சட்டமன்ற உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்படுமா?

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸம் கான் மீது 2019இல் பதிவு செய்யப்பட்ட வெறுப்பு பேச்சு வழக்கில் நிரபராதி என்று செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த வழக்கில் ஆஸம் கானுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கி கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பை தொடர்ந்து ஆஸம் கானின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் இருந்தும் அவரின் பெயர் நீக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.
உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் மற்றும் இந்துத்துவ தலைவர்கள் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளை கூறியதாக ஆஸம் கான் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. சில நாட்கள் சிறையில் அளித்த ஆஸம் கான் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். மேல்முறையீட்டை தொடர்ந்து ராம்பூர் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமித்வீர் சிங், ஆஸம் கானை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அரசு தரப்பு சாட்சியான தேர்தல் அதிகாரி அனில் குமார் சவுகான், அப்போதைய ராம்பூர் மாவட்ட நீதிபதி அவுன்ஜானைய குமார் சிங்-ன் வற்புறுத்தல் காரணமாகவே தான் இந்த வழக்கை பதிவு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆஸம் கான் மற்றும் மாவட்ட நீதிபதி இடையே சில பிரச்சனைகள் இருந்ததை இது உறுதிப்படுத்துவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
2017இல் ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்த பிறகு ஆஸன் கான் மீது 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் தண்டனை பெற்றதை தொடர்ந்து ஆஸம் கானின் மகன் அப்துல்லாஹ் கானின் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆஸம் கானின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
ஆஸம் கான் மற்றும் அவர் குடும்பத்தினர் மீதான பழி வாங்கும் நடவடிக்கையாக பொய் வழக்குகளை பாஜக அரசாங்கம் பதிவு செய்வதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
வழக்கில் ஆஸம் கான் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தாங்கள் ஆலோசித்து வருவதாக அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றொரு வழக்கிலும் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்படுவதற்கான வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.