விவசாயம் ஓர் இஸ்லாமியப் பார்வை

விவசாயம் ஓர் இஸ்லாமியப் பார்வை

2020 செப்டம்பர் ஐந்தாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பாக மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு சட்டங்களாக நடைமுறைக்கு வந்துள்ளன.

இத்தருணத்தில் வேளாண்மை மற்றும் விவசாயம் குறித்த இஸ்லாமியப் பார்வையை பகிர்ந்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும்.

மக்களை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசு

நம்முடைய ஜனநாயக திருநாட்டில் மக்கள் மிகப்பெரிய அளவிலான நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருப்பது இந்த பா.ஜ.க. அரசின் ஆட்சிக் காலத்தில்தான்.

மதவாதம், பிரிவினைவாதம், வகுப்பு அரசியல் என்கின்ற தங்களது இயல்புகளை எல்லாம் கடந்து மக்களை வஞ்சித்து அவர்களது வாழ்வாதாரங்களை முடங்கச் செய்யும் செயல்திட்டங்களையே பா.ஜ.க. தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

பண மதிப்பிழப்பு, புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு திருத்தங்கள் என மக்களை வஞ்சிக்கும் திட்டங்களையே மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது. அதன் வரிசையில் விவசாயம் தொடர்பாக மத்திய அரசு அமல்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் சாமானிய விவசாயிகளை சிரமத்திற்குள்ளாகி பண முதலைகளையும் கார்ப்பரேட்களையும் பலப்படுத்துகின்ற ஓர் சூழ்ச்சியாகும். அத்துடன் அனைத்து தளங்களையும் அடிமைத்தனமாக மாற்றத் துடிக்கும் போக்காகும்.

இதுதொடர்பாக வடமாநிலங்களில் மிகப் பெரும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதுபோன்ற விஷயங்களில் இஸ்லாமிய கோட்பாடுகளை ஒப்பீடு செய்து பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இயற்கையுடன் இஸ்லாம்

இயற்கை வளங்கள் மனித வாழ்வுடன் தொடர்புடையதாகும். மனித வளங்கள் வலிமையுடன் உருவாகிட இயற்கை இன்றியமையாதது. இயற்கை சூழல் குறைபாடுகளாக உள்ள பல பகுதிகளில் மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறைவாக இருப்பதை நாம் காண முடியும்.

இதனடிப்படையில் மனிதனுக்கும் இயற்கைக்கும் ஒரு பரஸ்பர உறவு உள்ளது; இதனால்தான் இயற்கைக்கு இஸ்லாம் முக்கியத்துவம் அளிக்கிறது. இயற்கையின் பாதுகாவலர்களாக நாம் திகழ வேண்டுமென வலியுறுத்துகின்றது.

திருமறையின் இந்த வசனத்தை வாசியுங்கள்;

நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வந்து கொண்டிருப்பதிலும் மனிதர்களுக்கு பயன் தருவது கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும் வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்தபின் அதனை உயிர்ப்பிப்பதிலும்  அதன்மூலம் எல்லாவிதமான பிராணிகளையும் பரவவிட்டிருப்பதிலும் காற்றை மாறிமாறி வீசச் செய்வதிலும் வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும் கருணையையும் எடுத்துக்காட்டும்) சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 2:164)

இறை அத்தாட்சிகள் நிறைந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதை ஓர் மார்க்க கடமையாகவே இஸ்லாம் வலியுறுத்துகிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பது, நிழல் தரக்கூடிய மரங்களில் அசுத்தம் செய்வது உள்ளிட்ட காரியங்களை இஸ்லாம் தடை செய்ததன் மூலம் இயற்கை பாதுகாப்பிற்கு இஸ்லாம் வழங்கிய முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் மரம் வளர்ப்பதை மகத்தான தர்மமாக அறிவித்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

இஸ்லாம் இயற்கை பற்றி பேசுவது போன்றே விவசாயத்தைப் பற்றியும் பேசுகின்றது; ஊக்குவிக்கின்றது; முக்கியத்துவமளிக்கின்றது.

விவசாயத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தின் உயிர் மூச்சான உணவு கிடைக்கின்றது. அத்துடன் ஆடைக்கும் தேவையான பருத்தி, கட்டுமான பணிகளுக்கு தேவையான மரங்கள், மருத்துவப் பொருட்கள், வாசனை திரவியங்கள் என ஏராளமான விஷயங்களுக்கு விவசாயமே மூலாதாரம்.

மனிதவாழ்வின் அநேக தேவைகளுக்கு ஆணிவேராக திகழும் விவசாயத்தை இஸ்லாம் முக்கியத்துவம் அளித்து பேசுகின்றது.

சூரா யாசீனில் பின்வரும் இரு வசனங்கள் இதற்கு சான்றாகும்:

அன்றியும், இறந்து (தரிசாகக்) கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்துதான் அவர்கள் உண்ணுகிறார்கள்.

மேலும் அதில் நாம் பேரீத்த மரங்களினாலும் திராட்சை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம். இன்னும் அதில் நீரூற்றுகளை பீரிட்டு ஓடச் செய்கிறோம்.

(அல்குர்ஆன் 36: 33, 34)

கியாமத் நாள் நிகழ்ந்தாலும் உங்களது கரத்தில் ஒரு செடி இருந்து அதனை நடுவதற்கு சக்தி இருந்தால் நட்டு விடு என உபதேசிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் விவசாயம் செய்யப்படாமல் தரிசு நிலமாகக் கிடந்த நிலத்தை கையிலெடுத்து அதில் விவசாயம் செய்திட ஏற்பாடு செய்த சம்பவத்தை வரலாற்றில் காண முடியும்.

ஒரு முறை நபித்தோழர் குபைப் (ரலி) அவர்களிடம் உங்களுடைய நிலம் ஏன் விவசாயம் செய்யப்படாமல் இருக்கிறது என கேட்க, நான் நாளைக்கு கூட மரணித்து விடுமளவிற்கு நான் வயோதிகத்தை அடைந்து விட்டேன் என்று அந்த நபித்தோழர் பதில் கூறினார்கள்.

அப்போது உமர் (ரலி) எப்படியானாலும் நீங்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறியதோடு அந்த நிலத்தில் இறங்கி உமர் (ரலி) அவர்களும் பயிரிடுவதை நான் பார்த்துள்ளேன் என்று குஸைமா (ரலி) அவர்களுடைய மகன் அம்மார் (ரலி) அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் ஷரீஃபில் வரக் கூடிய நபிமொழியில், நிலம் வைத்திருப்பவன் அதில் விவசாயம் செய்யட்டும்; இல்லையெனில் விவசாயம் செய்வதற்காக தன் சகோதரனுக்கு விட்டுக் கொடுக்கட்டும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (முஸ்லிம்)

உங்களில் ஒருவர் தன்னுடைய நிலத்தை பணம் பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விடுவதைவிட விவசாயத்திற்காக இலவசமாக கொடுப்பது சிறந்தது என்றார்கள் சத்தியத் திருத் தூதர் (ஸல்) அவர்கள். (புகாரி)

இது போன்றுள்ள நடவடிக்கைகளை நபி (ஸல்) அவர்கள் உபதேசிக்க காரணம் தேவையான உணவுப் பொருட்கள் இயற்கையாகவும் தடையில்லாமலும் உருவாகிட ஊக்குவிப்பதற்காகவேயாகும்.

ஆனால் தற்போது மத்திய அரசு இயற்றி இருக்கும் வேளாண் சட்டங்கள் விவசாயத்தின் இயல்பான பலன்களை குறைத்து, தேவையான இயற்கை உணவு பொருட்கள் தேவையானோருக்கு தேவையான நேரத்தில் கிடைக்காமல் போவதற்கான மோசமான வழிகளைத் திறந்து கொடுக்கின்றன.

அத்துடன் பண முதலைகள் சுகம் அனுபவித்து விடவும் பதுக்கல் மோசடி போன்ற குற்றங்கள் குறைவில்லாமல் அரங்கேறிடவும் தற்போதைய வேளாண் சட்டங்கள் வழிவகுக்கின்றன.

இந்திய தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் நம்முடைய அன்றாட வாழ்வை பாதிக்கும் இது போன்ற பிரச்சினைகளை நீதி தேடும் போராட்டங்களின் வழியே வென்றெடுக்க முயற்சிக்க வேண்டும். இதுபோன்ற போராட்டங்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். இது சமகால நமது தேசத்தில் நாம் முன்னெடுக்க வேண்டிய அதி முக்கிய கடமையாகும்.