ரஷ்யாவும், ஈரானும் ஐ.எஸ்ஸுக்கு எதிராக போர் புரியவில்லை!- எர்துகான்!

பாரீஸ்:சிரியாவில் ரஷ்யாவும், ஈரானும் ஐ.எஸ்ஸுக்கு எதிராக போர் புரியவில்லை.மாறாக, பஸ்ஸாருல் அஸத் அரசுக்கு முழு ஆதரவளிப்பதாக துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார்.உள்நாட்டு சம்பவங்கள் குறித்து குறிப்பாக ரஷ்ய விமானத்தை வீழ்த்தியது தொடர்பாக ’பிரான்ஸ்-24’ என்ற பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு எர்துகான் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,”சிரியா அரசு எப்பொழுதும் லடாக்கியாவில் உள்ள துருக்மான் பகுதியைத்தான் குறி வைக்கிறது.கடந்த ஒன்றரை மாதத்தில் மித நிலைப்பாடு எடுத்த எதிர்கட்சியைச் சார்ந்த 300 பேர் அங்கு மட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த வாரத்தில் 20 துருக் வம்சாவழியினர் அங்கு கொல்லப்பட்டனர். இவையெல்லாம் ஐ.எஸ்ஸின் அச்சுறுத்தலுக்கு உட்படாத கிழக்கு பகுதியில் எங்களின் கண்முன்னால் நடக்கிறது. ஐ.எஸ்ஸுக்கு எதிரான போர் என்ற பெயரால் சிரியா எதிர்கட்சியினர் மீது ரஷ்யா நடத்தும் விமானத் தாக்குதல்கள் நெருப்போடு விளையாடுவதாகும்.ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு பிறகு ரஷ்ய தலைநகரில் உள்ள துருக்கி தூதரகத்தின் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலை அங்கீகரிக்க முடியாது.அங்கு போலீஸ் பார்வையாளர்களாக மாறினர்.இது கோபத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும்.எனது நாட்டில் அவ்வாறு சம்பவிக்க அனுமதித்திருக்கமாட்டேன். ஏனெனில் தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் ஆகியவற்றின் பொறுப்பு எங்களுடையது.”
இவ்வாறு எர்துகான் கூறியுள்ளார்.