மார்ச் 22: உலக தண்ணீர் தினம்

இன்று உலகில் மிகப்பெரும் விவாதப் பொருளாக தண்ணீர் பிரச்சனை திகழ்கிறது. எதிர்காலத்தில் மனித இனம் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனையாகவும் இதுதான் இருக்கும். அதனால்தான் வள்ளுவன் கூட “நீரின்றி அமையாது உலகு” என்றான். இன்று தண்ணீரை சாமானிய மனிதனுக்கு எட்டாத ஒரு கனிமமாக்க ஒரு மிகப்பெரிய சதிக்கூட்டம் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒரு சாதாரன மனிதன் வாகனம் இன்றி வாழலாம்; வீடின்றி வாழலாம்; ஆனால் நீரின்றி? அதனால்தான்  -The World Watch என்கிற சர்வதேச அமைப்பு “நாம் வாழும் காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படாத உலகளாவிய சுற்றுச்சூழல் சவால் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும்” என்று பதிவு செய்துள்ளது.

இதையே சர்வதேச தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமான நால்கோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜே.ரோவின் வார்த்தைகளில் சொன்னால் “வரும் காலங்களில் போர் என்பது எண்ணெய்க்காக இருக்காது. அது தண்ணீருக்காக இருக்கும்”. நாம் எவ்வளவு மோசமான உலகத்தில் எவ்வளவு ஆபத்தான தருணங்களை எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம்  என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. நீரின் மூலமாகத்தான் மானுடம் அறியப்பட்டு வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் ஹரப்பா நாகரீகம் சிந்து நதியோடும் எகிப்து நாகரீகம் நைல் நதியோடும் தொடர்புடையது. நீரோடு பயணிக்கும் மானுடத்தின் தண்ணீர் பிரச்சனைகள் பற்றியும் அதற்கு பின்னால் உள்ள அரசியல் ஏகாதிபத்தியங்களின் அயோக்கிய தனங்கள் குறித்தும் ஒரு சில செய்திகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.

தலில் நாம் நீர்பற்றாக்குறை என்றால் என்ன என்பதையும், அதன் அளவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். சராசரியாக ஒரு மனிதனுக்கு 2000 கன லிட்டர் நீர் கிடைத்தால், அந்த நாட்டில் நீர் பிரச்சனை இல்லை எனலாம். அதன் அளவுகள் குறையும் பொழுது அந்த நாடுகளை நாம் நீர் பற்றாக்குறை நாடுகள் என்று அழைக்கிறோம். தண்ணீர் பயன்பாட்டில் சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் குடிக்க, குளிக்க ஐம்பது லிட்டர் நீர் தேவை. ஓர் அமெரிக்கனுக்கு தினமும் 600 லிட்டர் நீர் கிடைக்கிறது. ஆப்பிரிக்க நாட்டை சார்ந்தவனுக்கு வெறும் ஆறு லிட்டர் நீர் மட்டுமே கிடைக்கிறது. இதற்கு பின்னால் தெளிவான பொருளாதார நலன் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார நலக் குழுக்களின் பங்கு உள்ளது.

தண்ணீர் என்பது ஏதோ குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மட்டுமானது அல்ல. மின்சார உற்பத்தியிலிருந்து பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்வதற்கு நீர்தான் அடிப்படை உயிர்நாதம். இன்று பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் நம் கண்களுக்கு தெரியும் பெரிய தொழிற்சாலைகளுக்கு பின்னால் தண்ணீரை அசுத்தப்படுத்தும் கோரக் காட்சிகள் ஒழிந்து கிடக்கின்றன. இதனால் நமக்கு ஏற்பட்ட ஆபத்துகளில் இரத்தத்தை உறைய வைக்கும் உண்மை என்னவென்று தெரியுமா? கடந்த பத்தாண்டுகளில் போர் மற்றும் எச்.ஐ.வி. போன்ற பயங்கரங்களால் இறந்த குழந்தைகளை விட அசுத்தமான நீரை குடித்ததால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்த குழந்தைகள் அதிகம். ஒவ்வொரு எட்டு வினாடிக்கும் அசுத்தமான குடிநீரை குடிப்பதால் ஒரு குழந்தை மாண்டு போகிறது என்பது நம் காலத்தின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு.  இது ஏதோ தற்செயல் நிகழ்வு அல்ல! உலகில் சுருங்கி கொண்டிருக்கும் நீராதாரங்களை குறிவைத்து, யாருக்கும் தெரியாமல் தண்ணீரின் மீது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டு வருகிறது சுயநலம் கொண்ட கார்ப்பரேட் கும்பல். தண்ணீர் பெறுவது அடிப்படை உரிமை என்ற நிலையை நோக்கி இவ்வுலகம் சென்று விடக் கூடாது என்பதில் இக்கூட்டம் தெளிவாக இருக்கிறது. உலகின் பெரும் பகுதியில் உள்ள  அணைகள், குழாய்கள், நானோ தொழில்நுட்பம், நீரைதூய்மையாக்கும் அமைப்பு மற்றும் உப்புநீக்கும் ஆலைகள் அனைத்தையும் தங்கள் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

உலக சுகாதார அமைப்பின்  (WHO) கூற்றை கவனித்தால் இந்த அவல நிலையை நாம் மேலும் நன்றாக உணர முடியும். உலகளாவிய மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் பாதி நீரினால் நோயுண்ட மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 80% நோய்கள் நல்ல தண்ணீர் இன்மையால் ஏற்படுகின்றன.  இவ்வாறாக இவ்வுலகில் ஏகாதிபத்திய நிறுவனங்கள் ஒரு பக்கம் நல்ல தண்ணீரை தங்கள் வசப்படுத்திக் கொண்டு தண்ணீரை அசுத்தப்படுத்தும் காரியத்தையும் செய்து தண்ணீரை ஓர் வியாபார பொருளாக்கியும் விட்டனர். தண்ணீர்  விலைக்கு விற்கப்படும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க வாய்ப்பில்லை.

விளம்பரங்கள் மூலமாக பாட்டில் தண்ணீர் மட்டுமே சிறந்த குடிநீர், கோக்கும்,  பெப்ஸியும் மட்டுமே தாகம் தீர்க்கும் பானங்கள் என்று மக்கள் மனதில் தொடர்ந்து நஞ்சை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலாப வெறிக்கு மக்களின் உயிரை சோதனைக்கூடமாக மாற்றிக் கொள்வதோடு உலக நாடுகளின் அரசியல் தலைவர்களை தங்கள் கை வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். இதற்கு கேடுகெட்ட உலக வங்கியின் பூரண ஒத்துழைப்பு வேறு.

கார்ப்பரேட் நிறுவனங்களை பொறுத்தவரை எங்கு பணம் உள்ளதோ  அங்குதான் தண்ணீரும் உள் கட்டமைப்பு வசதிகளும் வரும். ஏழைகள் தண்ணீர் பெறுவதற்காக எந்த கார்ப்பரேட் நிறுவனமும் செயல்படவில்லை. பணம் கொடுக்காதவர்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்பதே இவர்களின் கொள்கை. இதன் பலன்தான் தமிழக அரசும் கூட குறைந்த விலை என்று கூறி தண்ணீர் பாட்டிலை விலைக்கு விற்கக்கூடிய கேடுகெட்ட அவல நிலை. இன்று முன்னனியில் இருக்கும் பெப்சி மற்றும் கோக்கக்கோலா நிறுவனங்கள் முறையே அகுவாஃபீனா மற்றும் கின்லே என்ற பெயரில் தண்ணீரின் மூலம் இலாபத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதைப்பற்றி இன்டியானா பல்கலைக்கழக பேராசிரியர் இப்படி கூறுகிறார்:வானிலிருந்து வீழ்கின்ற தண்ணீரை பெற்று, எரிவாயுவிற்காக நாங்கள் கொடுக்கும் பணத்தைவிட நான்கு மடங்கு, அதிக விலையில் விற்பதுதான் இவர்களின் வேலை”.

இந்தியாவின் நிலை: மக்கள் பாதுகாப்பு மற்றும் வளங்களின் மீதான அரசுக்கட்டுப்பாடு என்பதை சொத்தாக கொண்டுள்ள நமது தேசத்தில் கூட ‘எங்கெல்லாம் சாத்தியமோ’ அங்கு தனியார் தண்ணீர் சேவையை அனுமதிக்க 2002ம் ஆண்டு முதல் ஊக்கப்படுத்தப்படுகிறது. நகராட்சிகளில் நீர் ஒப்பந்தங்கள் பெறுவதற்கும், ஒட்டுமொத்த நதியினையே வாங்கி விடுவதற்கும் நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் நிறுவனங்களின் கிடுக்கிப்பிடியில் அணைகளின் பெயரால் மொத்த குடிமக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஆனால், நர்மதா பச்சோவா அந்தோலன் அமைப்பின் தலைவர் மேதாபட்கர், சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவா, மனித உரிமைகள் போராளியும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் போன்றோர் இதற்கு எதிராக போராடுவது மகத்தான விஷயமாகும்.

நமது தமிழகத்தில் மொத்தம் 33 ஆற்றுப்படுக்கைகள் உள்ளன. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி இன்று கடுமையான நீர்ப்பற்றாக்குறையை சந்தித்து கொண்டிருக்கிறது. தாமிரபரணியில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் அந்நீரைப் பருகுபவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

இதே தாமிரபரணியில் 1990களுக்கு முன்னால் குளிப்பவர்களுக்கு, குடித்தவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் அதிகமாக வந்ததில்லை. ஆனால், இன்று இந்நோய் தாமிரபரணி படுகைகளில் வாழும் மக்களுக்கு அதிகமாக வருவது கவலையூட்டும் ஓர் விஷயமாகும். சமீபத்தில் காவேரியின் துணை நதியான பவானி நதி கோக்கக்கோலா கம் பெனியான கின்லேவிற்கு தண்ணீரை எடுப்பதற்கு அனுமதி அளித்து பலமான நீர் கொள்ளை நடைபெற்று வருகிறது.

நீர் ஓர் அரசியல் ஆயுதம்: நாடுகளுக்கிடையே போர்கள் நடக்கும் பொழுது அந்த நாடுகளின் நீராதாரத்தை மழுங்கடிக்க சூழ்ச்சிகள் செய்வது ஒவ்வொரு போரிலும் நடந்து வருகிறது. 1991ல் வளைகுடா போரில் அணைகளின் மீது குண்டுகளை வீசி நீர் கிடைக்காமல் தடுக்க செய்தனர். அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஃபலஸ்தீன மக்களுக்கு குடிநீர் கிடைக்காத வண்ணம் குடிநீர் குழாய்களை குறிவைத்து தாக்கி கொண்டிருக்கின்றன. ஆனால் நாமோ போர் இல்லாத நிலையிலே நீர் வளங்களை இழந்து வருகிறோம்.

தெருக்களில் கூட சாதாரணமாக குடத்தில் தண்ணீர் எடுக்க சண்டையிடும் நாம் இந்த வாட்டர் மாஃபியாக்களுக்கு எதிராக போராடுவதில்லை என்பது மிக துயரமான விஷயம்.

ஒரு கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தும் நீர் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கோடைகால நீர் தேவையை பூர்த்தி செய்யும். பணத்தை தண்ணீராக செலவழிக்க தயாராக இருப்பவர்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்பதுதான் இந்த நூற்றாண்டின் சட்டம் என்றால், இந்த சட்டம் தகர்த்து எறியப்பட வேண்டும். தண்ணீர் என்பது இறைவனின் அருட்கொடை என்பதே ஜம் ஜம் நீர் மூலம் இறைவன் விடுக்கும் வரலாற்று பாடம். இந்த ஏகாதிபத்திய நீர் ஆதிக்கத்திற்கு நாம் அணிதிரண்டு போராட வேண்டும். இல்லையெனில் பேராசிரியர் சந்திரா எழுதியது போன்று நிலைமை மாறிவிடும்.

எனது தாத்தா ஆற்றில் நீரை பார்த்தார்,

எனது தந்தை கிணற்றில் நீரை பார்த்தார்,

நான் குழாயில்,

எனது மக்கள் பாக்கெட்,

பாட்டில்களில் எனது பேரக் குழந்தைகள்???

இன்று நீர்! நாளை காற்று!