நள்ளிரவில் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: பதற்றத்தில் விவசாயிகள்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி எல்லைகளில் விவ்சாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றது. இந்த போராட்டம் 103 வது நாளை எட்டியுள்ளது.

ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, போராட்ட களங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யாத வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லி குண்டலி எல்லையில் விவசாயிகள் மீது ஞாயிறு இரவு 12 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

டி.டி.ஐ. வணிக வளாகம் அருகே நடந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மர்ம நபர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.