2013 முசப்பர்நகர் கலவர வழக்கு: கொலைகளை நேரில் கண்ட சாட்சி சுட்டுக்கொலை

2013 முசப்பர்நகர் கலவர வழக்கு: கொலைகளை நேரில் கண்ட சாட்சி சுட்டுக்கொலை

2013 ஆக்ஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்கள் உத்திர பிரதேசம் முசப்பர்நகரில் நடைபெற்ற மதக்கலவரத்தில் 60 க்கும் மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டனர். 40000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த கலவரத்தில் தனது இரு சகோதர்கள் கொலை செய்யப்பட்டதை நேரில் கண்ட சாட்சியான அஷ்ஃபக் என்பவர் திங்கள் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உடலில் குறைந்தபட்சம் ஐந்து இடங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளது. இதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.

அஷ்ஃபக்கின் சகோதரர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு வருகிற மார்ச் 25 ஆம் தேதி நீதிமன்றதில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.இவ்வழக்கில் 8 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.அஷ்ஃபக் கொலை தொடர்பாக அவரது வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், “அஷ்ஃபக் சகோதரர்கள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 குற்றவாளிகளும் பிணையில் வெளியில் உள்ளனர். இவ்வழக்கில் அஷ்ஃபக் தான் முக்கிய குற்றவாளி. அடுத்த நீதிமன்ற விசாரணை மார்ச் 25 ஆம் தேதி இருக்க, வழக்கை திரும்பப் பெறுமாறு அவர் தொடர்ச்சியாக வற்புறுத்தப்பட்டுள்ளார். தான் கொலை செய்யப்படலாம் என்று அஞ்சிய அஷ்ஃபக் பிப்ரவரி மாதம் காவல்துறையில் புகாரளித்து பாதுகாப்பும் கோரியிருந்தார்.” என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த கொலை தொடர்பாக அப்பகுதியின் cctv கேமரா பதிவுகளை காவல்துறை ஆராய்ந்து வருகின்றனர் என்று அப்பகுதி காவல்துறை அதிகாரி ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தனது மகன் கொல்லப்பட்டதை குறித்து அஷ்ஃபக்கின் தந்தை கூறுகையில், “கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் எங்களது வீடு உடமைகளை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டோம். கலவரத்தின் போது, எனது இரு மகன்கள் நவாப் மற்றும் ஷஹீத் கொலை செய்யப்பட்டனர். அதனை நேரில் கண்ட சாட்சி அஷ்ஃபக். தொடர்ச்சியாக அவருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. எங்களைப் பொறுத்தவரை கலவரம் இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கின்றது.” என்று தெரிவித்துள்ளார். அஷ்ஃபக் கொலையாளிகள் குறித்து அவரிடம் கேட்கப்பட, “எங்களுக்கு யாரிடமும் எந்த பகையும் இல்லை. இந்த கொலை தற்போது நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தொடர்புடையது என்றே நான் கருதுகிறேன்.எனது இரு மகனை கொலை செய்தவர்கள் வழக்கை திரும்பப் பெற கோரினர். அதற்கு அஷ்ஃபக் ஒப்புக்கொள்ளவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அஷ்ஃபக்கின் சகோதரதர் கொலை தொடர்பாக அஷ்ஃபக் பதிவு செய்த வழக்கை திரும்பப் பெறவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அஷ்ஃபக் மிரட்டப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் காவல்துறையின் பாதுகாப்பையும் கோரியிருந்தார்.