மூலம் மனிதன் அடையும் உன்னத பதவியே ’முத்தக்கீன் (இறையச்சமுடையவர்)’.

யார் முத்தக்கீன்? என்று கேள்வி எழுப்பினால், வாழ்க்கையை அல்லாஹ்விற்கு சமர்ப்பணம் செய்தவர் என்பதே சரியான விடை. அல்லாஹ்விற்கு என்னை சமர்ப்பணம் செய்ய நான் தயார்’ என்பதை ஒரு மாத கால வாழ்க்கையின் மூலம் நோன்பாளி பிரகடனப்படுத்துகிறார். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு ஏற்ப வாழ நான் தயார்’ என்பதுதான் நோன்பின் பிரகடனம்.ஹலால்-ஹராம்களை தீர்மானிக்கும் அல்லாஹ்வின் அதிகாரத்தை நோன்பாளி உயர்த்திப் பிடிக்கிறார்.அந்த அதிகாரத்திற்கு ஏற்ப வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதே தக்வா.

‘ஃபஜ்ர் முதல் சூரியன் மறையும் வரை நான் நீர் அருந்தமாட்டேன்! உணவு சாப்பிடமாட்டேன்! உடலுறவில் ஈடுபட மாட்டேன்’ – ஏன்? அல்லாஹ் எனக்கு அவற்றை தடைச் செய்திருக்கிறான்.ஆகையால் நான் அவற்றையெல்லாம் செய்யமாட்டேன். அல்லாஹ் தடை செய்தவை மட்டுமே தடுக்கப்பட்டவை என்பதை அங்கீகரிக்கும் மனரீதியான பக்குவமே தக்வா. அல்லாஹ் அனுமதித்தவை மட்டுமே எனது விருப்பத்திற்குரியவை என்ற நிலைப்பாடே தக்வா.

சூரியன் மறைந்துவிட்டால் என்னால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.உணவு சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற தனது பலகீனத்தை வெளிப்படுத்தும் முகமாக நோன்பை திறப்பதற்காக அவசரப்படுகிறானே அவனே இறைவனின் விருப்பத்திற்குரியவன்.அதுவல்லாமல், சூரியன் மறைந்த பிறகும் எனக்கு நோன்பு இருப்பதற்கான உடல் ஆரோக்கியம் இருக்கிறது.ஆகையால், இன்னும் சற்றும் நேரம் கழித்து நோன்பை திறக்கலாம் என்ற எண்ணமோ, செய்கையோ தக்வா அல்ல.

நோன்பு ஆன்மீகரீதியான போராட்டம்.ஆன்மீக போராட்டத்தில் வெற்றி பெறுவதே இதர போராட்டங்களிலெல்லாம் வெற்றியை உறுதி செய்வதற்கான அத்தியாவசியமான முன் நிபந்தனை.நோன்பு நோற்று முத்தக்கீனாக மாறியவரின் செயல்திட்டம், அடுத்த நோன்பு வரை காத்திருப்பது அல்ல.தொடர் முயற்சியின் ஊடே வாழ்க்கை என்ற போராட்ட களத்தில் தீவிரமாக களமிறங்கி செயலாற்றி முன்னேறுவதாகும்.

போராட்டக்களத்தில் நாம் பல்வேறு சவால்களை எதிர் கொள்கிறோம். சவால்களை எழுப்புவோரெல்லாம் நம்மை அடிமைப்படுத்த அழைப்பு விடுக்கின்றார்கள்.  அப்பொழுதெல்லாம் ‘அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அடிபணிய மாட்டேன்’ என்ற உறுதியை நமது உள்ளங்களில் ஏற்படுத்துவதே நோன்பு.

சர்வதேச முதலாளித்துவ சக்திகள், மத புரோகிதம், இந்துத்துவா பாசிச சக்திகள், ஊடக ஆதிக்க சக்திகள் நம்மை அடிமைப்படுத்த

முயற்சிக்கின்றனர். உலகியல் பேராசைக்கு அடிமையான நமது உடல் நம்மை அடிமைப்படுத்த காத்திருக்கிறது. வணிக – நுகர்வு லாபிகள் ஆடம்பர, ஆரவாரங்களின் மூலம் நம்மை அடிபணிய வைக்க முயற்சிக்கின்றனர். பல்வேறு சவால்களால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கை என்ற போராட்டக் களத்தில் சஞ்சலமில்லாமல் உறுதியாக நிற்க வேண்டும் என்ற புரட்சிகரமான லட்சியத்தை நோன்பு பிரகடனப்படுத்துகிறது.

திலாவத்துல் குர்ஆனின் சுவையை உணருவோம்!

திலாவத்துல் குர்ஆன் – குர்ஆனை ஓதுவது ரமலானில் முக்கியமான நற்செயலாகும்.அல்ஃபாத்திஹாவில் துவங்கி, அந்நாஸில் முடிவுறும் குர்ஆன் ஊடேயான புனித பயணமே திலாவத்துல் குர்ஆன்! இறைவனின் வசனங்கள் மனித மொழியில் மாற்றம் செய்யப்படும் அசாதாரணமான ஒரு ஆன்மீக அனுபவம் திலாவத்துல் குர்ஆன். திலாவத் என்பது நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ் ஒப்படைத்த லட்சியப் பணியின் பெயராகும். அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக் காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். (அல்குர்ஆன் 62:2)

திலாவத்(வாசித்தல்), தஸ்கியத்(பரிசுத்தப்படுத்துதல்), தஃலிம்(கற்பித்தல்)  இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய லட்சியம் என்று மேற்கண்ட இறைவசனம் நமக்கு போதிக்கிறது. ரமலானில் திலாவத்துல் குர்ஆன் நம்மை பரிசுத்தப்படுத்தி, பிறருக்கு கற்பிக்கும் லட்சியப் பணிக்கு நம்மை தயார்படுத்தும் வணக்கமாக மாறவேண்டும்.

நடைமுறையில் நம்மில் பலரும் ரமலானில் குர்ஆனை அதிகமாக ஓதி வருகிறோம். ஆனால், அல்லாஹ் கூறுகின்ற திலாவத்தும், நாம் ஓதுவதும் ஒரே ரீதியானதா? இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. நமது உதடுகள் அசைகின்றதே தவிர திலாவத் மூலம் நம்மையும், பிறரையும் பரிசுத்தப்படுத்துவதையோ, பிறருக்கு கற்பிப்பதையோ  காண முடியவில்லை.

குர்ஆன் ஓதுவதால் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் கிடைக்கலாம்.  ஆனால், திலாவத்தின் முழுமையான பலனை நாம் அடைய வேண்டுமெனில் சமூகத்தை பரிசுத்தப்படுத்தும் லட்சியப்பணியை நாம் ஏற்றெடுத்தாக வேண்டும்.குர்ஆனையும்,குர்ஆனில் இருந்து  பெறுகின்ற ஞானத்தையும் பிறருக்கு கற்பிக்கின்ற ஆசிரியராக ஒரு செயல்வீரரை தயார்படுத்தும் அனுஷ்டானமே திலாவத்துல் குர்ஆன்.

அபூ அப்துர் ரஹ்மான் அஸ் ஸுலாமி என்ற தாபியீ அறிவிக்கிறார்:

உஸ்மான் இப்னு மஸ்ஊத்(ரலி)  போன்ற எங்களுக்கு குர்ஆனை ஓதித் தந்தவர்கள் கீழ்வருமாறு கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து பத்து வசனங்களை படித்தால் அதில் இருக்கும் அறிவு, செயல் என்பவற்றை படிக்காமல் அடுத்த பகுதிக்கு செல்ல மாட்டோம். இவ்வாறு நாம் அறிவையும், செயலையும் ஒன்றாகப் படித்துக் கொண்டோம்”.(நூல்: தப்ஸீர் தபரீ)

திலாவத்தை (வாசிப்பதை), ததப்புரோடு (ஆழ்ந்து சிந்தித்தல்) நிறைவேற்றினாலே லட்சியத்தை அடைய முடியும். அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் (அல்குர்ஆன் 4:82).

வாசிப்பும், ஆழ்ந்து சிந்தித்தலும் ஒன்றிணையும் போதே குர்ஆனின் ஆழமான கருத்துகளும், வசனங்களுக்கும், அத்தியாயங்களுக்கும் இடையேயான தொடர்புகளும் நமது சிந்தனைக்கு எட்டும்.

ததப்புர் என்றால் குர்ஆனின் முன்னால் நமது இதயத்தை திறப்பதாகும்.முஃமின்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள பொறுப்பு குர்ஆனின் முன்னால் இதயத்தை திறந்து வைக்க வேண்டும் என்பதாகும். மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம். அவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (அல்குர்ஆன் 38:29)

ஆகையால் ரமலானில் திலாவத்துடன் குர்ஆனை ஆழமாக சிந்தித்து, நம்மை பரிசுத்தப்படுத்தி, சமூகத்தை பரிசுத்தப்படுத்தவும், கற்பிக்கவும் நம்மை தயார் செய்வோம்.

நீங்கள் வேதத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள் (அல்குர்ஆன் 3:79)

இரவுத்தொழுகை ரமலானின் அலங்காரம்!

திலாவத்துல் குர்ஆன் நோன்பின் இனிமையை உணரவைக்கும் என்றால், இரவுத்தொழுகை (கியாமுல் லைல்) ரமலானின் அலங்காரமாகும். நீண்ட நேரம் குர்ஆனை ஓதுவது கியாமுல் லைலின் சிறப்பு. ருகூவுகள், சுஜூதுகளின் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் நெருக்கத்தை அனுபவிக்கும் அபூர்வமான சந்தர்ப்பமே ரமலான் காலத்தின் இரவுத் தொழுகை.தனியாகவோ, மஸ்ஜிதில் கூட்டாகவோ அதனை நிறைவேற்ற வேண்டும். பிந்திய இரவு தொழுவது கூடுதலாக உளப்பூர்வமான அனுபவத்தை தரும்.

அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்பு கோரிக் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 51:17,18)

நன்மைகள் பூத்துக் குலுங்கட்டும்!

ரமலான் நன்மைகளின் வசந்த காலம். ஐவேளை தொழுகையை மஸ்ஜிதில் கூட்டாக நிறைவேற்ற நாம் உறுதி பூணுவோம். ஒரு நோன்பைக் கூட விடுவிடக்கூடாது. அல்லாஹ் சலுகை அளித்தவர்கள் மட்டுமே நோன்பை விடலாம்.எக்காரணமுமின்றி ரமலானில் நோன்பை விட்டால் அதற்கு பகரமாக ஒரு ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றாலும் ஈடாகாது.

ஸதக்காவை (தான தர்மங்களை) நிறைவேற்றுவதற்கு ரமலான் நல்ல அறுவடைக்காலம். பரஸ்பர உறவுகளை உறுதிப் படுத்திடும் இஃப்தார்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், வீண் விரயங்களை தவிர்த்திடவேண்டும். பெருமைக்காகவும், ஏழைகளை புறக்கணித்தும் நடத்தும் இஃப்தார்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவை அல்ல. அவை புறக்கணிக்கப்பட வேண்டும். ரமலானின் புண்ணியத்தை  ஆடம்பர  உணவுகளும்,  தடபுடலான சமையலும்

கெடுத்துவிட வேண்டாம். கூடுதலான நேரத்தை திக்ரு, துஆ, குர்ஆன் திலாவத்தில் செலவிட வேண்டும்.

‘இக்ரஃ’ (வாசிப்பீராக)’ என்ற இறைவசனம் இறக்கியருளப்பட்ட ரமலானில் நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும். பிரார்த்தனை ஒரு முஸ்லிமின் ஆயுதம்.ஆன்மீக புரட்சிக்கு மிகவும் கூர்மையான ஆயுதம். நாம், நமது பெற்றோர், மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களோடு அண்டை, அயலார், நமது நாட்டிலும், உலகெங்கிலும் பாதிக்கப்படும் மக்கள், அகதிகள், விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்கள், ஏழைகள், போராளிகள் என அனைவருடைய நலனையும் நமது பிரார்த்தனையில் உட்படுத்த வேண்டும்.

ரமலானின் ஒவ்வொரு நிமிடமும் விலை மதிக்கமுடியாதது. ஆகையால், அதனை சிறிதளவுகூட இழக்காமல் வணக்கங்களால் அதனை வளப்படுத்துவோம்! நம் அனைவருக்கும் ரமலானை அடைவதற்கும், அதன் பாக்கியங்களை பெறுவதற்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

(ஜூன் 2015 இதழில் வெளியான கட்டுரை)