ஃபேஸ்புக்கும் இந்திய தேர்தலும்

சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இக் காலகட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்களும் சமூக ஊடகங்களில் அனல் பறக்கின்றன. களத்தில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்திற்கு இணையாக, இன்னும் சொல்வதென்றால் அதைவிட அதிகமான பிரச்சாரம் இன்று சமூக ஊடகங்களில்தான் மேற்கொள்ளப்படுகிறது. சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவை இவற்றுக்கான சாதனங்களாக பல்வேறு தரப்பினராலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மையைச் சொல்லி பிரச்சாரம் செய்வதை விட பொய்யையும் புரட்டையும் முன்வைத்தே சமூக ஊடகங்களில் பெரும்பாலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.  பல்வேறு தரப்பினர் இவற்றை பயன்படுத்தினாலும் தவறான வழியில் இதனை பயன்படுத்துவதில் வலதுசாரி இந்து அமைப்புகள் முன்னணியில் உள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் பொய்ச் செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்புவதில் மற்ற அனைவரையும் பின்னுக்கு தள்ளியுள்ளனர்.

ஜனநாயகத்தின் முதுகெலும்பான தேர்தல்கள் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்கள் மூலம் திசை மாற்றப்படுவதையும் அவற்றை சரி காண்பதற்கு ஃபேஸ்புக் நிர்வாகம் முறையான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பதையும் புதிய விடியல் இதழில் (மார்ச் 16 & 31) ஃபேஸ்புக்கும் தேர்தலும்’ என்ற தலைப்பில் விரிவாக விளக்கி இருந்தோம். தற்போது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் சூழலில் சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இவற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஃபேஸ்புக் நிர்வாகம் மேற்கொண்டு இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சார்ந்த ஏறத்தாழ ஆயிரம் ஃபேஸ்புக் கணக்குகள், பக்கங்கள் மற்றும் குழுக்களை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 103 பக்கங்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கணக்குகளை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கி உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவாளர்கள் பக்கம் மற்றும் கஷ்மீர் குறித்த சில பக்கங்கள் இவற்றில் அடங்கும்.

இந்தியாவைச் சேர்ந்த முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவோடு தொடர்புடைய 687 ஃபேஸ்புக் கணக்குகள் மற்றும் பக்கங்களையும் நீக்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதனை கேள்விபட்ட சங்பரிவார் அமைப்பினர் குதூகலித்தனர். சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சி பொய்யான தகவல்களை பரப்புகிறது, அதன் மூலம் மக்களை வழி கெடுக்கிறது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் குஜராத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சில்வர் டச் என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய 15 ஃபேஸ்புக் கணக்குகள் மற்றும் பக்கங்களையும் ஃபேஸ்புக் நீக்கி உள்ளது.  இந்தப் பக்கங்கள் அனைத்தும் பா.ஜ.க. ஆதரவு செய்திகளையும் பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு செய்திகளையும் அதிகம் பகிரும் பக்கங்களாகும். அகமதாபாத் நகரில் இருந்து செயல்படும் இந்த நிறுவனம்தான் பிரதமர் நரேந்திர மோடியின் செயலியான நமோ செயலியையும் வடிவமைத்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பக்கங்களின் எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. ஆதரவு பக்கங்கள் குறைவாக இருந்தாலும் அதனை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை காங்கிரஸை விட பன்மடங்கு அதிகம் என்பதும்  இங்கு கவனிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி ஆதரவு பக்கங்களை 2 லட்சத்து 6 ஆயிரம் கணக்குகள்  பின் தொடர்வதாகவும் ஆகஸ்ட் 2014 முதல் மார்ச் 2019 வரையிலான காலகட்டத்தில் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக 39 ஆயிரம் அமெரிக்க டாலர்களை இவர்கள் செலவு செய்துள்ளதாகவும் கூறும் ஃபேஸ்புக்கின் அறிக்கை சில்வர் டச் நிறுவனத்தால் நடத்தப்படும் பக்கங்களை 26 லட்சம் கணக்குகள் பின் தொடர்வதாகவும் ஜூன் 2014 முதல் பிப்ரவரி 2019 வரையிலான காலகட்டத்தில் ஃபேஸ்புக்கில் 70 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு இவர்கள் விளம்பரம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

பா.ஜ.க. ஆதரவு பக்கங்கள் அக்கட்சியால் நேரடியாக நடத்தப்படாவிட்டாலும் இந்தப் பக்கங்களை நடத்துபவர்கள் அனைவரும் பா.ஜ.க.வின் ஆதரவாளர்கள் என்பது தெளிவு. பின்பற்றுவோரின் எண்ணிக்கையை நோக்கும் பொழுது பா.ஜ.க.வினர் சமூக ஊடகங்களில் எந்த அளவிற்கு பயணிக்கின்றார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இவர்களால் பரப்பப்படும் செய்திகளில் பெரும்பான்மையானவை பொய்ச் செய்திகள் என்பதையும் எவ்வித அடிப்படை ஆதாரமற்றவை என்பதையும் நாம் அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸை விட தங்களுக்குத்தான் பாதிப்பு என்பதை உணர்ந்த சங்பரிவார்கள் பின்னர் மௌனம் ஆயினர். இந்த நடவடிக்கையின் மூலம் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உணராமல் தலைவர்கள் இருக்கின்றனர் என்று பா.ஜ.க. தொண்டர்கள் சமூகவலைதளங்களில் புலம்பினர்.

சங்பரிவார் தலைவர்கள் மட்டுமின்றி சில ஊடக நிறுவனங்களும் காங்கிரஸ் தொடர்பான பக்கங்கள் நீக்கப்பட்டதை மட்டும் செய்திகளாக முதலில் வெளியிட்டனர். செய்தி நிறுவனமான கிழிமி அவ்வாறே செய்தி வெளியிட்டு பின்னர் பலராலும் சுட்டிக்காட்டப்பட்ட பின்னரே பா.ஜ.க. ஆதரவு பக்கங்கள் நீக்கப்பட்ட செய்தியை வெளியிட்டது.

இந்தப் பக்கங்களை நீக்குவதற்கு அவற்றின் செயல்பாடுகளே காரணம் என்றும் அவற்றில் வெளியிடப்பட்ட செய்திகளுக்கும் பக்கங்கள் நீக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஃபேஸ்புக் தெளிவுபடுத்தியுள்ளது. கட்டமைக்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான செயல்பாடுகளுக்காக இந்தப் பக்கங்களை நீக்குவதாக ஃபேஸ்புக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்புவதற்காக பல்வேறு கணக்குகளை தொடங்குவது, தங்களைக் குறித்தும் தங்களின் செயல்பாடுகள் குறித்தும் வெளிப்படையாக தெரிவிக்காதது ஆகிய காரணங்களுக்காக இந்த பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இவை தவிர தங்களின் உண்மையான இருப்பிடங்களை மறைத்தது, வைரஸ்களை பரப்புவது, பொய் கணக்குகளை தொடங்குவது, ஏற்கனவே உள்ள கணக்குகளை போன்ற மாதிரி கணக்குகளை தொடங்குவது ஆகிய காரணங்களுக்காக 321 பக்கங்களையும் கணக்குகளையும் நீக்கி உள்ளதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஓர் அங்கமான வாட்ஸ்அப், தவறான செய்திகளை சரிபார்ப்பதற்கு ஒரு புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு வரும் தகவல்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அத்தகவலை 9643000888 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் அனுப்பலாம். குறிப்பிட்ட அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை வாட்ஸ்அப் நிறுவனம் கண்டறிந்து அறிவிக்கும் என்றும் அந்நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. புரோட்டோ (றிஸிளிஜிளி) என்ற இந்திய நிறுவனத்துடன் இணைந்து வாட்ஸ்அப் இம் முயற்சியை மேற்கொண்டுள்ளது. தகவல்களில் உண்மை தன்மையை சரிபார்க்க தக்க நடவடிக்கைகளை ஆல்ட் நியூஸ் போன்ற இணையதளங்கள் முன்னரே தொடங்கியபோதும் பெருமளவில் தகவல்கள் பரிமாறப்படும் வாட்ஸ்அப் தற்போதுதான் இந்நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
மார்ச் 20 அன்று சமூக ஊடகங்கள் அவர்களாக முன்வந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான நன்னடத்தை விதிமுறைகளை வெளியிட்டனர். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இந்த அறிக்கையை வெளியிட்டன. அனைவருக்கும் நம்பகமான தகவல்களை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் சின்ஹா கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் இந்த அறிக்கையை வெளியிடுவதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். தங்களின் சேவைகளை தவறாக பயன்படுத்துவதில் இருந்து காப்பதையும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாற்றமாக உள்ள தேர்தல் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் தங்களின் முக்கிய நோக்கமாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.

பா.ஜ.க. மற்றும் அதன் ஆதரவு நிறுவனங்கள் பிப்ரவரி 2019ல் 2.37 கோடிக்கு ஃபேஸ்புக்கில் விளம்பரத்திற்காக செலவு செய்திருந்தனர். விளம்பரம் மூலம் ஃபேஸ்புக் பெற்ற வருமானத்தில் இது 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகும். ஆகஸ்ட் 2018ல் தேர்தல் ஆணையம் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் இடையே ஒரு சமமான தளத்தை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் செலவுகளுக்கு ஒரு வரையறையை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி தவிர்த்த ஏனைய கட்சிகள் இந்த ஆலோசனையை வரவேற்றன. (எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி, மார்ச் 30, 2019). நிழல் உலகத்திலும் நிஜ உலகத்திலும் வரைமுறையற்ற செலவுகள் பா.ஜ.க.வின் தனிப்பெரும் குணமாக உள்ளதை இவை சுட்டிக் காட்டுகின்றன.

ஃபேஸ்புக்கின் சமீபத்திய நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. சமூக ஊடகங்களில் பொய் செய்திகள் அதிகம் பரவுவதும் அவற்றை மக்கள் உண்மை என்று நம்புவதுமே தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனை தடுப்பதற்கும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறியவும் உள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவாகும். தவறான மற்றும் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்காவிட்டால் தவறான செய்திகள் பரவுவதையும் குழப்பங்கள் எழுவதையும் தேர்தல் திசைமாற்றப் படுவதையும் தடுத்து நிறுத்த முடியாது.

-ரியாஸ்