முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் மருத்துவ சேவைகள்!

கொரோனா இந்தியாவில் முஸ்லிம்களால்தான் பரப்பப்படுகிறது என்ற சங்பரிவார் அமைப்புகளின் பிரச்சாரத்துக்கு பொதுமக்கள்  மட்டுமல்ல  பல மருத்துவமனைகளும் மருத்துவர்களும் பலியாகியுள்ளனர் . அதனால் தமிழ் முஸ்லிம் சமூகம் அடைந்த பல்வேறு இன்னல்கள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தால் மட்டுமே வெறுப்புக்கு உள்ளாக்கப்பட்ட சமூகம் இப்பொழுது பொய் பிரச்சாரத்தால் ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பு உணர்வுகளுக்கும் உள்ளாகி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவிக்கு அதிரை ஷிபா மருத்துவமனையில் மகப்பேறு நடைபெற இருந்தது. இவருக்கு A1 பாசிட்டிவ் வகை இரத்தம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக சாகுல் ஹமீது தஞ்சையில் உள்ள தனியார் இரத்த வங்கிக்கு தொடர்பு கொண்டு ‘இரத்தம் உள்ளதா?’ என கேட்டுள்ளார். போனை எடுத்து பேசிய இரத்த வங்கி ஊழியர், அதிராம்பட்டினம் என்றவுடன் ‘இரத்தம் இல்லை’ என்கிறார். அதற்கு சாகுல் ஹமீதோ, தன்னிடம் இரத்த தானம் செய்யும் DONORகள் இருவர் உள்ளதாக கூறுகிறார். அதற்கு பதிலளித்த இரத்த வங்கி ஊழியர் தங்களிடம் இரத்தம் சேகரிக்கும் பை இல்லை எனக்கூறிவிட்டு சாகுல் ஹமீதுவின் தொலைபேசி விபரங்களை கேட்டுவிட்டு போனை துண்டித்தார்.

இதனால் சந்தேகமடைந்த சாகுல் ஹமீது, தனது நண்பரை மீண்டும் அதே இரத்த வங்கிக்கு தொடர்பு கொண்டு அதே வகை இரத்தம் கேட்க சொல்கிறார். அதற்கு இரத்த வங்கி ஊழியர் எந்த ஊர் என்று விசாரிக்க இம்முறை ‘வல்லம்’ என்கிறார் சாகுல் ஹமீதின் நண்பர். தங்களிடம் இரத்தம் இருப்பதாக கூறும் அந்த ஊழியர் மருத்துவமனையின் அனுமதி பெற்றவுடன் இரத்த சேகரித்து செல்லலாம் என்கிறார்.

தஞ்சை காளி இரத்த வங்கியில் இதே போன்ற ஒரு சம்பவத்தை தான் அண்மையில் எதிர்கொண்டதாக அதிராம்பட்டினத்தை சேர்ந்த வழக்கறிஞர் முஹம்மது தம்பி தெரிவித்தார். தஞ்சை காளி இரத்த வங்கிக்கும் அதிராம்பட்டினத்துக்கும் நீண்ட தொடர்பு உண்டு. அதிராம்பட்டினத்தில் இயங்கும் பன்னாட்டு NGOக்கள் விளம்பரத்துக்காக நடத்தும் இரத்ததான முகாம்கள் பெரும்பாலானவற்றில் இந்த இரத்த வங்கி இணைந்து இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இரத்ததான முகாம்களின் மூலம் காளி இரத்த வங்கிக்கு இந்த ஊர் மக்களின் பல ஆயிரம் யூனிட் இரத்தம் கிடைத்துள்ளது. இதை வைத்து வருமானம் ஈட்டி வரும் காளி இரத்த வங்கி அந்த மக்களுக்கே துரோகம் செய்யும் வகையில் நடந்துள்ளது.

கொரோனாவை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி மதவெறியர்கள் பரப்பிய வதந்தியால் பல மருத்துவமனைகளில் இஸ்லாமியர்களுக்கு பிரசவம் போன்ற அவசர சிகிச்சைகள் மறுக்கப்படுகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது குணமடைந்து வரும் தப்லீக் ஜமாத்தினரின் இரத்தத்தை சேகரித்து பிளாஸ்மாவை எடுத்து கொரோனாவுக்கு நிவாரணமாக வழங்கி வருகின்றனர். இதுபற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத காளி இரத்த வங்கி போன்ற மருத்துவ நிறுவனங்கள் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு இரத்தம் கொடுக்கவும், அவர்களின் இரத்தத்தை சேமிப்புக்காக பெறவும் மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இரத்ததான முகாமின் பின்னணியில் மிகப்பெரிய அரசியலும், பொருளாதார ஆதாயமும் இருக்கிறது. இதனை எளிமையாக நடத்தி மக்கள் இரத்தத்தை உறிஞ்சி இதுபோன்ற தனியார் இரத்த வங்கிகளுக்கு வழங்கி விட்டு, புகழ்பெற விரும்பும் போலி சமூக ஆர்வலர்கள், NGO-க்கள் இதுபற்றி இனியேனும் சிந்திப்பார்களா?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ராஜம் மருத்துவமனையில் முஸ்லிம் பெண் ஒருவருக்கு முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக பிரசவம் பார்க்க மறுக்கப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையில் புகார்  அளித்துள்ளனர். இது தவிர அதிராம்பட்டினம் மற்றும் பாபநாசத்தை சேர்ந்த இரண்டு முஸ்லிம் பெண்களும் இதே காரணத்திற்காக மருத்துவம் மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் பேகம்பூரை சார்ந்த   நூருல்  அம்மு, அனிஸ், ஷாகிரா, நாகிரா  ஆகிய நான்கு கர்ப்பிணி பெண்கள் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் கடந்த ஒன்பது மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தனர்.பேகம்பூர் பகுதியில் கொரோனா தொற்று  அதிகம் உள்ள காரணத்தால் இந்த ஊரில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பராமரித்து வந்தனர். இதனால் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் 4 கர்ப்பிணிப் பெண்களையும் கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்த்தது. இந்த சம்பவத்தை அறிந்து இஸ்லாமிய அமைப்புகள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து மருத்துவத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து ஒரு பெண்ணை தவிர மற்ற மூன்று கர்ப்பிணிப் பெண்களும் பிரசவ பிரிவுக்கு மாற்றப்பட்டனர் . அங்கு அவர்கள்  மூன்று பேருக்கும் குழந்தைகள் பிறந்தன.

திண்டுக்கல் அஸ்தினாபுரத்தை சார்ந்த இஸ்மாயில் என்பவர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிக்கும் ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு மறுத்துள்ளது இது சம்பந்தமாக டிஎன்டிஜே திண்டுக்கல் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இதுபோன்ற சிகிச்சை மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெறவில்லை.

இதுபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் கை வலி காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு செல்கிறார் .அங்கே  அவரிடம் பெயரை கேட்டு விட்டு அவர் முஸ்லிம் என்ற காரணத்தினால் டோக்கன் கொடுக்க மறுத்து விடுகின்றனர். அவர் எவ்வளவோ வாக்குவாதம் செய்தும் டோக்கன் முடிந்துவிட்டது என்று மருத்துவம் பார்க்க மருத்துவிட்டனர். இதுபோல் சாதாரண மருத்துவம் பார்க்கச் செல்லும் முஸ்லிம்களும் வெறுப்பு பிரசாரத்தால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரத்தில் உள்ள கல்யாணசுந்தரம் பல் மருத்துவமனைக்கு சதாம் என்பவர் பல்வலி சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவருக்கும் சிகிச்சை மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் அன்னதானப்பட்டியை சார்ந்த ஜாவித் – சல்மா என்ற தம்பதிக்கு திருமணமாகி இரண்டு வருடம் ஆகிறது. 7 மாத கர்ப்பிணியான இவர்  சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். லதா என்ற டாக்டர் தான் அவருக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்த மாதம் அவர் சிகிச்சைக்கு செல்லும் போது மருத்துவம் பார்க்க மறுத்ததோடு “நீங்கள் டெல்லிக்கு சென்று வந்துள்ளீர்களா? உங்கள் ஆட்களால்தான் கொரோனா பரவுகிறது” என்று மோசமாக பேசியுள்ளார். வழக்கமாக எடுக்கும் ரத்த பரிசோதனை கூட எடுக்கப்படாமல் அவருடைய உடல்நிலை பற்றி எதுவும் கேட்கப் படாமலே அவர் விரட்டப் படுகிறார். இது குறித்து  மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று காங்கேயம் திவ்யா மருத்துவமனையிலும் கர்ப்பிணி முஸ்லிம் பெண்ணிற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் திருமலைபட்டியை சார்ந்த அப்துல் கரீம் என்பவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. புதன்சந்தை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற அவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இரவில் நாமக்கல்லை நோக்கி செல்லும் வழியில் அக்சயா மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்றுள்ளார். அவருடைய பெயரை கேட்டுவிட்டு முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் “நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டனர்.

அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறி. அரவிந்த் ஹாஸ்பிடல் மணி டாக்டருக்கு பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் அங்கு ‘நீங்கள் முஸ்லிமா? டெல்லி சென்று வந்தீர்களா?’ என்று கேட்டு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். வலியால் அவதிப்பட்ட அப்துல் கரீம் சிகிச்சை பெறாமலேயே ஊருக்கு திரும்பியுள்ளார். மறுதினம், அரசு மருத்துவமனையின் டீனை தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நடந்த தவறுக்காக தனது வருத்தத்தை தெரிவித்த டீன், அப்துல் கரீமிடம் ஒரு புகாரை பெற்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பினார். இதனை தொடர்ந்து அமைச்சர் தங்கமணி மற்றும் எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனையின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.

இதுபோல் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த ஜுவைரியா என்ற கர்ப்பிணி பெண் பாளையங்கோட்டையில் உள்ள அன்னபாக்கியம் என்ற தனியார் மகப்பேறு மருத்துவமனையில் 9 மாதங்களாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். பிரசவ வலி வரவே அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் முஸ்லிம் என்ற காரணத்தினால் மருத்துவம் பார்க்க மறுக்கப்பட்டதாக அவருடைய உறவினர்கள் கூறுகின்றனர். பின்பு மேலப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றெடுத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த கிருஷ்ணா மருத்துவமனையில் “நாங்கள் கடையநல்லூர் ,மேலப்பாளையம், காயல்பட்டினத்தை சார்ந்த முஸ்லிம்களுக்கு மருத்துவம் பார்ப்பதில்லை, அது மருத்துவமனை ரூல்ஸ்” என்றும் கூறியுள்ளனர். திருநெல்வேலியில் லட்சுமி மாதவன்  மகப்பேறு மருத்துவமனைக்கு (டாக்டர் மதுபாலா) காயல்பட்டினத்தைச் சார்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம், காயல்பட்டினம், கடையநல்லூர் போன்ற ஊர்களில் இருந்து வருபவர்களை அனுமதிக்கக்கூடாது என்று கலெக்டர் ஆபீசில் இருந்து தொடர்ச்சியாக தொலைபேசிகள் வருவதாக அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர்.

பழனியில் டெல்லி மாநாடு சென்ற ஐந்து நபர்களுக்கு கொரோனா வந்ததால் அதை காரணம் காட்டி பழனியில் உள்ள எருமைகார தெரு மற்றும்  ஒட்ட தெருவிற்கு செல்லும் சாலைகளை அடைத்து, இந்த வழியாக முஸ்லிம்கள் யாரும் வரக்கூடாது என்று தடுப்பு அமைத்துள்ளனர். இது சம்பந்தமாக எஸ்டிபிஐ கட்சி காவல்துறையிடம் புகார் செய்துள்ளது

பழனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், குழந்தைகள் நல மருத்துவர் ஜபருல்லாவிற்கு  சொந்தமான வீட்டில் வாடகைக்கு உள்ளார் .இதை பயன்படுத்தி இந்துத்துவ வெறியர்கள் டாக்டர் ஜபருல்லா விற்கு எதிராக வதந்திகள் பரப்பினர். பாப்புலர்  ஃப்ரண்ட் நிர்வாகிகள் மருத்துவரை சந்தித்து நிலைமையை விளக்கினர். அதன் பிறகு சமூக வலைதளங்களில் டாக்டர் ஜபருல்லா இந்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.

பாசிச சங்பரிவார்களின் பொய்யான வெறுப்பு பிரச்சாரத்திற்கு சாதாரண மக்கள் மட்டுமன்றி மருத்துவர்களும் பலியாகியுள்ளனர் என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. தமிழகத்தில் இரத்த தானத்தில் முன்னணியில் நிற்பவர்கள் முஸ்லிம்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்று அதே முஸ்லிம்களுக்கு இரத்தம் மறுக்கப்படுகிறது. இயற்கை பேரிடர்களின் போதும் இழப்புகளின் போதும் சாதி, மதம் பார்க்காமல் உதவி புரிந்த முஸ்லிம்களுக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளதை பார்க்கும் போது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.