குர்ஆன் சமூக மாற்றத்திற்கான உந்து சக்தி!

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியான காலக்கட்டத்தில் முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருகிறது. உள்ளுக்குள் பகைமையை மறைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தோடு கலந்துறவாடிய இஸ்லாத்தின் எதிரிகள் இன்று பகிரங்கமாகவே தங்களது வெறுப்புகளை உமிழ்கின்றனர். பல துறைகளிலும் முஸ்லிம் சமூகம் சந்திக்கும் தோல்விகளும் பின்னடைவுகளும் எதிரிகளின் உள்ளங்களில் மகிழ்ச்சியை தோற்றுவிக்கிறது. தங்களுடைய உள்ளங்களில் பற்றி எரியும் துவேசம் மற்றும் வெறுப்பின் ஜுவாலைகள் வெளியே படர்ந்தாலும் பரவாயில்லை என்ற நிலைதான் இன்று உலகில் நிலவுகிறது. சர்வதேச அளவில் இஸ்லாமோஃபோபியா எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்கு பல நிகழ்வுகள் நமக்கு சாட்சியம் வகிக்கின்றன.

நாலா புறங்களிலிருந்தும் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட சமூகம் விடுதலைக்கும் பாதுகாப்பிற்கும் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையை காணும்போது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை நினைவுக்கு வருகிறது: “ஓர் உணவுத் தட்டில் இருக்கும் உணவைப் பங்கு போட்டு உண்பதற்காக ஏனையோரையும் அழைப்பது போல், முஸ்லிம்களாகிய உங்களைத் தாக்குவதற்காக ஏனைய சமூகத்தவர்கள் அனைவரும் ஒன்று திரளும் ஒரு காலம் மிக விரைவில் வரும்”.
அப்போது அங்கிருந்த ஒருவர், “(அல்லாஹ்வின் தூதரே! அக்காலத்தில்) அந்த அளவுக்கு நாம் சிறுபான்மையாக இருப்போமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “இல்லை, நீங்கள் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப் போல் உறுதியற்றவர்களாகவே இருப்பீர்கள். உங்களைப் பற்றிய அச்சத்தை எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் அகற்றி விடுவான். உங்கள் உள்ளங்களில் வஹ்ன் குடிகொண்டு விடும்.” என்று கூறினார்கள். ‘‘வஹ்ன் என்றால் என்ன?” (அல்லாஹ்வின் தூதரே) என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “இவ்வுலக வாழ்வின் மீது அதீத பற்றும், மரணத்தை வெறுக்கும் தன்மையுமே அது” என்று பதிலளித்தார்கள். (நூல்:அபூதாவூத்)
முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் அது இறைவனின் தண்டனை என்ற கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் எழும். அந்த கருத்தினை வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: “ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை” (அல்குர்ஆன் 8:53)

“நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை.- எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.” (அல்குர்ஆன் 10:44)

ஆனால், இந்த கருத்து மனம் போன போக்கில் சொல்லப்படும் விளக்கம் அல்ல. மாறாக இலட்சியத்தை மறந்த ஒரு சமூகத்தின் மோசமான பின் விளைவை சுட்டிக்காட்டுபவை. தங்களுடைய வாழ்க்கை இலட்சியத்தை மறந்த எந்தவொரு சமூகமும் வெற்றியை அடைந்த வரலாறு கிடையாது. நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை நமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்:

“நீங்கள் ஈனா என்ற வியாபாரத்தில் ஈடுபட்டு (வட்டி போன்ற தந்திரமாக ஏமாற்றும் பரிவர்த்தனை), மாட்டின் வாலை பிடித்து, விவசாயத்தை கொண்டு திருப்தி அடைந்து, ஜிஹாத் செய்வதை விட்டு விட்டால் நீங்கள் உண்மையான மார்க்கத்திற்கு திரும்பும் வரை அல்லாஹ் உங்கள் மீது இழிவை சாட்டிவிடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
முஸ்லிம் உலகம் இன்று அடைந்திருக்கும் பரிதாபகரமான சூழலுக்கான எதார்த்த காரணத்தை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது. உலகியல் ரீதியான வாழ்க்கை கண்ணோட்டத்தில் சிக்கியிருக்கும் சமூகத்தின் உள்ளத்திலிருந்து நீதிக்காகவும் தர்மத்திற்காகவும் போராடும் எண்ணம் மாய்ந்துவிடும். பேரழிவின் படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் அந்த சமூகம் சுயமரியாதையை இழந்துவிடும். தாழ்வுமனப்பான்மைக்கு ஆட்பட்டு இழிவையே அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
இத்தகையதொரு துயரமான சூழலில் படைத்தவனான அல்லாஹ்வை நோக்கி திரும்புவதே ஒரே வழியாகும். வாழ்க்கை குறித்த பார்வை, வாழ்க்கை முறை, வணக்க வழிபாடுகள், அரசியல், சமூகம், தனிப்பட்ட குணாதிசயங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அடிப்படையான மாற்றத்திற்கு தயாரானால் மட்டுமே இன்று நாம் சிக்கியிருக்கும் சூழலிலிருந்து விடுபட முடியும்.

“எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை” (அல்குர்ஆன் 13:11)

அல்லாஹ்வின் உதவி படைப்புகளின் நிலைப்பாட்டை சார்ந்தே உள்ளது என்று குர்ஆன் கூறுகிறது:
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.” (அல்குர்ஆன் 47:7)

மாற்றத்திற்கான தத்துவம்

மாற்றத்திற்கான குரல் சமுதாயத்தின் உள்ளேயிருந்தே எழும்போது இயல்பாக எழும் கேள்வி, “மாற்றத்திற்கான அளவுகோல் என்ன?’ என்பதாகும். இருளின் ஆழத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் மனிதனுக்கு விடுதலைக்கான வழியை இறைவன் காட்டித் தருகிறான். முன்னோக்கிச் செல்வதற்கான விளக்கையும் வெளிச்சத்தையும் அளித்த அல்லாஹ், மனிதர்கள் மீதான கருணை மற்றும் அன்பின் அடையாளமாக திருக்குர்ஆனை இறக்கி அருள் புரிந்ததோடு, அதற்கு விளக்கமாக ஒரு இறைத்தூதரையும் நியமித்தான். ஆனால், அந்த வேதநூல் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன? அந்த இறைத்தூதருக்கு தங்களது வாழ்க்கையில் அளித்த இடம் என்ன?

நோய் வாய்ப்படும்போதும், மரணமடைந்த உடலுக்கு அருகிலும் புண்ணியத்திற்காக வாசிக்கும் ஒரு நூலுக்கான மதிப்பையே பெரும்பாலானோர் குர்ஆனுக்கு வழங்குகின்றனர். ஓதுவதற்கான விதிமுறைகளை கண்டிப்புடன் கடைப்பிடித்து அழகான குரலில் ஓதுவதில் பலருடைய குர்ஆன் மீதான விசுவாசமும் ஈடுபாடும் சுருங்கிவிட்டது. இறைவேதத்தின் எழுத்துக்களை வாசிப்பதில் பரவசமடைந்து சிந்தனையை புறக்கணிக்கும் விசித்திரமான அணுகுமுறைதான் சமூகத்தில் காணப்படுகிறது. குர்ஆனை மனப்பாடம் செய்து இனிமையான தொனியில் ஓதுவதற்கு திறன் பெற்ற இலட்சக்கணக்கான ஹாஃபிழ்கள் உலகில் உள்ளனர். கோடிக் கணக்கில் குர்ஆன் பிரதிகளும் உபயோகத்தில் உள்ளன. எனினும், சமூகத்தின் துயரமான நிலைக்கு ஏன் தீர்வு கிடைக்கவில்லை? குர்ஆனை அணுகுவதில் ஏற்படும் முதிர்ச்சியற்ற நிலையும், குறுகிய கண்ணோட்டமுமே இதற்கு காரணம்.

குர்ஆனின் ஒளிதான் முன்னோர்களை வழி நடத்தியது. அதன் காரணமாகவே அவர்கள் உயர்வான நிலையை அடைந்தார்கள். உலக தலைமைத்துவம் அவர்களின் கரங்களுக்கு சென்றது. இமாம் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்: “முஸ்லிம் சமூகத்தின் துவக்க காலக்கட்டம் எதனால் சிறப்பாக அமைந்ததோ அதன் மூலமே அதன் இறுதி காலமும் சிறப்பாக அமையும். குர்ஆனால் மட்டுமே அதன் துவக்க காலம் சிறப்பாக அமைந்தது”. எதிர்காலத்தில் ஆபத்தான காலக்கட்டங்களில் குர்ஆன் மட்டுமே விமோசனத்திற்கான வழி என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.

ஹுதைபத்துல் யமான் (ரலி) அவர்கள் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம்: “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் நல்ல காலத்திற்கு பிறகு ஆபத்துகள் நிறைந்த கெட்ட காலம் ஏற்படுமா?’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்களின் உறுதியான பதில், “ஹுதைபா! நீங்கள் அல்லாஹ்வின் வேதத்தை உறுதியாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அதனை படியுங்கள்! அதனை பின் தொடருங்கள்!” நபி (ஸல்) அவர்கள் இந்த உபதேசத்தை மூன்று முறை கூறினார்கள்.

தனது காலத்திற்கு பிறகு பேணுதலுடன் வாழ்வதற்கு இறைவேதத்தின் அவசியத்தை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “மக்களே! நான் ஒரு மனிதன் மட்டுமே! என்னை அழைத்துச் செல்ல இறைவனின் தூதுவர் வருவதற்கான காலம் அண்மித்துவிட்டது. அந்த அழைப்புக்கு நான் பதிலளிக்கவேண்டும். இரண்டு கனமான சுமைகளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். அதில் ஒன்று அல்லாஹ்வின் வேதம். அதில் ஒளியும், வழிகாட்டுதலும் உள்ளன. அதனை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள். அதன் கட்டளைகளுக்கு செவிசாயுங்கள். அவ்வாறு செய்தால் சத்திய பாதையின் ஊடே முன்னோக்கிச் செல்லலாம். அதில் வீழ்ச்சி ஏற்பட்டால் வழி தவறி விடுவீர்கள்”. (நூல்:அஹ்மத்)

முழுமையான மாற்றம்

தனிமனிதனிடமும், சமூகத்திலும் குர்ஆன் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன?

  • குர்ஆன் அறிவையும், மனசாட்சியையும் மறுசீரமைக்கும். அதனை சரியான முறையில் கட்டமைக்கும். சொல்லை செயலாக மாற்றும்.
  • உள்ளத்திலிருந்து உலகியல் இச்சைகளையும் சுய நலன்களையும் துடைத்தெறியும். நம்பிக்கையில் நீடித்த நிரந்தரமான வளர்ச்சி ஏற்படும்போது குர்ஆனை வாசிக்கும் நபருடைய உள்ளத்தில் கட்டுப்பாடு மற்றும் இச்சைகளை எதிர்த்து நிற்கும் சக்தி உற்பத்தியாகும்.
  • தனி நபர்களின் இயல்பான, ஆக்கப்பூர்வமான திறன்களை அதிகரிக்கச் செய்யும். நன்மைகள், விழுமியங்களுடன் அவனை முன்னோக்கி நகர்த்தும். செவி வழியாக நுழையும் திருக்குர்ஆன் வசனங்கள் உள்ளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி செயல்களத்திற்கு தகுதியுடையவனாக மாற்றும். இறைவசனங்கள் உள்ளத்தில் எப்போதும் எதிரொலிக்கும்போது ஒரு மனிதனால் எவ்வாறு வழி தவற முடியும்? நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளை நபித்தோழர்கள் செயல்படுத்திய விதத்தை படித்தால் இது நமக்கு புரியவரும். “அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களில் மிகவும் நல்லவர்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அதன் பின்னர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இரவில் குறைந்த நேரமே தவிர உறங்கியதில்லை. (நூல்:புகாரி, முஸ்லிம்)
  • ஒருவரது சொல், செயலில் நேர்மை என்பது குர்ஆன் உருவாக்கும் கலாச்சாரமாகும். பதவி மோகம், சுய விளம்பரம் போன்ற தீய குணங்களிலிருந்து முற்றிலும் விலகியிருக்கும் மனிதன் தனது குணாதிசயங்களை சுத்திகரித்து, உலகியல் மோகங்களிலிருந்து விடுபட்டு, உயர்வான குணமுடையவனாக மிளிர்வான். அவனது அந்தரங்க வாழ்வில் தூய்மை துலங்கும்.
  • அறிவு, உணர்வு, உள்ளம், ஆன்மா ஆகியவற்றோடு பேசும் குர்ஆன் மனித வாழ்க்கையை அடியோடு மாற்றுகிறது. பிரபஞ்சம், வாழ்க்கை, மனிதன் ஆகியவற்றைக் குறித்து சரியான குற்றம், குறை இல்லாத பார்வையை தருகிறது குர்ஆன். இந்த பார்வையை உள் வாங்கும் மனிதனின் சிந்தனையில் கற்பனையோ, மயக்கமோ, உண்மைக்கு புறம்பான எண்ணங்களோ இடம் பிடிக்காது. மனித அறிவோடு உரையாடும் குர்ஆனின் பாணியைத்தான் அந்த மனிதன் தன்னிடமும், சமூகத்திடமும் கடைப்பிடிப்பான்.
  • இறைவனுடனான உறவை உள்ளத்தில் ஆழமாக வேரூன்ற செய்யும் குர்ஆன் தோல்வியடைந்த மனதை தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுவித்து உயர்வான சிந்தனையோடும், தன்னம்பிக்கையோடும், மன உறுதியோடும் சமூகத்தின் மத்தியில் தலை நிமிர்ந்து நடப்பதற்கு நம்பிக்கையாளர்களின் சமூகத்திற்கு உதவுகிறது.
  • கண்மூடித்தனமான பின்பற்றுதலில் இருந்து மனிதனை விடுவிக்கும் குர்ஆன் அறிவு மற்றும் பகுத்தறிவை ஊக்குவிக்கிறது. சுதந்திரமாக்கப்படும் மனித அறிவில் இறைச் சட்டங்களின் அடிப்படை தத்துவங்கள் வளரும்போது அற்புதங்கள் உருவாகும். பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்வதற்கான ஆவலை தூண்டி ஆராய்ச்சியை நோக்கி திருப்பும். இதன் மூலம் புதிய நவீன கண்டுபிடிப்புகள் உருவாகும். விஞ்ஞான- தொழில்நுட்பத்தில் முன்னோர் சாதித்த ஆச்சரியமான சாதனைகளையும், நிபுணத்துவத்தையும் புதிய காலக்கட்டத்தில் மறு கட்டமைக்க குர்ஆன் அதனை பின்பற்றுபவர்களை தகுதியுடையவர்களாக மாற்றும்.

குர்ஆனைக் குறித்த பயம் மேற்கத்திய சிந்தனையாளர்களிடம் எப்போதும் இருந்து வந்தது. முஸ்லிம் சமூகம் குர்ஆனிலிருந்துதான் சக்தியை பெறுகிறது; அவர்களின் சக்திக்கான உறைவிடம் குர்ஆன் என்பதையும் மேற்கத்திய சக்திகள் புரிந்துகொண்டதை அவர்களது அறிக்கைகளின் வாயிலாக அறிய முடியும். பிரிட்டீஷ் பிரதமராக இருந்த கிளாட்ஸ்டோன் எழுதினார்: “இந்த குர்ஆன் இருக்கும் காலமெல்லாம் ஐரோப்பாவால் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த முடியாது. நாம் புரிந்துகொண்டதைப் போலவே ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கே இந்த புனித வேதம் அச்சுறுத்தலாக விளங்கும்”. பிரஞ்சு நகர வளர்ச்சி அமைச்சரான லூக்கோஸிடம் “129 ஆண்டுகள் நீண்ட பிரெஞ்சு ஆக்கிரமிப்பிற்கு பிறகும் கூட பிரான்சால் அல்ஜீரியாவில் தனது செல்வாக்கை நிலைநாட்ட முடியாததற்கு காரணம் என்ன?” என்று ஒருவர் கேட்டபோது, அவர் பதில் கூறினார்:

‘‘குர்ஆன், பிரான்சை விட வலுவானதாக இருக்கும்போது என்னால் என்ன செய்ய இயலும்?” (அல் அய்யாம் நாளிதழ் 06.-06.-1962)

முஸ்லிம் சமூகத்தின் உந்துசக்தியாக திகழ்ந்த குர்ஆனின் வியத்தகு ஆற்றலை எதிரிகள் அறிந்திருந்தனர். முஸ்லிம் சமூகத்தின் சக்தியையும், குரலையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் குர்ஆனுக்கு மட்டுமே உண்டு.

“நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 3:103)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் கருத்துப்படி அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனாகும்.
சிக்கலான கொள்கைகளோ, புதிர்களோ இன்றி மனிதர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சரளமான உரையாடல் பாணியை குர்ஆன் கையாளுகிறது.

“நிச்சயமாக, இக்குர்ஆனை நன்கு நினைவுபடுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?” (அல்குர்ஆன் 54:17)

இஸ்லாத்திற்கு எதிராக எதிரிகள் ஒன்றிணைந்து தாக்க முற்படும்போது தனிப்பட்ட முயற்சிகள் போதாது, கூட்டு முயற்சியே எதிர்த்து நிற்றலுக்கு அவசியம் என்று குர்ஆன் தெளிவுப்படுத்துகிறது.

“நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால், பூமியில் குழப்பமும் பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.” (அல்குர்ஆன் 8:73)

குர்ஆனை நெஞ்சில் சுமந்து அதனடிப்படையில் இயங்கும் ஒரு தலைமுறைதான் தற்போதைய காலக்கட்டத்தின் தேவையாகும். அதற்கான முயற்சியில் முஸ்லிம் சமூகம் தம்மை ஈடுபடுத்திக்கொள்வது அவசியம்.

-செய்யது அலி