ரமலானும் தனிமனித மாற்றமும்

ஈமானின் தூண்களில் ஒன்றான நோன்பு பல்வேறு மகத்தான குறிக்கோள்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நம்மை தரிசித்து விடைபெற்றுச் செல்லும் இவ்வுன்னத வணக்கம் நம்மிடம் விட்டுச் செல்லும் மாற்றங்கள் என்ன என்பதனை நாம் சற்றேனும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அந்த வகையில் இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்றவை பல்வேறு மகத்தான குறிக்கோள்களையும், இலக்குகளையும் தன்னகத்தே பொதிந்துள்ளது. அவற்றில் பிரதானமான இலக்கு மனிதனை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுவது.இதனை அமைந்திருப்பதை அல்குர்ஆனை ஆழமாக படிக்கும் எவரும் இலகுவில் புரிந்து கொள்ளமுடியும்.

தொழுகையின் பிரதான இலக்கை அல்குர்ஆன் வரையறுக்கும் போது “நிச்சயமாக தொழுகையானது மானக்கேடான மற்றும் வெறுக்கத்தக்க விஷயங்களை விட்டும் தடுக்கின்றது.” (அல் அன்கபூத்: 45)

தொழுகையை நல்ல முறையில் நிறைவேற்றுகின்ற மனிதனை அந்த தொழுகை மானக்கேடான மற்றும் வெறுக்கத்தக்க விஷயங்களை விட்டும் பாதுகாத்து நல்ல நிலைக்கு மாற்றுகின்றது.

ஸகாத் எனும் கடமையின் பிரதான குறிக்கோளை அல்குர்ஆன் அடையாளப்படுத்தும் போது,

“நபியே! அவர்களுடைய செல்வங்களிலிருந்து ஸகாத்தை நீர் எடுத்து, அதன் மூலம் நீர் அவர்களை தூய்மைப்படுத்தி பரிசுத்தப்படுத்துவீராக.” (அத் தௌபா: 103)

ஸகாத்தை நல்ல முறையில் நிறைவேற்றுவதன் மூலம் குறித்த மனிதனின் உள்ளம் மற்றும் செல்வம் அதனால் தூய்மைபெறுகின்றது. உலோபித்தனத்திலிருந்து மனிதனை விடுவிக்கின்றது.

ஹஜ் கடமையானது,

“மோசமான பேச்சு, பிழையான நடத்தை, பாவங்கள், பெரும் தவறுகளை விட்டும் மனிதனைத் தடுக்கின்றது.” (அல் பகரா:197)

எனவே ஹஜ்ஜும் ஒரு நல்ல மனிதனை, முன்மாதிரி முஸ்லிமை உருவாக்குகின்றது.

நோன்பை கடமையாக்கியதன் குறிக்கோளை அல்குர்ஆன் விளக்கும் போது,

“விசுவாசம் கொண்டோர்களே! நீங்கள் இறையச்சம் கொண்டவர்களாக மாறுவதற்காக உங்கள் முன்பிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்ததைப் போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது” (அல் பகரா: 283)

நோன்பு அனைத்து சமூகங்களுக்கும் பொதுவாக விதிக்கப்பட்ட ஒரு கடமை, இறைவன் பற்றிய அச்ச உணர்வை மனித உள்ளத்தில் தோற்றுவிப்பதே அதன் இலக்காகும். அந்த வகையில் ஒரு மாதகால ஆன்மீகப் பயிற்சி நெறியொன்று முஸ்லிம் சமூகத்தின் மீது விதியாக்கபட்டுள்ளது என்று நோன்பின் நோக்கத்தை மேல் குறிப்பிடப்பட்ட வசனம் விளக்குகின்றது.

இவ்வாறு இஸ்லாத்தின் கடமைகளை நோக்குகின்ற போது தொழுகை, தொழுகைக்காக மாத்திரம் இல்லை. மாறாக அதன் மூலம் மானக்கேடான மற்றும் வெறுக்கத்தக்க விஷயங்களை விட்டும் தூரமான தனி மனிதனை இலக்காகக் கொண்டுள்ளது. ஸகாத் வெறும் ஒரு கடமையாக மாத்திரமின்றி ஆன்மீகத்தில் பலமான, தூய்மையான உள்ளத்தையுடைய தனிமனிதனை உருவாக்கும் குறிக்கோள் உடையது. ஹஜ் வெறும் ஒரு கிரியை மாத்திரமின்றி பாவச்சுமைகளற்ற, பிழையான நடத்தைகளை விட்டும் தூரமான ஒரு தனிமனிதனை உருவாக்கும் நோக்கமாக கொண்டுள்ளது.

அதேபோல் நோன்பும் வெறும் நோன்பிற்காக மாத்திரம் கிடையாது. பல்வேறு இலக்குகளையும் குறிக்கோள்களையும் கொண்டுள்ள நோன்பின் பிரதான இலக்குகளில் ஒன்றாக இஸ்லாம் எதிர்பார்க்கின்ற, ஆன்மீகத்திலே மிகவும் பலம்மிக்க ஒரு தனிமனிதனை உருவாக்கும் மிகப் பெரும் நோக்கம் அதன் பின்னால் பொதிந்துள்ளது.

ரமலான் மாற்றங்களை நிகழ்த்தும் பாசறை

ரமலான் மாதத்தில் நோன்புடன் இணைந்ததாக ஐவேளை பர்ளான மற்றும் தராவீஹ், கியாமுல்லைல் போன்ற சுன்னத்தான தொழுகைகள் உள்ளடங்கியிருக்கின்றன. ஸதகா, தானதர்மங்கள் அதிகமாக வழங்கப்படும் மாதமாக காணப்படுகின்றது. இத்தகைய வணக்கங்கள் அனைத்தும் ஒன்று சேரப் பெற்றிருப்பதனால் ஒரு பெரிய மாற்றத்தை அவை ஒரு தனிமனிதனில் ஏற்படுத்துகின்றன.

மனிதன் பழகிய பழக்கங்களை மாற்ற முடியாது என்பது உலகின் ஒரு பொதுவிதி. ஆனால் நோன்பு அந்த மனிதனையும், அவனால் விடமுடியாது என்று காணப்படும் பழக்கவழக்கங்களையும் கூட முழுமையாக மாற்றிவிடுகின்றது. நோன்பு மனிதன் தூக்கத்தில் இருந்து எழும்பும் நேரத்தை மாற்றுகின்றது. உணவு உட்கொள்ளும் நேரத்தை முழுமையாக மாற்றிவிடுகின்றது. இவ்வாறு மனிதனது அன்றாட வாழ்வொழுங்கில் பெரியதொரு மாற்றத்தை இந்த நோன்பு ஏற்படுத்தி விடுகின்றது.

எனவே மனிதனுக்கு தீய பண்புகளையும், துர்ப் பழக்கங்களையும் மாற்ற முடியாது என்ற நம்பிக்கை போலியானது. புகைத்தல், மது அருந்துதல், பிழையான நடத்தைகள் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்ட மனிதன் தன்னால் இவற்றை மாற்றிக் கொள்ள முடியாது என்பது மிகப்பெரும் பொய்யாகும். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற விதி இஸ்லாத்தில் கிடையாது. மாறத் தயாராக உள்ளவன் ஐம்பதில் அல்ல எண்பதில் இருப்பினும் மாற முடியும் என்பதுதான் இஸ்லாத்தின் நியதி.

“ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் அவர்களை மாற்ற மாட்டான்” என்பதுதான் இறை நியதி. எனவே தடுக்கப்பட்டவற்றில் மூழ்கி வாழும் மனிதனுக்கு பாவங்கள், தவறுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது என்ற மனோ நிலையில் வாழும் மனிதனுக்கு, தன்னை நல்ல நிலைக்கு மாற்றிக்கொள்ள சிறந்த வாய்ப்பாக ரமலான் அமைகின்றது.

கஷ்டங்களை உணர்த்தும் மாதம்

ரமலான் ஒரு தனிமனிதனின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களில் உதவும் மனப்பாங்கு, தாராளத் தன்மை, சகோதரத்துவ வாஞ்சை முக்கியமானவை. நோன்பு நோற்பதன் மூலம் ஓர் அடியான் பசி, தாகம், வறுமை என்பவற்றின் கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து கொள்கின்றான். அதனால் அவனில் பிறருக்கு உதவும் மனப்பாங்கு இயல்பாகவே தோற்றம் பெறுகின்றது. ரஸூல் (ஸல்) அவர்கள் ரமலானில் தானதர்மங்கள் செய்யும் வேகம் ஏனைய நாட்களை விட பன்மடங்கு அதிகரித்திருந்தது.  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதனை  அறிவிக்கின்ற போது “ரஸூல் (ஸல்) அவர்கள் ரமலானில் வீசும் காற்றை விட வேகமாக கொடை கொடுக்கக் கூடியவராக இருந்தார்கள்” என வர்ணிக்கின்றார்கள்.

எனவே இந்த ரமலான் மற்ற மனிதர்களின் கஷ்டங்களைப் புரிந்த, இறைபாதையில் செலவழிக்கக் கூடிய ஒரு நல்ல மனிதனை உருவாக்குகின்றது. கஞ்சத்தனம் கொண்டவர்களும் தங்களை மாற்றிக் கொள்வதற்கான ஒரு வருடாந்த பயிற்சி நெறியாக இது அமைந்துள்ளது.

இறை நெருக்கம் மிக்க மனிதனாக

மறுமை என்ற தொலைதூர இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நமது வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற தேவையான கட்டுச்சாதனங்களுள் நோன்பு மிக முக்கியமானது. அந்த வகையில் ரமலான் மனிதனில் ஏற்படுத்தும் மாற்றங்களில் ஒன்றுதான் ஆன்மீகப் பலம் மிக்க,  இறை நெருக்கத்தையுடைய தனி மனிதர்களை உருவாக்குவது. இன்றைய நவீன உலகின் இயந்திர வாழ்வொழுங்கில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது ஆன்மீக வறுமை ஆகும். தொழிநுட்ப வளர்ச்சியில் உச்சத்தை தொட்டிருக்கும் அறிவியல் உலகம் இந்த ஆன்மீக வறுமைக்கான சரியான தீர்வை முன்வைக்க முடியாது திணறிப்போயுள்ளது.

ஆனால் இப்பிரச்சினைக்கான சிறந்த தீர்வை அன்றும் இன்றும் இஸ்லாம் முன்வைக்கத் தவறவில்லை. அந்த வகையில் இந்த ரமலானில் நோன்பினூடாக, ஃபர்ளான மற்றும் நஃபிலான தொழுகைகளின் ஊடாக, ஈமானிய அமர்வுகளின் ஊடாக, இறை ஞாபகத்தின் மூலமாக, இன்னும் பல்வேறுபட்ட வணக்கங்களினூடாக ஒரு சிறந்த ஆன்மீகப் பயிற்சியை வழங்குகின்றது. எனவே ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை நோன்பு அவனது பாவக்கறைகளை பரிசுத்தப்படுத்தும் ஆன்மீகக் குழியலறையாகவும் தனது இரட்சகனை அடிக்கடி நினைத்துப் பார்க்கும் திக்ரின் மேய்ச்சல் நிலமாகவும் விளங்குகின்றது.

ரமலானின் இறுதிப் பத்தை அடைகின்ற போது இறை நெருக்கத்தை இன்னும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக “இஃதிகாப்” அமைந்திருப்பதைப் பார்க்க முடியும்.

குர்ஆனிய மனிதனை உருவாக்குகின்றது

ரமலான் மாதத்தை அல்குர்ஆன் இறங்கிய மாதமாக அல்லாஹ் அடையாளப்படுத்து கின்றான்.

“இப்புனித மாதத்திலே அல்லாஹ் குர்ஆனை இறக்கி வைத்தான். அது மக்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியின் தெளிவுறையாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தியத்தையும் பிரித்துக் காட்டுவதாகவும் விளங்குகின்றது.” (அல்பகறா : 185)

உலக வரலாற்றையே மாற்றியமைத்த அல்குர்ஆனுடனான உறவை மிகவும் வலுப்படுத்திக் கொள்வதற்கான மிகச்சிறந்த சந்தர்ப்பமாக இந்த ‘ஷஹ்ருல் குர்ஆன்’ என்று அழைக்கப்படுகின்ற ரமலான் மாதம் அமைந்துள்ளது. எனவே ஏனைய மாதங்களை விட அதிகம் அல்குர்ஆனை நீண்ட நேரம் ஓதவேண்டிய, செவிமடுக்க வேண்டிய, மனனமிட வேண்டிய, விளங்க வேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு மாதமாக இது விளங்குகின்றது.

எனவே ஒரு முஸ்லிம் தனது ஏனைய மாதங்களில் குர்ஆனுடன் கொண்டுள்ள தொடர்பை ரமலானில் பன்மடங்காக அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

அல்குர்ஆனை விளங்க முயற்சிக்காத சமூகத்தை நோக்கி அல்குர்ஆன் கேள்வி எழுப்புகின்றது. “அவர்கள் இந்த குர்ஆனை ஆழமாக விளங்கி நல்லுணர்ச்சி பெற மாட்டார்களா? அல்லது அவர்களது உள்ளங்களுக்கு பூட்டிடப்பட்டுள்ளதா?”

ஸகாதுல் பித்ர் ஏற்படுத்தும் மாற்றம்

ரமலான் ஒரு தனிமனிதனின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கான இறுதியான பயிற்சிகளில் ஒன்றாக ஸகாதுல் பித்ர் அமைந்துள்ளது. மனிதன் என்ற ரீதியில் நோன்பில் விடும் தவறுகளை, பிழைகளை முழுமையாக கரைத்து விடக்கூடியதாக இந்த வணக்கம் காணப்படுகின்றது.

எனவே நோன்பைப் பொறுத்தமட்டில் இரு கோணங்களில் அருளாகக் காணப்படுகின்றது. ஒன்று நோன்பு அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் என்ற வகையில் அது அருளாகும். மறு கோணத்தில் தனிமனிதனுக்கு தன்னை மாற்றிக் கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பம் என்ற வகையிலும் அருளாகும்.

ஆக நோன்பு ஒரு உயர்ந்த பயிற்சியின் மாதம். மாற்றத்தின் மாதம். அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள தனி மனிதர்களும் சமூகமும் தம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். நிகழ்ச்சி ஒழுங்கை தயாரித்துக் கொள்ள வேண்டும். அடுத்த ரமலான் வரை நாம் உயிர் வாழ்வோமா என்பதும் நிச்சயமில்லை. “மரணம் வருவதற்கு முன்னர் உனது வாழ்வைப் பயன்படுத்திக் கொள்” என்ற நபி மொழிக்கேற்ப இம்முறை நம்மால் முடியுமான அளவு அருள்மிகு ரமலானைப் பயன்படுத்தி ரப்பானிய மனிதனாக மாறி இறுதியில் ரய்யானினூடாக சுவனத்தை அடைய முயற்சிப்போம்!

அஷ் ஷேக் ஏ.கே பிஷ்ருல் ரிபாத் (நளீமி)

விரிவுரையாளர்,- ஜாமிஆ நளீமிய்யா, இலங்கை