விபச்சார விடுதி நடத்திய சிவா சேனா தலைவி கைது

0

மும்பையில் விபச்சார விடுதி நடத்தியதற்காக சிவசேனா அமைப்பின் பெண் தலைவர் ஒருவரை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக மகாராஷ்டிராவின் கல்யான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விபச்சார விடுதி நடத்தி வந்துள்ளார் ஷோபா கல்மாடு. இவர் பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாகவும் அதில் கிடைக்கும் பணத்தை தான் வைத்துக்கொண்டு அவர்களுக்கு வெறும் 200 இல் இருந்து 500 ரூபாய்களை மட்டும் கொடுத்து வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களை குறித்த தகவல்களை மர்ம நபர்கள் காவல்துறையிடம் கொடுத்ததின் பேரில் காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர். இவருடன் இவரது மேலாளர் சுரேஷ் ஷெட்டி, துர்கா பாலஸ் விடுதியின் ஓட்டுனர் வினோத் யாதவ் ஆகியோரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

இது குறித்து ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “ஷோபா கல்மாடுவின் தொழில் குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அது குறித்து விசாரணை செய்ததில் அவர் அவரது வாடிக்கையாளர் ஒருவருடன் துர்கா பாலஸ் விடுதிக்கு சென்றிருப்பதாக கண்டறிந்தோம். அங்கு அவரது வாடிக்கையாளரிடம் இருந்து பெற்ற பணத்தை விடுதி ஊழியர்களுக்கும் அவரின் கீழ் பணியாற்றும் பெண்களுக்கும் கொடுக்கும் போது அவர் பிடிபட்டார்” என்று கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 370(2)(3) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . கல்மாடு கைது செய்ததை அடுத்து சிவசேனா கட்சி தலைவர் ராஜேந்திர சவுத்ரி, கல்மாடுவை ஒரு வருடத்துக்கு முன்னதாகவே கட்சியில் இருந்து நீக்கியதாக கூறியுள்ளார். ஆனால் கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி ராஜேந்திர சவுத்திரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஷோபா கல்மாடு காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.