ராஜஸ்தானில் பசு பயங்கரவாதிகளால் 17 வயது சிறுவன் வாகனம் ஏற்றி கொலை.!

ராஜஸ்தான் – ஹரியானா எல்லையில் அமைந்துள்ள பிவாடி பகுதியில் உள்ள சுபான்கி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பசு கடத்தப்படுவதாக சொல்லப்பட்ட லாரியை, பசு காவலர்கள் என்று அழைத்துக் கொள்ளும் கும்பல் துரத்தியபோது சபீர் கான் என்ள 17 வயது சிறுவன் மீது வாகனத்தை ஏற்றியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

“உயிரிழந்த சபீர் கானின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பெயரில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், சோனு, ஹர்கேஷ், நரேந்திரா ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர், மற்ற நான்கு பேர் தலைமறைவாகியுள்ளனர்” என சுபாங்கி காவல்நிலைய அதிகாரி முகேஷ் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை), 143 (சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுதல்) மற்றும் 506 (கிரிமினல் திட்டமிடலுக்கான தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபீர் கான் மீது மோதிய இரண்டு வாகனங்களில் ஒன்று கடத்தல்காரர்களுடையது என்றும், இரண்டாவது பசு காவலர்கள் உடையது என்றும் அவர் தெரிவித்திருக்கும் நிலையில், இதனை மறுக்கும் சபீரின் குடும்பத்தினர், இரண்டு வாகனங்களும் பசு காவலர்களுடையதுதான் என குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பசு பயங்கரவாதிகளை பாதுகாப்பதற்காக காவல்துறையினர் இந்த விசயத்தைத் திசை திருப்புவதாக சபீரின் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அல்வார் மாவட்டத்தில் இது போன்ற நிகழ்வு நடப்பது இது முதல் முறையல்ல. 2017 ஆம் ஆண்டு பெஹ்லு கான் என்ற பால் வியாபாரியும், 2018 ஆம் ஆண்டு ரக்பர் கான் என்ற நபரும், அவர்களது சொந்த பசுக்களை வீட்டுற்கு கொண்டு செல்லும் வழியில் மறிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.