பஞ்சாப் நிகழ்வு: பா.ஜ.க-விற்கு எதிராக காங்கிரஸ் எப்படி சண்டை செய்யும்? – உமர் அப்துல்லா.!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரீந்தர் சிங் தனது பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், பா.ஜ.க-விற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சண்டையிடும் என்று எதிர்பார்ப்பது மிக அதிகமான எதிர்பார்ப்பு என்று ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, உமர் அப்துல்லா தனது டிவிட்டர் பக்கத்தில், “பொதுவாக, நான் காங்கிரஸ் கட்சியில் உள்ள சகோதர சண்டைகள் குறித்து பேச மாட்டேன். ஏனெனில், அது அவர்களின் கட்சி. இருப்பினும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெளியே உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், காங்கிரஸின் செயல்பாடு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். காரணம், கிட்டத்தட்ட 200 மக்களவை தொகுதிகளில் நேரடியாக பா.ஜ.க-வும் காங்கிரஸ் கட்சியும் மோதுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவதில் மும்முரமாக இருக்கும்போது, ​​பா.ஜ.க.-விற்கு எதிராக காங்கிரஸ் சண்டை செய்யும் என்று எதிர்பார்ப்பது மிக அதிகமான எதிர்பார்ப்பு என்று நினைக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.