ரமலான் நோன்பை தடை செய்த சீன அரசு

சீனாவில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக் கூடிய பகுதியான சிங்சியாங் பகுதியில் அரசு அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் நோன்பிருக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த செய்தி ஆளும் கம்மியுனிச அரசின் அதிகாரப்பூரவ இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில், “கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், மற்றும் சிறுவர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட கூடாது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாள 10 மில்லியன் முஸ்லிம் மக்கள் வசிக்கக்கூடிய அப்பகுதியில் உணவகங்கள் திறந்திருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. இப்பகுதியில் அவ்வப்போது அரசு படையினருக்கும் உய்கூர் இன மக்களுக்கும் மோதல் வெடித்து வருவது வழக்கம். இந்த மோதலுக்கு மத சிறுபான்மையினர் மீது திணிக்கப்படும் வழிபாட்டு கட்டுப்பாடுகள் தான் காரணம் என்று மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இப்பகுதியில் முஸ்லிம்கள் நோன்பிருப்பதை தடுப்பதோடு நில்லாமல், உய்கூர் பகுதியில் மக்கள் வழிபாட்டிற்காக பள்ளிவாசல் செல்வதையும் ரமழான் மாதத்தில் தடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக உய்கூர் காங்கிரஸ் அமைப்பு, சீன அரசு இஸ்லாமிய மார்கத்தை பீஜிங் ஆட்சிக்கு ஆபத்தாக கருதுகிறது என்று கூறியுள்ளது.

சீன அரசு தங்கள் குடிமக்களுக்கு வழிபாட்டு சுதந்திரம் இருப்பத்தாக கூறிக்கொண்டாலும் மக்களை இது போன்ற கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தி வருகிறது.

மேலும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சிங்சியாங் பகுதியில் மக்கள் பாஸ்போர்டுக்கு விண்ணப்பித்தால் தங்களது கைவிரல் ரேகை, குரல், முப்பரிமான புகைப்படம், மற்றும் தங்களின் டி.என்.ஏ தகவல்களை காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு கட்டளையிட்டுள்ளது.