2017 ல் உலக நாடுகள் முன்னேற, பணமதிப்பிழப்பு, GST(சரக்கு மற்றும் சேவை வரி) யினால் இந்தியா பின்தங்கியது: ரகுராம் ராஜன்
மத்திய பாஜக அமல் படுத்திய பணமதிப்பிழப்பும், GST யும் 2017 இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமைந்தது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் தற்போதைய 7% வளர்சியானது அதன் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “2017 மொத்த உலகின் பொருளாதாரமும் முன்னேற இந்தியா மட்டும் பின் தங்கியது. இது பணமதிப்பிழப்பு மற்றும் GST யினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
2012 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் இந்தியா விரைவாக வளர்ச்சியடைந்து வந்த நிலையில் அடுத்தடுத்து வந்த இந்த இரு பேரடிகள் அந்த வளர்ச்சியை தடை செய்துவிட்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
25 வருடங்களாக 7% வளர்ச்சியானது மிக நல்ல வளர்ச்சியே, ஆனால் தற்போது வேலைவாய்ப்பு சந்தைக்கு வரும் மக்களை கணக்கிடுகையில் இது போதாது என்றும் நமக்கு இன்னும் அதிகமான வேலை வாய்ப்புகள் தேவை என்றும் இந்த வளர்ச்சி கொண்டு நம்மால் திருப்தியடைய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தீவிர விமர்ச்சகராக இருந்து வந்த ரகுராம் ராஜன், “பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நன்கு திட்டமிடப்படாத, நன்கு சிந்திக்கப்படாத, பயனற்ற வேலை என்று இந்த யோசனை முதன் முறையாக அரசால் முன்வைக்கப்பட்ட போதே நான் தெரிவித்துவிட்டேன்.” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.