கஷ்மீர் பத்திரிகையாளர்களுக்கு புலிட்சர் விருது

ஊடகத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வருடம் தோறும் வழங்கப்படும் புலிட்சர் விருது இவ்வருடம் மூன்று கஷ்மீர் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கஷ்மீருக்கான அரசியல் சாசனத்தின் சிறப்பு பிரிவுகளை ரத்து செய்த மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு கஷ்மீர் குறித்த செய்திகள் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவும் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகளின் முடக்கமும் பத்திரிகையாளர்களின் பணிகளை கடினமாக்கின.
ஆனால் அசோசியேடட் பிரஸ் நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளர்களான தார் யாசின், முக்தார் கான் மற்றும் சன்னி ஆனந்த் ஆகியோர் கஷ்மீரின் செய்திளை வெளியுலகிற்கு கொடுத்தனர். பல தடைகளையும் கடந்து செய்திகளை வெளியுலகிற்கு வழங்கிய அவர்களின் பணியை பாராட்டி இவ்வருடத்திற்கான புலிட்சர் விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின் மத்தியில் ரகசியமாக போராட்டங்களையும் காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் செயல்பாடுகளையும் மக்களின் வாழ்க்கையையும் படம்பிடித்த இவர்கள், டெல்லி செல்லும் விமான பயணிகள் மூலம் தங்களின் புகைப்படங்களை அசோசியேடட் பிரஸ்சின் டெல்லி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
யாசின் மற்றும் முக்தார் ஆகியோர் கஷ்மீரின் ஸ்ரீநகரை சார்ந்தவர்கள். ஆனந்த் ஜம்முவை சார்ந்தவர்.
அசோசியேடட் பிரஸ் நிறுவனம் பெறும் 54வது புலிட்சர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் யெமன் தேசத்தின் பிரச்சனைகள் மற்றும் மக்கள் சந்திக்கும் அவலங்கள் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களுக்காகவும் இந்நிறுவனத்திற்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது.