– ரியாஸ்
களத்தில் நின்று போராடுபவர்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், ஏன் அதைவிட அதிக முக்கியத்துவம், சிந்தனையாளர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஒரு சமுதாயம் அல்லது நாட்டு மக்களின் நிலைகளை மாற்றுவதில் இந்த சிந்தனைவாதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். முஸ்லிம் சமுதாயத்தின் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் மாலிக் பின் நபி. இப்னு கல்தூனிற்கு பிறகு இஸ்லாமிய சமுதாயம் உருவாக்கிய முதல் சமூக சிந்தனையாளர் என்று கூட இவரை புகழ்வதுண்டு.
முதன்மை சிந்தனாவாதியாக இருந்த போதும் மாலிக் பின் நபி அதிகம் அறியப்படாத நபராகவே இதுவரை இருந்துள்ளார். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. மாலிக் பின் நபியின் எழுத்துக்கள் பெரும்பாலும் பிரெஞ்சு மொழியிலேயே உள்ளன. அவற்றில் சில அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அவரின் புத்தகங்கள் மிகவும் சொற்பமே. மாலிக் பின் நபி எந்தவொரு இஸ்லாமிய இயக்கத்தையும் சாராதவராக இருந்ததும், அவர் அதிகம் அறியப்படாததற்கு காரணமாக உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
இந்த தடைகளையும் தாண்டி, மாலிக் பின் நபியின் கருத்துக்கள் தாக்கங்கள் ஏற்படுத்தியதை ஏற்படுத்தி வருவதை மறுக்க முடியாது.
1905ம் வருடம் நவம்பர் மாதம் அல்ஜீரியாவில் பிறந்தார் மாலிக் பின் நபி. அக்காலக்கட்டத்தில் அல்ஜீரியா, பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1830களில் இருந்து பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் அல்ஜீரிய ஆக்கிரமிப்பை தொடங்கினர். 1907ல் முழு அல்ஜீரியாவையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். வழக்கம்போல் மற்ற ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளை போன்று, அல்ஜீரியாவிலும் பிரெஞ்சு கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தியது. அரசியல் ரீதியாக மட்டுமின்றி கலாச்சார ரீதியாகவும் அல்ஜீரியா ஆக்கிரமிக்கப்பட்டது.
பிரான்சின் ஆதிக்கத்தின் கீழ் பெரும்பான்மை அல்ஜீரியர்கள் வறுமையில் வாடினர். இதற்கு பின் நபியின் குடும்பமும் விதிவிலக்கல்ல. மாலிக் பின் நபியின் பாட்டி, தனது நாடு எப்படியெல்லாம் பிரெஞ்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதையும் அதன் பாதிப்புகளையும் தனது பேரக்குழந்தைகளுக்கு கதையாக சொல்லிக் கொண்டிருப்பார். இந்த குழந்தை பருவத்து கதைகள் மாலிக் பின் நபியின் உள்ளத்தில் சுதந்திரம் குறித்த வேட்கையை விதைத்தன என்றால் அது மிகையல்ல.
மாலிக் பின் நபியின் தந்தை கற்றறிந்த கல்வியாளர் என்றாலும் அவருக்கு ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. எனவே பின் நபியின் தாயாரும் வேலைக்கு சென்றார். இருந்தபோதும் வீட்டின் வறுமையை போக்குவதற்கு அது போதுமானதாக இல்லை. வறுமையில் உழன்ற போதும் தனது மகனின் கல்வி தடைபடாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர் பெற்றோர். ஒருமுறை, மாலிக் பின் நபியின் மாத பள்ளி கட்டணத்தை கட்டுவதற்காக தனது மர கட்டிலையே விற்றுவிட்டார் அவரின் தாய்!
தனது பள்ளி நாட்களிலேயே அரபி மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளையும் மாலிக் பின் நபி கற்றார். படிப்பில் சிறந்து விளங்கிய போதும் தன்னால் முதல் மதிப்பெண் பெற முடியாததற்காக காரணத்தை தேடினார் மாலிக் பின் நபி. விரைவாக, அதற்கான காரணத்தையும் கண்டு கொண்டார். பிரெஞ்சு அதிகாரிகளின் இனவெறிதான் தான் முதல் மதிப்பெண் பெறுவதற்கு தடையாக இருப்பதை கண்டு கொண்டார்.
படிப்பை முடித்து பிரான்ஸ் சென்ற மாலிக் பின் நபி, அங்கு சில மாதங்கள் சில நிறுவனங்களில் வேலை பார்த்தார். எதுவும் சரி வராததால் தனது நாட்டிற்கே திரும்பினார். 1930ல் தனது கல்வியை தொடர பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். வறுமை தொடர்ந்த போதும் மகனின் படிப்பிற்கு அது தடையாக மாறிவிடாமல் பெற்றோர் பார்த்துக் கொண்டனர். பொறியியல் படிப்பில் சேர்ந்து இங்கும் தனது முத்திரையை பதித்தார். பிரான்சிலும் தலைவிரித்தாடிய இனவெறி முதல் இடத்தை தட்டிப் பறித்து கொண்டிருந்தது.
கல்லூரி நாட்கள் மாலிக் பின் நபியின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்திய நாட்களாக இருந்தன. 1930களில் வரலாறு, சமூகம் மற்றும் தத்துவஞானத்தில் அதிக ஆர்வம் கொண்டார் மாலிக் பின் நபி. மஃரிப் மாணவர் அமைப்பில் சேர்ந்து அங்கு உரைகளும் ஆற்ற ஆரம்பித்தார். (அல்ஜீரியா,லிபியா, துனீசியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் மஃரிப் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன).
‘நாம் ஏன் முஸ்லிம்கள்?’ என்ற தலைப்பில் ஒருமுறை உரையாற்றினார் மாலிக் பின் நபி. இதன் தாக்கத்தை அவர் பிரான்சிலும் அல்ஜீரியாவிலும் உணர்ந்தார். பிரான்சில் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார் மாலிக் பின் நபி. அல்ஜீரியாவில் அரசு பணியில் இருந்த அவர் தந்தை திடீரென்று வெகுதொலைவில் உள்ள ஓர் இடத்திற்கு மாற்றப்பட்டார். தனது உரைதான் தனது தந்தையின் பணியிட மாற்றத்திற்கான காரணம் என்பதை அறிந்து கொண்டார்
மாலிக் பின் நபி. மாணவர்கள் மத்தியில் மாலிக் பின் நபியின் தாக்கம் அதிகரித்தது.
இதனை உணர்ந்து கொண்ட பிரெஞ்சு அதிகாரிகள் மாலிக் பின் நபியின் செல்வாக்கை குலைப்பதற்கு சில கீழ்த்தரமான வேலைகளிலும் ஈடுபட்டனர். ஆனால் மாலிக் பின் நபியின் நேர்மை மற்றும் தத்துவ ரீதியான அவரின் விளக்கங்கள் மாணவர்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை அதிகரிக்கவே செய்தன.
பிரான்சில் கல்வி அறிவில்லாத தொழிலாளர்களுக்கு ஒன்பது மாதங்கள் மாலிக் பின் நபி கல்வி கற்றுக் கொடுத்தார். இந்த ஒன்பது மாதங்களில் அவர்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை மாலிக் பின் நபி கண்டுகொண்டார். ஆனால் அவர் தொடர்ந்து கற்று கொடுப்பதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் மனம் நொந்த மாலிக் பின் நபி தனது தாய் நாட்டிற்கு திரும்பினர். ஆனால் விரைவிலேயே, 1939ல் மீண்டும் பிரான்ஸ் திரும்பினார்.
இங்கு நாம் ஒரு முக்கிய விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தனது வாழ்க்கையின் கணிசமான பகுதியை மாலிக் பின் நபி பிரான்சில் தான் கழித்தார். ஏறத்தாழ 25 வருடங்கள் அவர் பிரான்சில் வாழ்ந்துள்ளார். அங்கு கல்வியும் கற்றார், வேலையும் செய்தார். ஆனால் இந்த 25 ஆண்டுகால வாழ்க்கை அவருடைய கலாச்சாரத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. கல்வியை பொறுத்தவரை அவர் மேற்குலகின் உருவாக்கமாகவே இருந்தார். ஆனால் ஈமானில் அவர் கொண்ட உறுதி பிரான்சின் சிந்தனையும் கலாச்சாரமும் அவரை ஆட்கொள்வதை விட்டும் தடுத்தன. தனது கலாச்சார அடையாளங்களை விட்டுக் கொடுக்காதவராகவே மாலிக் பின் நபி திகழ்ந்தார்.
மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் நாகரிகம் குறித்த தெளிவான ஆழமான அறிவே, மாலிக் பின் நபி அவற்றை விட்டும் விலகி இருக்க மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தன. ‘இஸ்லாத்தை மட்டும் அறிந்து கொண்டு ஜாஹிலியாவை அறியாதவன் எங்கே இஸ்லாத்தை அழித்து விடுவானோ என்று நான் அஞ்சுகிறேன்’ என்ற உமர் (ரலி) அவர்களின் வார்த்தைகள் இங்கே பொருந்துகிறதா? சில மாதங்கள் மேற்குலகில் தங்கி, அல்லது மேற்குலகை வீடியோகளில் கண்டு அவர்களின் கலாச்சாரத்தை அடி மாறாமல் பின்பற்றுபவர்களுக்கு மாலிக் பின் நபியின் வாழ்க்கை நல்லதொரு முன்னுதாரணம்.
தனது நாட்டின் விடுதலைக்கு சிந்தனை ரீதியான பங்களிப்புகளை செய்தார். பிரான்சில் இருந்த போதும் தனது தாய் நாடான அல்ஜீரியாவின் விடுதலைக்கு தன்னால் இயன்ற பணிகளை செய்தார். இங்குதான் இவருடைய சிந்தனையின் தாக்கம் வெளிப்படுகிறது. நிலம் சுதந்திரம் பெற்றால் போதாது, மனிதனும் சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் மாலிக் பின் நபியின் கொள்கை. அரசியல் மற்றும் கலாச்சார அடிமைத்தனத்தில் இருக்கும் தனது நாடு குறித்தும் உலகளாவிய முஸ்லிம் உம்மத் குறித்தும் அதிக அக்கறை கொண்டிருந்தார். மாலிக் பின் நபியின் சிந்தனைகள் குறுகிய கால பலன்களை மையமாகக் கொண்டு அமையவில்லை. மாறாக அவை தூரநோக்கு சிந்தனை கொண்டவை என்பதை அவற்றை படிக்கும் போதே புரிந்து கொள்ளலாம்.
காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டம் என்பது அரசியல் மட்டும் இராணுவ ரீதியாக நடத்தப்படும் போராட்டம் மட்டும் கிடையாது. கொள்கை ரீதியாக நடத்தப்படும் போரும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுதான் மாலிக் பின் நபியின் கருத்து. இன்றைய உலகில் நடைபெறும் எழுச்சிமிகு விடுதலை போராட்டங்களிலும் இதனை நாம் கண்கூடாக காணலாம். ஃபலஸ்தீன போராட்டம் இதற்கு சிறந்ததொரு உதாரணம்.
அல்ஜீரியாவின் விடுதலை போராட்டத்திற்கு தனது பேச்சாலும் எழுத்தாலும் உரமூட்டினார் மாலிக் பின் நபி. சக்தியும் வீரியமும் கொண்ட அவரின் மொழிநடை விடுதலை போராட்டத்திற்கு உத்வேகத்தை கொடுத்தது. அவரின் பேச்சின் வீரியம் தந்தைக்கு பணியிட மாற்றம் கொடுக்கும் சக்தியை பெற்றிருந்ததை நாம் இங்கு மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். தந்தையின் பணியிட மாற்றம் மாலிக் பின் நபிக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக, ஆதிக்க சக்திகளுக்கு எதிரான அவரது மனநிலையை உறுதிப்படுத்தியது. மாலிக் பின் நபியின் சிந்தனைகளை கண்டு ஆதிக்கசக்திகள் எவ்வளவு அஞ்சினார்கள் என்பதை அவரின் மீதான கண்காணிப்பு காட்டுகிறது.
நடைமுறைக்கு சாத்தியமான கருத்துகளையே மாலிக் பின் நபி கூறியதுதான் அவருடைய பேச்சுகள் ஏற்படுத்திய தாக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தன. கேட்பவர்களை உற்சாகமூட்டுவதற்கோ உணர்ச்சிகளை கிளறி விடுவதற்கோ, வானவில்லை வில்லாக வளைக்கும் கதைகளை எல்லாம் மாலிக் பின் நபி கூறவில்லை. எது சாத்தியமோ அதையே தன் மக்களுக்கு கூறினார்.
அல்ஜீரியாவின் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்தவர் என்ற குறுகிய வட்டத்திற்குள் மாலிக் பின் நபியை அடைத்து விட முடியாது. உலக அளவில் முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்து அவர் தனது சிந்தனையை செலுத்தினார். இஜ்திஹாத் எனும் நவீன இஸ்லாமிய சிந்தனை குறித்து மாலிக் பின் நபி கூறிய கருத்துகளும் அவர் கொண்டிருந்த சிந்தனைகளும் நமக்கு மிகப்பெரும் ஆச்சர்யங்களை தருகின்றன.
இஸ்லாத்தின் மீது அதன் எதிரிகள் தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. ஆயுத தாக்குதலுடன் சேர்த்து முஸ்லிம்களை சோர்வடைய செய்யும் சிந்தனை ரீதியான தாக்குதலையும் தொடுப்பது அவர்களின் வாடிக்கை. முஸ்லிம் நாடுகளின் மோசமான நிலையை சுட்டிக்காட்டிய மேற்கத்திய நாடுகள், இஸ்லாத்தின் அடித்தளங்களே கேள்விக்குறியாக்கப்பட்டு நிற்கின்றன என்ற ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர். மாலிக் பின் நபி இதனை முற்றிலுமாக நிராகரித்தார். முஸ்லிம் நாடுகளின் இந்நிலைக்கு முஸ்லிம்களே காரணம் என்று கூறினார் மாலிக் பின் நபி.
முஸ்லிம்களின் சிந்தனையிலும் ஒழுக்கத்திலும் ஏற்பட்ட வீழ்ச்சியே முஸ்லிம் நாடுகளில் காலனித்துவம் ஆதிக்கம் பெற காரணமாக அமைந்தது என்பது அவரின் வாதம். இதன் மூலம் நமது சிந்தனையையும் ஒழுக்கத்தையும் சரி செய்தால் காலனித்துவத்தை எதிர்த்து வெற்றியும் பெறலாம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டினார். முஸ்லிம்கள் அரசியல் பலஹீனம் அடைந்ததும் சிந்தனை தேக்கம் கொண்டதுமே மேற்கத்திய உலகம் முஸ்லிம் நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று மற்றொரு முறை கூறினார்.
பாரம்பரியத்தையும் பழம் பெருமைகளையும் பேசிக் கொண்டிராமல் தற்போதைய வீழ்ச்சிக்கான காரணம் என்ன என்பதை மாலிக் பின் நபி சிந்தித்தார். முஸ்லிம்களின் இன்றைய மோசமான நிலையுடன் கடந்த கால வசந்தங்களை ஒப்பிட்டுப் பார்த்தார். முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்து, எழுச்சிக்கான வழிகளை வகுத்து, அதை அடைவதற்கான செயல்முறைகளையும் வழங்கினார்.
படித்தது பொறியியல் என்றாலும் வரலாற்றின் மீதுதான் மாலிக் பின் நபிக்கு அதிக ஆர்வம் இருந்தது. அத்துடன் கலாச்சாரம் குறித்தும் ஆழமான பல கருத்துகளை வழங்கியுள்ளார். வரலாற்றுடன் இணைத்து சமூகவியல் மற்றும் தத்துவயியல் ஆகியவற்றிலும் அவர் தனது கவனத்தை செலுத்தினார். கலாச்சாரம், நாகரிகம், கீழைத்தேயவாதம் மற்றும் ஜனநாயகம் குறித்து ஏராளமான உரைகளை நிகழ்த்தினார், எழுத்துகளாகவும் வடித்தார்.
வரலாறு என்பது சிந்தனை மற்றும் செயல்களின் தொகுப்பு. எந்த சமுதாயம் வரலாற்றில் அதிகமாக பதிவு செய்கிறதோ அந்த சமுதாயம் சிறந்த முடிவுகளை பெறும் என்று வரலாறு குறித்த ஒரு வித்தியாசமான பார்வையை இந்த சமுதாயத்திற்கு வழங்கினார்.
ஐரோப்பிய அரசியல் மற்றும் பண்பாட்டு ஆதிக்கம் முஸ்லிம் உலகில் நிலைபெறுவதற்கு கீழைத்தேயவாதம் முக்கிய பங்காற்றியது என்பதை இந்த சமுதாயத்திற்கு எடுத்துரைத்த மாலிக் பின் நபி, கீழைத்தேயவாதம் செய்யும் இரண்டு முக்கியமான வேலைகளையும் விளக்கினார். முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு இவை இரண்டும் முக்கிய காரணமõக அமைந்தன. முஸ்லிம்கள் தங்கள் பழம் பெருமைகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்குமாறு இவர்கள் கவனமாக பார்த்துக் கொண்டனர். இரண்டாவதாக, முஸ்லிம்களை தங்களுக்குள் வீண் தர்க்கங்களில் ஈடுபட வைத்தனர்.
சமுதாய மாற்றத்திற்கும் சமூக உருவாக்கத்திற்கும் சிந்தனைகளே முக்கியமானவை என்பதை உணர்த்திய மாலிக் பின் நபி, அச்சிந்தனைகளை பொருத்தமான இடத்தில் பொருத்தமான வகையில் செயல்படுத்த வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். இன்றைய இஸ்லாமிய இயக்கவாதிகளுக்கும் அவர்களை குறைகாண்பவர்களுக்கும் இதில் நல்லதொரு பாடம் இருக்கிறது. கால, இட, சூழ்நிலைகளுக்கு ஏற்பவே சிந்தனைகளை பயன்படுத்த வேண்டும். அதுதான் அறிவார்ந்த செயலாக இருக்கும். புத்தக அறிவை மட்டுமே கொண்டுள்ள சில சமகால இளைஞர்கள், எகிப்து மாதிரியையும், சவூதி மாதிரியையும் இந்தியாவில் பயன்படுத்த வேண்டும் என்று தாங்கள் கூறுவது எவ்வளவு அபத்தமானது என்பதை உணர வேண்டும்.
ஜனநாயகம் குறித்த தெளிவானதொரு பார்வையையும் சமுதாயத்திற்கு மாலிக் பின் நபி வழங்கினார். 1960ல் மஃரிப் மாணவர்கள் அமைப்பில் ‘இஸ்லாத்தில் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் மாலிக் பின் நபி உரையாற்றினார். அந்த உரையை கேட்டவர்களில் ஒருவர், துனீசியாவின் அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கிய இஸ்லாமிய அறிஞரான ராஷித் கன்னோஸி. மாலிக் பின் நபியின் கருத்துகளால் பெரிதும் கவரப்பட்ட கன்னோஸி, பிரெஞ்சு மொழியில் ஆற்றப்பட்ட இந்த உரையை அரபியில் மொழிபெயர்த்தார்.
இஸ்லாமிய சிந்தனையாளர்களான ராஷித் ரிழா, முகம்மது அப்துஹு ஆகியோரின் கருத்துகளால் மாலிக் பின் நபி பெரிதும கவரப்பட்டார். அத்துடன் தனது நண்பர்கள் மற்றும் சமகால அறிஞர்களிடமிருந்தும் பல விஷயங்களை கற்றுக் கொண்டார். அறிஞர்கள் மற்றும் புத்தகங்களின் துணையுடன் தனது சிந்தனைக்கு வலுசேர்த்தார் மாலிக் பின் நபி.
ஹமூதா பின் சயீ என்பவருடனான நட்புதான் தத்துவயியல், சமூகவியல், வரலாறு ஆகியவற்றின் மீது மாலிக் பின் நபிக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின. முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய நிலை குறித்த ஒரு சமூகவியல் பார்வையை கொடுப்பதற்கு குர்ஆன் வசனங்களை கொண்டு விளக்கம் அளிப்பார் ஹமூதா. இது மாலிக் பின் நபியை பெரிதும் கவர்ந்தது. பின் நபியின் எழுத்துகளிலும் இதன் தாக்கத்தை உணர முடியும். தனது அனைத்து கருத்துகளுக்கும் குர்ஆன் வசனங்களின் துணை கொண்டே வலுசேர்த்தார் மாலிக் பின் நபி.
மற்றொரு நண்பரான காலித்தின் நட்புதான் மாணவர் அமைப்புகளில் மாலிக் பின் நபியை ஈடுபடுத்தியது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட கதீஜா என்ற பிரெஞ்சு பெண்மணியை 1931ல் மணம் முடித்தார் மாலிக் பின் நபி. அறிவில் சிறந்து விளங்கிய அப்பெண், தனது கணவனின் குறைந்த வருமானத்தில் நிறைவான வாழ்க்கையை அமைத்து கொடுத்தார். இதன்மூலம் தனது வீட்டை அமைதியின் இருப்பிடமாக ஆக்கினார். தனது கணவனின் சிந்தனைக்கு துணை சேர்க்கும் விதமாக சில ஆலோசனைகளையும் அவ்வப்போது வழங்கி வந்தார். சிந்தனைகள், செயல்பாடுகள், கண்காணிப்புகள், பிரச்சனைகள் என வாழ்ந்து வந்த மாலிக் பின் நபிக்கு அவரின் மனைவியின் துணை மிகப்பெரும் பலத்தை கொடுத்தது.
மாலிக் பின் நபியின் இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக அவர் அல்ஜீரியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 1956ல் எகிப்திற்கு சென்றார் மாலிக் பின் நபி. எகிப்திய அரசாங்கம் மாலிக் பின் நபிக்கு தேவையான உதவிகளை செய்தது. அவரின் போராட்டத்திற்கும் உதவிகள் செய்தது.1962ல் அல்ஜீரியா சுதந்திரம் அடைந்ததை தொடர்ந்து தனது நாட்டிற்கு திரும்பினார் மாலிக் பின் நபி. 1965ல் உயர்கல்வி துறையில் டைரக்டர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் அந்த பதவியில் இருந்து மாலிக் பின் நபி நீக்கப்பட்டார். அத்துடன் கெடுபிடிகளும் ஆரம்பித்தன. நாட்டை விட்டும் வெளியே செல்லக்கூடாது என்று அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
1971ல் தனது குடும்பத்துடன் ஹஜ் கடமையை நிறைவேற்ற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி ஏழு மாதங்கள் அவர் பயணித்தார். இந்த பயணத்தின்போது எகிப்து, சிரியா, லெபனான், லிபியா மற்றும் துனீசியாவிற்கு சென்று தனது நண்பர்களை சந்தித்தார். 1973 அக்டோபரில் அல்ஜீரியாவில் மரணமடைந்தார்.
1991ல் மாலிக் பின் நபி குறித்த ஒரு சர்வதேச கருத்தரங்கம் மலேசியாவில் நடத்தப்பட்டது. பல்வேறு அறிஞர்களும் மாலிக் பின் நபி குறித்தும் அவரின் சிந்தனைகள் குறித்தும் உரையாடினர். மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
இஜ்திஹாத் எனும் சிந்தனை குறித்தும் சிந்தனையின் முக்கியத்துவம் குறித்தும், வரலாறு, நாகரிகம், கலாச்சாரம், ஜனநாயகம் என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் மாலிக் பின் நபி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சமகால இஸ்லாமிய அறிஞர்களில் இவரும் ஒரு கதாநாயகன் என்பதை மறுக்க முடியாது. மாலிக் பின் நபியின் சிந்தனைகள் இக்காலத்திற்கும் தேவையானவை. சமுதாயம் அவரின் சிந்தனையில் இருந்து பாடம் படிக்க வேண்டியது காலத்தின் அவசியம்.
மாலிக் பின் நபியுடன் ஒரே வீட்டில் சில காலம் தங்கியிருந்த பேராசிரியர் பவ்ஸி ஹஸன், அவர் குறித்து தெரிவித்த கருத்துகள்:
‘அவரை இரு நிலைகளிலேயே என்னால் காண முடிந்தது. ஒன்று, அவர் வணக்கசாலியாக விளங்கினார். மறுபுறம், அவர் சிந்தனையாளனாகவும் எழுத்தாளனாகவும் திகழ்ந்தார். அவரது அறையின் ஜன்னல் திறந்திருந்தால், அவர் எழுதிக் கொண்டிருக்கிறார் எனப் பொருளாகும். அது மூடப்பட்டிருந்தால் அவர் வணக்கத்திலும், தஸ்பீஹிலும் ஈடுபட்டுள்ளார் எனப் பொருளாகும். அவரின் சிந்தனைகள் மக்களை அடைய வேண்டும் என்பதற்காக மாலிக் புத்தகங்களை எழுதினார். அவற்றை மிகச் சாதாரண விலையில் சந்தையில் விற்கவும் செய்தார். அதனால், ஏற்படும் நஷ்டத்தை பெரும்பாலும் அவரது சொந்த பணத்தைக் கொண்டு ஈடு செய்ய வேண்டியிருந்தது.”
(செப்டம்பர் 2015 இதழில் வெளியான கட்டுரை)
You must be logged in to post a comment.