ராஜஸ்தானில் வழங்கப்பட்ட முதல் தண்டனை

ஹரியானவைச் சார்ந்த விவசாயிகள் ரகுபர் கான் மற்றும் அஸ்லம் ஆகிய இருவரும் ஜூலை 2018இல் ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் மாடுகளை கொண்டு வந்த போது பசு குண்டர்களால் தாக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரகுபர் கான் மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் ஐந்து நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த ஆழ்வார் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுனில் குமார் கோயல் நான்கு நபர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட பரம்ஜித் சிங், தர்மேந்திர யாதவ், நரேஷ் சர்மா மற்றும் விஜய் குமார் ஆகியோருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட விசுவ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் நவல் கிஷோர் உரிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் பசு குண்டர்கள் மீது தண்டனை வழங்கப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும். முன்னதாக 2017 இல் பசு குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட பெஹ்லு கான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.