சீனா, இத்தாலி, ஜப்பான், ஈரான் போன்ற கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியர்களை இந்திய அரசு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் அழைத்து வந்தது. ஜனவரி 31 முதல் மார்ச் 22 வரையிலான காலகட்டத்தில் ஐந்து சிறப்பு விமானங்கள் மூலம் ஏறத்தாழ ஆயிரம் இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரின் விமான செலவையும் இந்திய அரசே ஏற்றுக் கொண்டது. சீனாவில் இருந்து இந்தியவர்களை இரண்டு விமானங்கள் அழைத்து வந்தன. இதற்காக ஏர் இந்தியாவிற்கு ஆறு கோடி ரூபாயை இந்திய அரசு வழங்கியது.
இந்தியாவில் மார்ச் 25 அன்று நான்கு மணிநேர காலஅவகாசத்தில் மூன்று வார ஊரடங்கை பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இது பின்னர் மே 3 வரை நீட்டிக்கப்பட்டு அதன் பின்னர் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமிடப்படாத ஊரடங்கின் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வேலையும் சம்பளமும் இன்றி வெளி மாநிலங்களில் தவித்த இவர்கள் உணவின்றியும் அவதியுற்றனர். பொது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நிலையில் இவர்களில் பலர் குடும்பத்தினருடன் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பலதரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நாற்பது நாட்கள் கழிந்த பின்னர்தான் இவர்களுக்கான ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த ரயில் கட்டணத்தையும் தொழிலாளர்களிடமிருந்தே அரசு பெற்றிருப்பது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கொரோனா சூழலை எதிர்கொள்ள புதிதாக ஒரு நிதியை தொடங்கினார் பிரதமர் மோடி. கோடிக்கணக்கான பணத்தை கொண்டுள்ள அந்த நிதி எங்கே சென்றது? அதனை கொண்டு இந்த ரயில் கட்டணத்தை அரசே ஏற்க முடியாதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஒரு மாதம் சம்பளம் இல்லாமல் வெளியிடங்களில் தவித்த தொழிலாளிகளிடமே கட்டணத்தை பெறுவது எவ்விதத்தில் நியாயம் என்று தொழிலாளர்களும் புலம்புகின்றனர்.
You must be logged in to post a comment.