சிறைச்சட்டம்: சீர்திருத்தமா? சித்ரவதையா?

ஒரு தேசத்தின் நாகரிகத்தை மதிப்பிட வேண்டுமெனில் அதன் சிறைச்சாலைகளை பார்வையிடுவதன் மூலமாக அறியலாம். நமது சுதந்திர இந்தியாவின் நாகரிகத்தை நமது சிறைச் சாலைகளை வைத்து மதிப்பிட்டால் அவமானமும், அதிர்ச்சியும் மட்டுமே மிஞ்சும். சுதந்திரம் கிடைத்து 63 ஆண்டுகள் ஆன பின்பும் 1894ம் ஆண்டு ஆங்கிலேயரால் இயற்றப்பட்ட கொடுமையான சிறைச்சட்டத்தையே இன்னும் பின்பற்றி வருகிறோம்.

வெள்ளையர் கால அடிமை இந்தியாவில் சுதந்திர உணர்வும், ஜனநாயக விழிப்புணர்வும் மக்களிடம் பரவிடக் கூடாது என்று மக்களை அச்சுறுத்தவும், அடிமைப்படுத்தவும், மீறினால் கொடுமைப்படுத்தும் விதமாக சிறைச்சட்டத்தை வகுத்திருந்தனர். ‘சிறை’ என்பதே சித்ரவதைக்கானது என்றிருந்ததால் அதில் சீர்திருத்தம் என்பது மருந்துக்கும் இல்லாமலிருந்தது. பகுத்தறிவின் பாசறையான இந்தியாவிற்கே சமூக நீதியும், சுய மரியாதையும் கற்றுக் கொடுத்த தமிழ்நாடு தனது சிறைகளை நிர்வகிக்க ‘தமிழ்நாடு சிறைச்சட் டம்” என்று அப்படுபாதக வெள்ளையரின் கருப்புச்சட்டத்தையே சிறுமாற்றத்தோடு பின்பற்றுவது வேதனைக்குரியது.

”ஒருவன் சிறைப்பட்டால் அவன் இந்நாட் டின் குடிமகனில்லை என்றாகிடமாட்டான். தேசத்தின் சொத்தாகவோ அல்லது அடிமையாகவோ கருதமுடியாது இந்திய அரசியல் சாசனம் வழங்குகின்ற அனைத்து அடிப்படை உரிமைகளையும், சுதந்திரங்களையும் பெறுவதற்கு சிறைவாசிக்கும் உரிமை உண்டு” என்று இந்திய உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை பிரகடனமும் ”எவரையும் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ மேலும் அவரது கண்ணியத்தை குலைக்கும் விதமாகவோ எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது” என்று பறைசாற்றியுள்ளது. எனினும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனமும் நமது அரசுகளை சிறிதும் விழிப்படையச் செய்யவில்லை அல்லது அரசுகள் அவைகளை மதிக்கவில்லை. 1980ம் ஆண்டு மத்திய அரசால் சிறை சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட “முல்லா கமிஷன்” (Mulla Commission) விரிவான சிறை சீர்திருத்தத்திற்கு பரிந்துரைத்தது. எனினும் இன்றுவரை அவைகள் தாள்களில் உள்ள எழுத்தாகத்தான் உள்ளது. தற்போதைய தமிழக சிறைச்சட்டம் பல மனித உரிமை மீறல்களையும், கொடுமைகளையும் கொண்டதாக உள்ளது. தமிழக சிறைச்சட்டம் எஸ் 46 (12ம் பிரிவு) சிறையதிகாரிக்கு எத்தகைய அதிகாரம் வழங்குகிறது தெரியுமா?

”குற்றம் செய்யும் கைதிக்கு 30 கசையடிகள் கொடுக்க வேண்டும்” இத்தோடு நின்றால் பரவாயில்லை! எவ்வளவு கடுமையாக அக்கசையடியை நிறைவேற்ற வேண்டும் என்பதை சிறைச் சட்டம் எஸ் 53(2ம் பிரிவு) விளக்குகிறது. ”கசையடி என்பதை 1/2 அங்குலத்திற்கு குறையாத விட்டமுள்ள பிரம்பால் உடம்பின் பின் பகுதியில் (ஆசன இருப்பு பகுதியில்) அடிக்க வேண்டும்.
இச்சட்டம் நமது நாகரிகத்தை நகைப்புக் குள்ளாக்குகிறது. இன்னும் கொடுமையாக பருவமடையாத இளம் சிறைவாசிகளுக்கும் கசையடி கொடுக்க அதிகாரம் வழங்குகிறது இச்சட்டம். சிறைச்சட்டம் எஸ் 53ம் பிரிவு என்ன கூறுகிறதெனில் ‘பதினாறு வயதிற்குட்பட்ட இளம் கைதிகளை பள்ளிகளில் ஒழுக்கத்தின் பொருட்டு பிரம்படி கொடுப்பது போல் கசையடி கொடுக்க வேண்டும்.

இன்று பள்ளிகளில் கூட குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று ஆர்.டி.இ. (Right to Education) சட்டம் கூறுகின்றது. ஆனால் சிறைச்சட்டம் சீர்திருத்தம் செய்யப்படாததால் இன்றும் இக்கொடுமைகள் தொடர்கின்றன.
அரசின் சட்டங்களே சிறை அதிகாரிகளுக்கு இத்தகைய கொடும் அதிகாரத்தை வழங்கியுள்ள நிலையில் அவர்கள் தங்களின் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் இன்னும் எவ்வளவு கொடுமைகள் இழைக்க முடியும்!
மேற்கூறிய கசையடி தண்டனை என்பது சிறைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகளிலேயே மிகவும் சிறிய ஒன்றாகும். மனிதனை உடல் ரீதியாக மட்டுமின்றி உள்ள ரீதியாக வும் துன்புறுத்தும் பல தண்டனைகள் நமது தமிழக சிறைச்சட்டத்தில் உள்ளது.

மற்றுமுள்ள தண்டனைகளை படித்தாலே நம து நெஞ்சம் பதறுகிறது. சிறைச்சட்டம் எஸ் 46 (5) வழங்கும் தண்டனையானது.
“தவறு செய்யும் சிறைவாசியை உல்லன் அல்லாத சணல் ஆடையை 3 மாத காலத்திற்கு உடுத்தச் செய்ய வேண்டும்”
சிறைச்சட்டம் எஸ் 46 (7) மற்றும் அத்தியாயம் 18: 308 மற்றும் 309ம் பிரிவுகளில் தண்டனை குறித்து கூறும் போது, ”தவறு செய்யும் சிறைவாசிக்கு இரும்பு விலங்குகள் இரண்டு கைகளிலும் தொடர்ந்து 12 மணி நேரம் இட வேண்டும். அந்த விலங்குகள் ஒவ்வொன்றும் தலா 907 கிராம்கள் இருக்க வேண்டும்.

மிருகங்களுக்கு கூட இத்தகைய தண்டனை வழங்குவதில்லை. மேலும் சிறைச்சட் டம் கூறுகையில் கடுமையான சிறைவாசியாக இருந்தால் கைகளில் மட்டுமல்லாது கால்களிலும் சேர்த்து விலங்கிட வேண்டும் என்கிறது.
சிறைச்சட்டம் தவறு செய்யும் சிறைவாசிக்கு இத்தகைய தண்டனைகளை வழங்கச் சொல்கிறது. அப்படி கொடும் தவறுகள் தான் என்ன? அது குறித்து சிறைச்சட்டம் அத்தியாயம் 18: 297 சிறைக்குள்ளாக மொத்தம் 62 செயல்களை பட்டியலிடுகிறது. அத்தகைய பெரும் குற்றங்களில் ஒரு சில இங்கு உதாரணத்திற்கு தரப்படுகிறது.

18:997 1 ஒரு சிறைவாசி அணிவகுப்பிலோ, கழிவறையிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ பேசுவதும், பாடுவதும் சிறைக்குற்றம்.
16 சிறையதிகாரியின் அனுமதியின்றி கழிவறை அல்லது குளியலறைக்கு செல்வது குற்றம்.
22 கைதிக்கு வழங்கப்பட்ட துணிகளை அணிய மறுப்பது, தொலைப்பது அல்லது பிறருக்கு வழங்குவது குற்றம்.
17 கைதி தன் உரிமைக்காக உண்ணாவிரதம் இருப்பது குற்றம்.
29 எச்சில் துப்புவது மற்றும் சிறையின் சுற்றுப் புறத்தை அசுத்தமாக்குவது குற்றம்.
30 கிணற்றை, கழிவறையை, குளியலறையை அசுத்தமாக்குதல் குற்றம். 51 அனுமதியின்றி சமைத்தல் குற்றம். 54 சோம்பேறித்தனமாக இருத்தல், வேலையில் கவனம் குறைவாக இருத்தல் குற்றம் என்று பெருங்குற்றங்களின் பட்டியல் நீளுகின்றது. படித்தாலே தெரிந்துவிடும் வெள்ளையன் எப்படி இந்தியரை அடிமைப்படுத்தியிருந்தான் என்று. அனுமதியின்றி நின்றால், பேசினால், சிரித்தால், குளித்தால், சாப்பிட்டால், தூங்கினால் இன்னும் கழிவறைக்கு போனால் கூட குற்றம். அதற்கு கடும் தண்டனைகள் வேறு. நமது குடிமக்களை இன்னும் நாம் அடிமைகள் போன்று இக்கறுப்பு சட்டங்களால் கொடுமைப்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசானது ‘உணவு பாதுகாப்பு சட்டத்தை” பாராளுமன்றத்தில் இயற்றியுள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் அனைவரும் தன் பசியாறுவதற்கு தேவையான உணவை பெறுவதற்கு உரிமையுள்ளவர்கள். ஆனால் சிறைச்சட்டம் எஸ் 46 (9)ம் பிரிவு அவ்வுரிமையை சிறைவாசிக்கு மறுக்கிறது.

”தவறு செய்யும் சிறைவாசிகள் உணவை தடுக்கவோ அல்லது குறைக்கவோ சிறையதிகாரிக்கு முழு உரிமையுண்டு”
சிறை விதிப்படி எல்லா சிறைவாசிகளுக்கும் மூன்று வேளையும் அரசு நியமித்துள்ள குறைந்தளவு உணவு தான் வழங்கப்படுகிறது. ஆனாலும் அதிலும் தவறு செய்யும் சிறைவாசிக்கு தண்டனையாக உணவை குறைத்தால் தன் ஆயுளையே சிறையில் கழிக்கும் நபரின் உடல்நிலை சீர்கெட்டு விடாதா? மிருககாட்சி சாலையில் கூட மிருகங்களை இப்படி பட்டினிபோட யாருக்கும் அதிகாரமில்லை. ஆனால் சிறையில் கண்காணிப்பாளர்களுக்கு இவ்வதிகாரம் உண்டு. பாராளுமன்றம் வகுத்த சட்டத்தை மீறி குடி மக்களை கொடுமை செய்யும் அதிகாரம் சிறையதிகாரிக்குண்டு.
இந்தியர்களை சிறுமைப்படுத்த வேண்டும் என்று எல்லா தண்டனை சிறைவாசிகளும் தொடை தெரியும் வகையில் அரைக்கால் டவுசர் அணிய வேண்டும் என்று சட்டம் வகுத்தான் வெள்ளையன். நாமும் அதைப் பின்பற்றி அத்தியாயம் 23: 409, 1ம் பிரிவின் படி எல்லா வளர்ந்த ஆண் சிறைவாசிகளும் அரைக்கால் டவுசர் தான் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்துகிறோம். இன்று பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் கூட முழுக்கால் டவுசர் (பேண்ட்) அணிந்து மானத்தை மறைத்து அழகுடன் செல்கிறது. ஆனால் சிறைவாசிகள் தொடை தெரிய உடையணிந்து தன் பெற்றோர் மற்றும் மனைவி மக்கள் முன் நிற்பது அவர்களை சிறுமைப் படுத்துவதல்லவா? இதை விடக் கொடுமை என்ன வென்றால் சிறைச்சட்டம் அத் தியாயம் 23: 409, 1ம் பிரிவின் படி சிறைவாசிகள் ”கோமணம்” தான் அணிய வேண் டும். நாகரிக உலகில் மனிதன் அணியும் உள்ளாடைகளான ”ஜட்டி ‘ ‘பனியன்” போன்றவற்றை அணிய அனுமதி யில்லை . இன்று கிராம மக்கள் கூட “கோமணம்” அணிவதில்லை . ஆனால் சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றுவரை சிறைவாசிக்கு ”கோமணம்” தான் உள்ளாடையாக அரசால் வழங்கப்படுகிறது.

மேற்கூறிய தண்டனைகள் மற்றும் சட்டங்கள் சிறைவாசியை உடல் ரீதியாக துன்புறுத்தும் தண்டனைகளாகும். இவையனைத்தையும் விட சிறைவாசியை உள ரீதியாக துன்புறுத்தி, அவனது மனநிலையை பிரளச் செய்து, மன பாதிப்பை ஏற்படுத்தி அவனை தானாக தற்கொலை செய்து கொள்ள தூண்டும் மாபெரும் தண்டனை ஒன்று சிறைச்சட்டத்திலுண்டு. அதுதான் ”தனிமைச் சிறை ” (Single Prison) தண்டனை.
10க்கு 8 அடி நீள அகலத்தில் 4 புறத்திலும் சுவரால் கட்டப்பட்டதுதான் ஒரு சிறைவாசியின் ‘கொட்டரை” என்று அழைக்கப்படும் அறையாகும். சிறைச்சட்டத்தின்படி மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் எல்லாசிறைவாசிகளும் இரும்பு கம்பிகள் கொண்ட கதவால் பூட்டப்படுவர். மீதமுள்ள காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 12 மணி நேரம் மட்டுமே ஒரு சிறைவாசி சக சிறைவாசியின் முகத்தை பார்க்கவோ, பேசவோ அனுமதிக்கப்படுவர்.

அன்றைய காலங்களில் மின்சாரம் மற்றும் மின்சார விளக்குகள் கண்டுபிடிக்கப்படாததால் இருள் சூழ்வதற்கு முன்பே சிறைவாசிகளை பூட்டு போட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவர். இன்று மின்சார வசதிகள் பெருகி இரவே பகலாகும் வகையில் மின் விளக்குகள் வந்தபின்பும் தொடர்ந்து 12 மணி நேரம் ஒரு மனிதனை பூட்டி வைப்பது மனித உரிமை மீறலாகும். இப்படி பூட்டுவதால் தான் ஏதேனும் இயற்கை அசம்பாவிதங்களான நிலநடுக்கம், சுனாமி மற்றும் தீ விபத்துகளில் சிறைவாசிகள் தங்கள் உயிர்களை காத்துக் கொள்ள இயலாமல் மண்ணோடு மண்ணாகவும், தீ கட்டைகளாகவும் பலியாகின்றனர். ஹோன்டுராஸ் நாட்டின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 355க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் தீயில் மரணமடைந்து இதுபோன்ற பூட்டி வைக்கப்பட்டதால் தான். சிறைவாசிக்கு இயற்கை பேரழிவிலிருந்தும், தீ விபத்து போன்ற மனிதத் தவறால் ஏற்படும் அழிவுகளிலிருந்து தப்பிக்கவும் இன்றைய சட்டத்தில் இடமில்லை.
ஒரு மனிதனை 12 மணி நேரம் தொடர்ந்து பூட்டுவதே மனித உரிமை மீறல் அதிலும் கொடுமையாக சிறைச்சட்டம் எஸ் 46(8)ம் பிரிவு என்ன கூறுகிறதென்றால்.

”தவறு செய்யும் சிறைவாசியை தொடர்ந்து மூன்று மாதத்திற்கு தனிமை சிறையில் அடைத்து வைக்க வேண்டும்”
மேலும் தண்டனை எப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை கூறுகையில் ‘தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசியிடம் யாரும் பேசவோ, தொடர்பு கொள்ளவோ கூடாது. பூட்டிய நிலையிலேயே அவனுக்கு உணவும் வழங்க வேண்டும்” என்று விளக்குகிறது நமது சிறைச்சட்டம்.

ஒரு மனிதனை சிறையில் அடைப்பதே அவனுக்கு வழங்கும் தண்டனைதான். அதிலும் சிறைக்குள் சிறை என்று தவறு செய்பவரை தனிமை சிறையில் 3 மாதத்திற்கு அடைத்து வைத்தால் அவனது மனநிலை என்னவாகும்? மனிதவாசமே படாமல் 10க்கு 8 அடி அறையில் 3 மாதம் அடைத்து அவன் பைத்தியமாகாமல் தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்தால் அவன் மாபெரும் மனவலிமை படைத்தவனாகத்தான் இருக்க முடியும்!

இதனால் தான் சிறையில் அதிகமான தற்கொலைகள் நிகழ்கின்றன அல்லது நிகழ்த்தப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் தமிழக மத்திய சிறைச்சாலைகளில் மட்டுமே 60 க்கும் மேற்பட்ட தற்கொலை என்று கூறப்படும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் தமிழக மத்திய சிறைகளில் ஏற்பட்ட தற்கொலை என்று கூறப்படும் மரணங்களின் பட்டியல் (2001 – 2011 வரை பார்க்க அட்டவணை)


மேற்காணும் புள்ளி விவரங்கள் தமிழகத்தின் 9 மத்திய சிறைச்சாலைகளுடையது மட்டுமே. இன்னும் தமிழகமெங்குள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்ட தற்கொலைகளை கணக்கிட்டால் இப்புத்தகம் போதாது. இப்படி வருடந்தோறும் பல உயிர்களை பலி வாங்கும் சிறைச்சட்டத்தை சீர்திருத்தம் செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

தற்கொலைக்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும் அதில் முதன்மையானது சிறைவாசிக்கு ஏற்படும் மன அழுத்தமாகும். சிறைச்சட்டம் 10:114 ன் படி அனைத்து மத்திய சிறைகளிலும் மனநல மருத்துவர் பணியமர்த்தப்பட வேண்டியது கட்டாயமாகும். ஆனால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி இக்கட்டுரையாளர் சிறைத்துறைத்தலைவரிடம் தகவல் கோரியபோது வெளியான தகவல் நம்மை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சில மத்திய சிறையை தவிர மற்ற எந்தச் சிறையிலும் மனநல மருத்துவர் பணியமர்த்தப்படவில்லை . இது குறித்தான விழிப்புணர்வை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கட்டுரையாளர் ஏற்படுத்திய பின்புதான் அரசின் பார்வைக்கு சிறைத்துறைத் தலைவரால் கொண்டு செல்லப்பட்டு தற்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்து சிறைகளிலும் மனநல மருத்துவர் பணி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இது வரவேற்கப்பட வேண்டியது. அதே சமயம் சிறைச்சட்டத்தை நவீன காலத்திற்கு ஏற்ப மனித உரிமைகளை மதிக்கும் விதமாகவும், தற்கொலைகளை தடுக்கும் விதமாகவும் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாகவும், குற்றவாளி சீர்திருந்தும் விதமாகவும் செய்ய வேண்டிய அவசரத் தேவை குறித்து இவ்வரசு பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுத்தல் அவசியமாகும்.

சிறைச்சட்டத்தில் முக்கியமாக செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் இன்னும் பலவுண்டு. தற்போதைய சிறைச்சட்டம் சிறைவாசியின் உழைப்பை உறிஞ்சும் வண்ணம் உள்ளது. மற்ற மனிதர்கள் போன்று தண்டனை பெற்ற சிறைவாசிகள் சிறையிலுள்ள தொழிற்கூடங்களில் 8 மணி நேரம் வேலை செய்தாலும் இன்னும் அறிவிக்கப்படாமல் 2 மணி நேரம் அதிகமாக வேலை செய்தாலும் இவர்களுக்கு வழங்கப்படும் கூலி மிகக் குறைவாகவுள்ளது.

சென்ற சில மாதங்கள் வரை ஒரு நபருக்கு ரூபாய் 13 முதல் 189 வரை தான் தினச்சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது தான் அரசு ஏதோ ஒரளவு உயர்த்தியுள்ளது. சிறைச்சட்டத்தின் படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் குறித்து மறுஆய்வு செய்து அதனை உயர்த்த வேண்டும். ஆனால் சுதந்திரம் கிடைத்த 63 ஆண்டுகளில் இவர்களின் சம்பளம் மட்டும் ஏறவே இல்லை. இதைவிட கொடுமை என்னவென்றால் வழங்கப்படும் குறைவான கூலி கூட சிறைவாசிக்கு முழுமையாக உரியதல்ல. ஆமாம்! சிறை விதி 481: (1,2,3)ன் படி ”ஒரு சிறைவாசியின் வருமானத்தில் 50% சிறைவாசியை பராமரிப்பதற்காக அரசு எடுத்துக்கொள்ளும். 20% சிறைவாசியால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்டு விடும். மீதி 30% மட்டுமே சிறைவாசிக்கு உரியது.

சிறைவாசி மாதம் 100 ரூபாய் சம்பாதித்தால் அவருக்கு 30 ரூபாய் மட்டுமே வழங்கப்படும். இப்படியாக சுரண்டல் சட்டமாக அரங்ககேற்றப்படுகிறது. ஒருவர் செய்யும் குற்றத்திற்கு 2 முறை தண்டிக்கப்படக்கூடாது என்று இந்திய நீதித்துறை சட்டம் வகுத்துள்ளது. ஒருவன் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படும் போதே அவருக்கு அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. அதை கட்டத் தவறினால் எவ்வளவு காலம் சிறையில் கழிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
இந்நிலையில் மற்றொரு தண்டனையாக சிறைவாசி தன் ஆயுள் காலமெல்லாம் சிறையில் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் 70% அரசு எடுத்துக்கொண்டால் 30% பணம் அவனது குடும்பத்தின் ஏழ்மையை எப்படி போக்கும்? இதனால் தான் பலர் சிறையில் தவறாக பொருளீட்டும் வழிமுறைகளை கையாள்கின்றனர். கஞ்சா, பீடி போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்றாவது வறுமையில் வாடும் குடும்பத்தினரை காக்க வேண்டும் என்ற மனநிலைக்கு சிறைவாசி தள்ளப்படுகின்றான்.

வெள்ளையன் அடிமைகளான நம்மை பராமரிக்க சிறைச்சட்டத்தில் 50% பராமரிப்பு வரியாக பெற்றான். நாம் சுதந்திர குடிமக்களிடம், அவன் குற்றம் செய்தான் என்று 14 முதல் 20 ஆண்டு சிறையில் அடைத்த பின்பு அவனை பராமரிக்க அவனிடமே வரி கேட் டால் இது என்ன சுதந்திர இந்தியாவா? அல்லது அடிமை இந்தியாவா? அதிகமான கூலி கொடுத்தால் கூட பரவாயில்லை . 20 ரூபாய் 30 ரூபாய் என்று வழங்கிவிட்டு அதிலும் 70% திரும்ப எடுத்துக்கொண்டால் சிறைவாசியின் குடும்பத்தினரை யார் பாதுகாப்பர்?

அடுத்ததாக சிறைச்சட்டத்தில் முக்கியமான சீர்திருத்தம் செய்ய வேண்டியது சிறைவாசிக்கு வழங்கப்படும் விடுப்பு (பரோல்) சட்டத்திலாகும். சர்வதேச விதிகளின்படி பரோல் எதற்காக சிறைவாசிகளுக்கு வழங்கப்படுகிறதெனில் ஒருவனை 14 முதல் 20 ஆண்டுகள் வரை 10க்கு 8 அடி அறையில் பூட்டி வைத்த பின்பு திடீரென்று ஒருநாள் “உனக்கு விடுதலை” என்று வெளியே விட்டால், அவனது மன நிலை சமூகத்தை விட்டும் 20 ஆண்டுகள் பின் தங்கி இருக்கும்.

மேலும் அவனது குடும்பத்திலும் பிறப்பு மற்றும் இறப்பு என்று பல சுப மற்றும் அமங்கள காரியங்கள் நிகழ்ந்திருக்கும். இதனால் அவன் மனபாதிப்புக்குள்ளாகி விடக்கூடாது என்றும், சமூகத் தோடு இணைந்து வாழ அவனை தயார் செய்யும் விதமாகவும், அவனை பிரிந்து வாடும் குடும்பத்தினரின் உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் விதமாக வும் தான் ஒர் சிறைவாசிக்கு வருடத்தில் சில நாட்கள் தன் குடும்பத்தினரை கண்டுவர அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பாசம், அன்பு அவன் மனதில் ஏற்படும் அவனது மன மாற்றத்திற்கு பரோல் உதவுகிறது. ஆனால் நமது சிறைச்சட்டங்கள் பரோலின் உண்மையான நோக்கத்தையே மறந்து சட்டங்களை கடுமையாக்கி சிறைவாசிகளை துன்புறுத்துகின்றன.
தமிழக சிறைச்சட்டம் 1982 (9) ன்படி ஒரு சிறைவாசியை அவசரகால விடுப்பில் அனுமதிக்க வேண்டுமெனில் அவனது பெற்றோர் அல்லது நெருங்கிய இரத்த உறவை சேர்ந்த சகோதர, சகோதரி எவருக்கேனும் ”உடல் நிலை மிக ஆபத்தாக” உள்ளது என்று மருத்துவர் சான்றளித்தால் மட்டுமே அவன் பரோல் செல்ல அனுமதிக்கப்படுவான். எனவே தற்போதைய தமிழக சிறைச்சட்டம் சாகும் தருவாயிலுள்ள பெற்றோரை அல்லது சகோதர சகோதரிகளை பார்ப்பதற்கு மட்டுமே அனுமதிக்கிறது. மாறாக நல்ல நிலையிலுள்ள குடும்பத்தாரை காணவோ, சிறைவாசியை சமூகத்துடன் இணைந்து வாழ தயார் செய்யும் விதமாகவோ, குடும்பத்தில் நிகழும் சுப காரியங்களில் பங்கேற்கவோ அனுமதியில்லை.

ஒரு சிறைவாசி தன் பெற்றோரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று மருத்துவரின் சான்றிதழை சமர்பித்து விடுப்பு கோரினால் சிறை நிர்வாகத்தார் அதனை அவனது பகுதி காவல் நியைத்திற்கும், நன்னடத்தை அலுவலருக்கும் அனுப்பி பரிசோதித்து இரண்டுபேரும் தடையில்லா சான்றிதழ் வழங்கினாலே சிறைவாசி விடுப்பில் செல்ல முடியும். எனவே பல சிறைவாசிகள் மிக மோசமாக உள்ள பெற்றோரை காண விடுப்பு கோரி அது தாமதமாகி இறந்த பெற்றோரை காணவே விடுப்பில் அனுமதிக்கபபடுகின்றனர்.

இதனை விடக்கொடுமை என்னவென்றால் சிறைவாசி தன் குடும்பத்தினரின் ஈமச்சடங்கு அல்லது சுபகாரியங்கள் என்று எந்த விடுப்பில் சென்றாலும் அது அவனது தண்டனையில் கழியாது. சிறைவாசி வெளியில் சென்ற நாட்கள் சிறையில் மீண்டும் கழித்தால் மட்டுமே அவனது தண்டனை பூர்த்தியாகும். எங்கே உள்ளது சீர்திருத்தம்? குடும்பத்தினரை காணச் செல்லும் சில நாட்களை அவனது தண்டனையில் கழித்தால் என்ன வானம் இடிந்து விடுமா? மேலும் தற்போதைய சட்டப்படி சிறைவாசி வருடத்தில் முதலில் ஆறு நாட்களும், பின்பு மூன்று நாட்கள் என்று மூன்று முறையும் பரோலில் அனுமதிக்கப்படுகிறார்.

மற்ற அயல்நாடுகளில் எல்லாம் சிறைவாசிகள் 30 நாட்கள் பரோல் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே நமது சிறைச்சட்டம் 15 நாட்களை 30 நாட்களாக உயர்த்தியும், அதன் சட்ட வழிமுறைகளை எளிதாக்கியும் சிறைவாசி எளிதில் தன் குடும்பத்தினரை மருத்துவரின் சான்றிதழ் இன்றியே நேரில் கண்டுவர அனுமதிக்கப்பட வேண்டும். மதுரை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் “விடுப்பில் செல்லும் சிறைவாசியின் நாட்களையும் அவனது தண்டனையில் கழிக்க வேண் டும் என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. எனவே அதனை பின்பற்றி தற்போதைய சிறைச்சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும்.

இக்கொடுமையிலும் பாரபட்சம் என்னவெனில் சமூக வழக்கில் சிறைப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை எப்போதும் போலீஸ் காவலுடன் தான் விடுப்புக்கு அனுமதிக்கின்றனர். மற்ற சிறைவாசிகள் 3 ஆண்டுகள் தண்டனையில் கழித்து விட்டாலே வழிக்காவல் இன்றி விடுப்பு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 30 காவலர்கள் ஆயுதங்கள் புடை சூழ நோய்வாய்ப்பட்ட பெற்றோரை ஒருவன் காணச் சென்றால் அவர்களின் பெற்றோரின் உள்ளம் எவ்வளவு வேதனைப்படும் மேலும் அவனை வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல் தான் இச்சமூகம் இன்றும் பார்க்கிறது.

எழுதப்படாத சட்டமான முஸ்லிம் சிறைவாசிகளை வழிக்காவலுடன் தான் விடுப்பில் அனுமதிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி மற்ற சிறைவாசிகள் போன்று அவர்களும் தன் குடும்பத்தினரை காணவும், இச்சமூகத்துடன் இணைய வாய்ப்பளிக்கும் விதமாகவும் வழிக்காவலின்றி விடுப்பு வழங்குவதே நீதிக்கு வழங்கும் மரியாதையாகும்.
இறுதியாக, இந்தியத்திருநாட்டில் ஆயுள் தண்டனை என்பது இன்று வரை வரையறுக்கப்படாத ஒன்றாகும். வெள்ளையன் சுதந்திரத்திற்காக போராடியவர்களை அந்தமான் தீவுச்சிறை, பர்மா என்று நாடு கடத்தி அங்குள்ள சிறைச்சாலைகளில் ஆயுள் முழுவதும் சிறைவைத்தான். மரணம் மட்டுமே அவர்களின் விடுதலையாக இருந்தது. அந்தக் கறுப்பு சட்டத்தை அப்படியே இன்று வரை சிறு மாற்றத்துடன் பின்பற்றி வருகிறோம். இன்று நாடு கடத்தலில்லை. ஆனால் மத்திய சிறைகளில் மரணம் வரை கழிப்பதே ஆயுள் தண்டனையாகும். அயல் நாடுகளில் எல்லாம் ஆயுள் தண்டனை என்பதை 7 முதல் 10 ஆண்டுகள் என்று வரையறுத்துள்ளனர். இந்தியா இன்று வரை வரையறுக்கவில்லை என்பது நமது நாகரிகத்திற்கு கேடான ஒன்று.

அரசியல் சாசனம் 164ன் படி மத்திய மாநில அரசுகளுக்கு சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யும் அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. அச்சட்டத்தை பின்பற்றியே மத்திய, மாநில அரசுகள் சுதந்திர தினம், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் பிறந்த தினத்தில் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் பொதுமன்னிப்பில் விடுதலை செய்கின்றனர். இருப்பினும் பொதுமன்னிப்பிற்கு தகுதி பெற சில விதிமுறைகளை மத்திய, மாநில அரசுகளும் மற்றும் சிறைச் சட்டமும் வகுத்துள்ளன.

அதன் கீழ் வருபவர்கள் மட் டுமே தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுவர். சில குறிப்பிட்ட பிரிவுகளில் தண்டனை பெற்றவர்கள் பொதுமன்னிப்பு பெற இயலாது. இத்தகையவர்களுக்கு பொது மன்னிப்பும் கிடையாது. மேலும் ஆயுள் தண்டனையும் வரையறுக்கப்படாததால் இன்று தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் கழித்த பின்பும் நட மாடும் சவங்களாக பலர் விடியலின்றி வாழ்ந்து வருகின்றனர்.

பொது மன்னிப்பு என்பதே கருணையின் அடிப்படையில் விடுதலை செய்வதாகும். கருணையிலும் பாரபட்சம் என்று சில குறிப்பிட்ட பிரிவுகளை மட்டும் தவிர்ப்பது நியாயம். என்ன அந்த சிறைவாசிகள் மன மாற்றம் அடையமாட் டார்களா என்ன? இயற்கைக்கு மாற்றமாக மரணம் வரை ஒருவனை 10க்கு 8 அடி அறையில் தடுத்து வைப்பது ஒர் ஜனநாயக சுதந்திர நாட்டிற்கு கேவலமாகும்.

தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் ஒரு சிறைவாசியின் மனமாற்றத்திற்கு 7 ஆண்டுகள் அவனை சிறைவைத்தாலே போதும் என்று கூறியுள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் சிறை சிர்திருத்தத்திற்காக வேண்டி அமைத்த “முல்லா கமிஷன்” தனது அறிக்கையில் ஒரு சிறைவாசியை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைத்தால் அவனது மனோநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. எனவே ஆயுள் தண்டனையை 8 ஆண்டாக வரையறுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இன்று வரை மத்திய, மாநில அரசுகள் அந்த முல்லா அறிக்கையின் படி தமது சிறைச்சட்டங்களை சீர்திருத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றன.

பொது மன்னிப்பு வழங்காமல் தடுக்கப்படுபவர்களில் அதிகமானோர் சமூக வழக்கில் சிறைப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளாவர். 2008 ம் ஆண்டு முந்தைய தி.மு.க அரசு 7 ஆண்டுகள் கழித்த 1405 சிறைவாசிகளை பொது மன்னிப்பில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு பிறந்த தினத்தில் விடுதலை செய்தது. ஆனால் 14 ஆண்டுகள் கழித்து விட்ட முஸ்லிம் சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்யவில்லை. நீதி தேவதை தராசு முற்றிலும் நடுநிலை தவறியது. பொது மன்னிப்பும் பொருந்தாது. ஆயுள் தண்டனையும் வரையறுக்கப்படவில்லை . இப்படி அவர்கள் உயிரோடு சிறையில் சமாதியாக்கப்படுகின்றனர்.

சபூர் ரஹ்மான், தஸ்தகிர் என்று ஒவ்வொரு உயிராக சிறைகளிலிருந்து மரணம் மூலம் விடுதலை பெற்றுள்ளனர். மற்றவரும் மரணம் மூலம் தான் விடுதலை பெற இயலுமா? தண்டனையின் கால அளவை வரையறுக்காமல் தண்டிப்பது கொடுமையின் உச்சகட்டம்.

உச்சநீதிமன்றம் கைதிக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. எனவே அதற்கேற்ப சிறைச்சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும். சிறைச் சட்டத்தின் படி ‘விடுதலை பரிந்துரைக்குழு’ ஒன்று உள்ளது. அதில் மாவட்ட ஆட்சித்தலைவர், செசன்ஸ் நீதிபதி, காவல்துறை மாநகர ஆணையர், சிறைத்துறை கண்காணிப்பாளர், சிறைத்துறை தலைவர், நன்னடத்தை அலுவலர் மற்றும் அவரால் நியமிக்கப்படும் சிலர் அக்குழுவில் இடம் பெற்றிருப்பர். 14 ஆண்டுகள் கழித்து விட்ட சிறைவாசிகளை விடுதலை குறித்து இக்குழு பரிசீலிக்கும். ஆனால், அதிலும் சில விதி விலக்குகள் சில குறிப்பிட்ட பிரிவுகளில் தண்டனை பெற்றவர்களை இக்குழு பரிசீலிக்காது. மேலும் 14 ஆண்டுகள் சிறை நிர்வாகத்திற்கும், அரசுக்கும் கீழ்படிந்து அடிமைபோல் சேவகம் புரிந்தவர்களுக்கு மட்டுமே இக்குழு விடுதலைக்கு பரிந்துரைக்கும். அப்பரிந்துரையை அரசு நினைத்தால் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

தமிழகத்தில் விடுதலைப் பரிந்துரைக் குழு மூலம் விடுதலை பெற்றவர்கள் மிக சொற்பமானவர்களே. காரணம் நடைமுறைச்சிக்கல் இக்குழுவில் உள்ள அனைவரும் ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் பெரும் பொறுப்பு பெற்றவர்கள். முதலில் இக்குழு ஆலோசனைக்காக அமர்வதே அரிது. மாவட்ட ஆட்சியர் வந்தால் நீதிபதி அவர்களுக்கு வேறு முக்கிய பணியிருக்கும், நீதிபதி வந்தால் காவல்துறை ஆணையருக்கு அதை விட முக்கிய பணியிருக்கும். எனவே இவர்கள் ஒன்றிணைந்து சிறைவாசிகளின் விடுதலை குறித்து பரிசீலிப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான்.
மேலும் இக்குழுவில் பிரதானமாக காவல் துறை மற்றும் சிறைத்துறையினரின் கருத்தின்படியே முடிவெடுக்கப்படும். ஒரு வழக்கில் காவல்துறை சொல்லும் கூற்றுப்படி தீர்ப்பளித்தால் இன்று இந்திய நீதிமன்றங்கள் அனைத்து வழக்கையும் அவர்கள் சார்பாகத்தான் தீர்ப்பளிக்க இயலும். என்றைக்காவது காவல்துறை மற்றும் சிறைத்துறை சிறைவாசிகளை குறித்து நற்சான்று அளித்துள்ளதா? எனவே ‘இவ்விடுதலை பரிந்துரைக்குழு” என்பது இன்று கண்துடைப்பாகத்தான் உள்ளது. அயல்நாடுகளில் (சைக்காலஜி) மனோதத்துவ மற்றும் உள வளக்கலை அறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துப்படி தான் விடுதலைப் பரிந்துரைக் குழு பரிந்துரைக்கும். ஏனெனில் அவர்களுக்குத் தான் சிறைவாசியின் மன, உடல் மற்றும் குடும்பச்சூழல் நன்றாக தெரியும். எனவே நமது சிறைச்சட்டமும் அதன்படி சீர்திருத்தப்பட வேண்டும்.
ஒருவன் சிறு அறையில் 14 ஆண்டுகளுக்கு சிறை வைக்கப்படும் போதும் மன அழுத்தத்தின் காரணமாக கோபம் மேலிடும் சமயம் மற்ற சிறைவாசியோடு சண்டையிடுவது, பிரிந்த குடும்பத்தினரை தொடர்பு கொள்ள மொபைல் பயன்படுத்துவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு விடுகிறான். சிறைவிதிகளுக்கு புறம்பான இக்காரியங்களுக்கு சிறை நிர்வாகத்தார் முன்பு நாம் கண்டது போல் சிறை தண்டனைகளான தனிமைச் சிறை, கசையடி, உணவை குறைத்தல், விடுப்பை நிறுத்துதல், 3 மாதத்திற்கு மனுவில் தன் குடும்பத்தினரை காண தடை என்று தண்டித்தும் மேலும் வழக்கும் பதிவு செய்திடுவர்.
அவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றமும் தன் பங்கிற்கு குற்றத்திற்கு ஏற்றவாறு தண் டனை விதிக்கிறது. இவையனைத்திற்கும் மேலாக “விடுதலை பரிந்துரைக்குழு” 14 ஆண்டுகள் கழிந்த பின்பும் சிறைவாசியின் விடுதலை குறித்து பரிசீலிக்கும் போது அவன் மீது சிறையில் ஏதேனும் சிறு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் கூட அவன் விடுதலைக்கு தகுதியற்றவன் என்று முடிவு செய்கிறது. ஒரு குற்றத்திற்கு இருமுறை தண்டிக்கப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஒரு தவறுக்கு சிறைவாசிக்கு சிறை நிர்வாகத்தாரின் தண்டனை, நீதிமன்றத்தின் தண்டனை, மேலும் விடுதலை பரிந்துரைக் குழுவின் தண்டனை என்று மூன்று முறை தண்டிக்கப்படுவது அப்பட்டமான அநீதி. எனவே ஏற்கனவே தனது குற்றத்திற்காக தண்டனை பெற்றுவிட்டதால் அவனது விடுதலையை தடை செய்யாது கருணை அடிப்படையில் சிறைவாசியை விடுதலை செய்யும் வகையில் ‘விடுதலைப் பரிந்துரைக் குழு” சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். நாம் மேற்கண்டவை அனைத்தும் ”
சிறை” எனும் அழுகிய உடலின் ஒர் சிறு அங்கமே. ஒட்டு மொத்தமாக உடலே புரையோடி சீழ் பிடித்து நாற்றம் வீசுகிறது. எனவே அங்கொன்று இங்கொன்று என்று சில மாறுதல்கள் செய்யாது ஒட்டுமொத்தமாக சிறைச்சட்டங்களை ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் நவீன காலத்திற்கேற்ப சீர்திருத்தம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். சிறை என்பது சமூகத்தின் ஒர் அங்கம். சிறை எனும் சமூகத்தின் ஓர் உறுப்பு அழுகி விட்டால் அதன் பாதிப்பு சமூகம் எனும் உடலில் நிச்சயம் வெளிப்படும். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் உடனடியாக அரசு ஒர் ”சிறைச் சட்ட சீர்திருத்தக் குழு” அமைக்க வேண்டும்.

அது 1980ல் முல்லா கமிஷன் பரிந்துரைத்த சிறைச் சட்ட சீர்திருத்தத்தை ஏற்று இன்னும் 30 ஆண்டுகள் கழிந்துவிட்டதால் நவீன காலத்திற் கேற்ப என்ன சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று ஆய்வு செய்து அயல்நாட்டு சிறைச்சட்டங்களையும் ஆய்வு செய்து, மனித உரிமைகளை மதிக் கும் விதமாகவும், ஜனநாயகத்தையுகாக்கும் வித மாகவும், சிறைப்பட்டோர் சீர்திருந்தும் விதமாகவும் சிறைச்சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும். அக்குழுவின் அறிக்கையை அரசு கிடப்பில் போடாமல் அவைகளை ஏற்று உடனடியாக அமல் செய்ய வேண்டும். மேலும் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறைச்சட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் அக்குழுவானது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மனோதத்துவ நிபுணர்கள், மிகச் சிறந்த கல்வியாளர்கள், நன்னடத்தை அலுவலர்கள் ஆகியோரால் அமைக்கப்பட வேண்டும்.
பல அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் தற்போதைய அரசு இப்பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டு சிறைக்கு சீர்திருத்தத்தை வழங்க வேண்டும்.

ஜூன் 2012

வழக்கறிஞர் A. முகம்மது யூசுப்

தேசிய செயலாளர், NCHRO