வெறுப்பு பேச்சு: புகார்கள் இல்லை என்றாலும் வழக்கு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெறுப்பு பேச்சு விவகாரங்களில் புகார்களுக்கு காத்திருக்காமல் மாநில அரசாங்கங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள இந்த உத்தரவில் வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் எந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பதையும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153A, 153B, 505, 295A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மாநில டிஜிபிக்கள் தங்களுக்கு கீழுள்ள அதிகாரிகளிடம் இந்த உத்தரவை தெரிவிக்க வேண்டும் என்றும் வழக்குகள் பதிவு செய்யாத பட்சத்தில் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இதே போன்ற உத்தரவை நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஹரித்வார் மற்றும் டெல்லி நகரங்களில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக பேசப்பட்ட வெறுப்பு பேச்சுகள் குறித்த வழக்கில் நீதிபதிகள் அப்போது இந்த உத்தரவை வழங்கினர். உத்தர பிரதேசம், உத்தர்காண்ட் மற்றும் டெல்லி அரசாங்கங்கள் வெறுப்பு பேச்சு வழக்குகளில் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

Leave a Reply