ரமலான்: இலக்கு எது?

சூடேறிய பாலைவனத்தில் வியக்கத்தக்க வகையில் பெய்யும் மழை ரமத். மனித உள்ளங்களில் இறையச்சம் எனும் மழையை பெய்விப்பது ரமலான். இறையச்சத்தை விதைத்திடவும் வளர்த்திடவும் செய்வதே ரமலானின் பிரதானமான இலக்கு என அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (அல் குர்ஆன் 2:183)

இறையச்சம் என்பது உள்ளத்தில் தோன்றும் உணர்வு. அந்த உணர்விலிருந்தே நன்மையான செயல்கள் வெளிப்படுகின்றன. மனித மனதில் ஷைத்தானுக்கும் இறைவனுக்கும் மத்தியில் நிரந்தரமான போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். அதில் மனிதன் தான் இறைவனிடம் அளித்த வாக்குறுதிக்கு எந்த அளவு விசுவாசமாக நடந்துகொள்கிறானோ அந்த அளவுக்கு அந்தப் போராட்டத்தில் நன்மை மிகைக்கும். அவன் எந்த அளவுக்கு தன் மன இச்சைக்கு கட்டுப்பட்டு இறைவனைவிட்டும் தூரமாகின்றானோ அந்த அளவுக்கு அந்தப் போராட்டத்தில் தீமை மிகைக்கும். இந்த நிரந்தரமான போராட்டத்தில் தொடர்ந்து நன்மையின் பால் நம்மை உந்தி செலுத்துவதே இறையச்சம்.

ஒரு தடவை உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம், ‘இறையச்சம்’ என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாக உபை இப்னு கஅப் (ரலி), “நீங்கள் இருபுறமும் முட்கள் சூழ்ந்த பாதையில் சென்றுள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி), “ஆம். நான் சென்றுள்ளேன்” என்றார்கள். உபை இப்னு கஅப்(ரலி), “அந்தப் பாதையில் எப்படிச் செல்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி), “என் ஆடைகளை கெண்டைக்காலுக்கு மேலுயர்த்தி முட்களில் பட்டுவிடாதவாறு பேணுதலாகச் செல்வேன்” என்றார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), “அப்படித்தான் இறையச்சமும்” என்றார்கள்.

இதுதான் இறையச்சம். உள்ளத்தில் நிரந்தரமாக இருக்கும் விழிப்புணர்வு. வாழ்க்கை என்னும் பாதையைச் சூழ்ந்திருக்கும் முட்களைக் குறித்த எச்சரிக்கையுணர்வு. பேராசை, தீய இச்சை, ஊசலாட்டம், பயம் ஆகியவை சரியான பாதையை விட்டும் நம்மை திசைதிருப்பும் முட்களாக இருக்கின்றன. இவைபோன்று இன்னும் ஏராளமான முட்களும் நம் பாதையில் காணப்படுகின்றன.

மனிதன் தன்னை முழுமையாக சுத்திகரிக்கும் மாதம் ரமலான். உள்ளத்தை பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்துவதும் அதிகப்படியான அமல்கள் செய்வதன் மூலமாக உள்ளத்திற்கு இறைவன் புறத்திலிருந்து ஒளியை பெறுவதும் வாழ்வின் எல்லா பாகங்களிலும் இறைவனை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய இறையச்சமுள்ள உண்மையான முஃமின்களாக மாறுவதும்தான் ரமலானின் பிரதான இலக்கு.

உண்மையான முஃமின்கள் யார்?

“உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள். இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும் பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.” (அல்குர்ஆன் 8:2-4)

இருதயங்கள் நடுங்கும் அளவிலான உயர்வான இறை நினைவு; அல்லாஹ்வின் திருநாமம் கூறப்பட்டாலோ, அவனது வசனங்களை கேட்டாலோ உள்ளம் உணர்வுப்பூர்வமாக மாறும்; நம்பிக்கை அதிகரிக்கும் என்பதுதான் உண்மையான நம்பிக்கையாளரின் முதல் அடையாளம். அல்லாஹ்வின் நினைவை அன்றாட வாழ்வில் உயிரோட்டமாக்குவதன் மூலம் மன அமைதி, தைரியம், மன திருப்தி, உற்சாகம், நம்பிக்கை, பலம், அல்லாஹ்வின் நேசம், அவனது உதவி ஆகியன கிடைக்கும். அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னை தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூர்வேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூர்வேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி)

ஒருவருடைய இறையச்சம் சோதிக்கப்படுவது அவர் தனிமையில் இருக்கும் போதுதான். அங்கு ஒருவர் இறைவனின் நினைவை மறந்து தடுக்கப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் நஷ்டங்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டு காட்டினார்கள், “எனது சமுதாயத்தில் சில நபர்கள் திஹாமா மலை அளவு அவர்களின் நன்மைகளுடன் கியாமத் நாளில் வருவார்கள். அல்லாஹ் அவர்களின் நன்மைகளை தூசியாக மாற்றிவிடுவான். ஸவ்பான்(ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு அவர்களை தெரியாது. அவர்களின் கூட்டத்தில் சேராமலிருக்க அவர்களைக் குறித்து எங்களுக்கு விவரியுங்கள்’’ என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவர்கள் உங்களின் கூட்டத்தைச் சார்ந்த உங்களுடைய சகோதரர்களே. உங்களைப் போலவே அவர்களும் இரவை பெற்றுக்கொள்கின்றார்கள். ஆனால், அவர்கள் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றுடன் தனிமையில் இருந்தால் அதனை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.” (நூல்:இப்னுமாஜா)

ஈமானை அதிகரிக்கச் செய்யும் குர்ஆனை செவிதாழ்த்தி கேட்டல்

குர்ஆனை ஓதுவதை கேட்கும்போது ஈமான் அதிகரிப்பது உண்மையான நம்பிக்கையாளர்களின் அடையாளம் என்று அல்லாஹ் கூறுகிறான். வாழ்க்கையை உயர்வான நிலைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான அறிவு மனிதனுக்கு தேவை. அது அல்லாஹ்வின் வேதத்திலிருந்தே கிடைக்கும். ஆகையால்தான் அதனை கற்பது, ஆய்வு செய்வது, மனனம் செய்வது ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகின்றான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்து தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூர்கிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரை குலச்சிறப்பு முன்னுக்கு கொண்டு வந்துவிடுவதில்லை.’’ (நூல்:முஸ்லிம்)

குர்ஆன் மனிதனின் உள்ளத்தோடு, உணர்வோடு, இயல்போடு, அறிவோடு, அவனது வாழ்வோடு, நிகழ்காலத்தோடு இணைந்து கொள்வதற்காக வந்துள்ளது. மனிதனின் சக்திகள் அனைத்தையும் தட்டி எழுப்புவதற்காக, அவற்றை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதற்காக வந்துள்ளது.இறைவனை அஞ்சக்கூடியவர்களுக்கு மட்டுமே குர்ஆன் நேர்வழியை காட்டும். இறையச்சமே மனித உள்ளத்தின் பூட்டுகளைத் திறந்து அதில் பிரவேசித்து தான் நிறைவேற்ற வேண்டிய பணிக்காக உள்ளத்தை தயார்படுத்துகின்றது.

திருக்குர்ஆனிலிருந்து வழிகாட்டலைப் பெற விரும்புபவர் கண்டிப்பாக தூய உள்ளத்துடன் அதன்பால் வர வேண்டும். அவனை அஞ்சக்கூடிய, வழிகேட்டிலிருந்து விலகக்கூடிய உள்ளத்துடன் அதன்பால் வர வேண்டும். அப்போதுதான் திருக்குர்ஆன் தன் இரகசியங்களையும் ஒளியையும் திறந்து காட்டும். அப்படிப்பட்ட உள்ளத்தில்தான் அது தன் வெளிச்சத்தைப் பரப்பும்.

அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருத்தல்

உண்மையான நம்பிக்கையாளரின் சிறப்பாக குர்ஆன் விவரிக்கும் பண்புகளில் ஒன்று தவக்குல். நம்பிக்கையாளர் தனது வாழ்க்கை காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்பது நடைமுறையில் ‘தவக்குல்’ என்று அழைக்கப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இறைவனிடம் முழு நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று இறைவன் உங்களுக்கும் உணவளிப்பான். ஒட்டிய வயிற்றுடன் காலையில் கிளம்பிச் செல்லக்கூடிய பறவை, வயிறு நிரம்பிய வண்ணம் மாலையில் திரும்புகிறது.”(நூல்:திர்மிதி)

தொழுகையை நிலைநிறுத்துவார்கள்

தொழுகையின் ஆன்மாவை கண்டறிந்து ஆறுதல் பெறுவது ஈமான் அதிகரிப்பதற்கான வழி. தொழுகையை அல்லாஹ்வுடனான சந்திப்பாகவே நபி (ஸல்) அவர்கள் அனுபவப்பட்டார்கள். அதைத்தான் போதித்தார்கள். தொழுகையில் கிடைக்கும் கண் குளிர்ச்சி வாழ்க்கையில் மிகச் சிறந்த அனுபவம் என்று கூறியுள்ளார்கள். தொழுகைக்காக இகாமத்திற்கு நேரமான போது பிலால் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்மை மகிழ்ச்சியுறச் செய்யுங்கள் பிலால்’.
குர்ஆனை நிறுத்தி, நிறுத்தி அதனுடைய கருத்துக்களை கூர்ந்து கவனித்து வசனத்தின் கருத்துக்களுக்கேற்ப அல்லாஹ்வை புகழ்ந்தும், பிரார்த்தித்தும் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் குர்ஆனை ஓதினார்கள். கியாம், ருகூஃ, சுஜூத் போன்ற நிலைகளில் மிகுந்த பயபக்தியோடு இருந்தார்கள். பர்ழ் தொழுகைக்கு முன்பும் பின்பும் சுன்னத்தான தொழுகைகளுக்கு நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் அளித்தார்கள். இரவில் எழுந்து நீண்ட நேரம் தொழுதார்கள்.பல வேளைகளில் குர்ஆனை ஓதுதலுக்கும், தஸ்பீஹிற்கும் மத்தியில் தேம்பி அழுதார்கள். உபரியான தொழுகைகளின் அழகும், நீளமும் வர்ணிக்கவியலாதது. சுஜூதிலும், அத்தஹிய்யாத்திலும் நபி (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் அல்லாஹ்வை துதிப்பதிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டார்கள்.

மனச் சுமைகளை இறக்கி வைத்து மனதிற்கு தூய்மை, உற்சாகம், பலம், ஒளி, அல்லாஹ்வை குறித்த உயிரோட்டமான நினைவு, சுறுசுறுப்பு ஆகியவற்றை அளிப்பதே தொழுகையின் பலனாகும்.

நல்வழியில் செலவு செய்வார்கள்

உண்மையான விசுவாசிகள் தங்களிடம் இருக்கின்ற செல்வம் அல்லாஹ்வால் வழங்கப்பட்டது, தாங்கள் உருவாக்கியது அல்ல என்பதை ஒத்துக் கொள்வார்கள். இவ்வாறு ‘அல்லாஹ்வின் அருட்கொடை’ என்று அவர்கள் ஒத்துக்கொள்வதிலிருந்துதான் பலவீனமான படைப்புகளுக்கும் சக மனிதர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. இது மனித மனதை பேராசையிலிருந்தும் கஞ்சத்தனத்திலிருந்தும் தூய்மைப்படுத்துகிறது. வாழ்வென்னும் களத்தை ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் களமாக அல்லாமல் உதவிக்கொள்ளும் களமாக ஆக்குகிறது. இங்கு செலவு செய்தல் என்பது ஸகாத், தர்மம் மற்றும் நல்வழியில் செய்யப்படும் செலவுகள் அனைத்தையும் குறிக்கிறது. ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்பே ‘நல்வழியில் செலவு செய்வது’ கடமையாக்கப்பட்டுவிட்டது. இது பொதுவான அடிப்படையாகும். ஸகாத் குறித்த வசனங்கள் அதன் குறிப்பிட்ட வடிவத்தை நிர்ணயம் செய்கின்றன.

“(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்” (அல்குர்ஆன் 3:134)

என்று குர்ஆன் கூறுகிறது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக் கேட்டார். ‘‘நீர் ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வறுமைக்கு பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே நன்மை’’ என்றார்கள் நபி (ஸல்). (ஆதாரம்: முஸ்லிம்)

அல்லாஹ் எதிர்பார்க்கும் சத்திய விசுவாசியாக மாறுவதற்கு இந்த ரமலானை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்கள் இப்படி சொல்லிக் காட்டினார்கள், “ சரியான முஃமின் உருவாகி விட்டால் வெற்றி தாமாகவே வந்துவிடும்”. வாழ்விலும் சமூகத்திலும் வெற்றி பெறுவதற்கு நாம் சரியான முஃமின்களாக உருவாக வேண்டும். அப்போதுதான் அல்லாஹ் வெற்றியின் வாயில்களை திறந்து விடுகின்றான். பத்ருப்போரில் வெற்றி, மக்கா வெற்றி, மங்கோலியா தார்த்தரியர்களுக்கு எதிரான யுத்தங்களில் வெற்றி, சிலுவை யுத்தங்களில் வெற்றி, ஸ்பெயின் வெற்றி என உலக சரித்திரத்தை தலைகீழாக மாற்றியமைத்த பல்வேறு வெற்றிகள் இந்த மாதத்தில்தான் கிடைத்துள்ளது

நீதிக்கான போராட்டத்தில் பங்காளர்களாக மாறுவோம்

சமூகத்தில் நீதியை நிலை நாட்டுவது முஃமின்களுக்கு இறைவன் விதியாக்கிய குர்ஆனிய கடமை என்பதோடு இறையச்சத்திற்கு மிக நெருக்கமான செயல் என்பதாக இறைவன் பிரகடனப்படுத்துகின்றான்,

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) -பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 5:8)

நபி (ஸல்) அவர்கள் செய்த பணிகள் குறித்து இறைவன் அறிமுகப்படுத்தும் போது மனிதர்களை அக்கிரமக்காரர்களின் பிடியிலிருந்து விடுவித்து மனித சமூகத்தில் பரிபூரண நீதியை நிலைநாட்டினார்கள் (அல்குர்ஆன் & 7:157) என்பதாக தெரிவிக்கின்றான்.

இறைவன் விதியாக்கிய கடமையை, நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட இலட்சியப் பணியை சமூகக் களத்தில் வீரியமாக எடுத்துச் செல்வதற்கு முஃமின்களின் உள்ளத்தை ரமலான் தயார்படுத்துகின்றது. ரமலான் முஃமின்களின் உள்ளங்களில் போராட்ட உணர்வையும் இரத்தசாட்சி வேட்கையையும் உற்பத்தி செய்கின்றது.

தீமை உலகை ஆளுகையில் போராட்ட உணர்வை வெளிப்படுத்த நம்பிக்கையாளன் வேண்டும். ஷைத்தானோடு போர் பிரகடனம் செய்த நோன்பாளியால் அதர்மத்தின் முன்னால் மௌனியாக நிற்க முடியாது. போராட்ட மனநிலை என்பது மனிதநேயம், சக உயிரினங்களின் மீதான அன்பு, சமூக பொறுப்புணர்வு ஆகியவற்றிலிருந்து உருவாகுவதாகும்.

எந்தவொரு நபருடைய உயிர், உடமை, மானம் ஆகியவற்றை புனிதமானதாக பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் பேருரையை நம்பிக்கையாளர்கள் தங்களது உயிரைவிட அதிகமாக மதித்து நடக்கவேண்டும். சர்வதேச மனித உரிமை சட்டங்களும், நாட்டின் அரசியல் சாசனமும் இந்த நலன்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அக்கிரமங்கள் கோலோச்சும் போது சமூகம் கடைப்பிடிக்கும் மௌனம் சமாதானத்திற்கான அடையாளமல்ல. துணிவும் வீரமும் நமது அணிகலன்களாக மாற வேண்டும். எதிர்குரல்களுக்கு ஆயுதங்களை விட பலம் உண்டு. பயத்தை முறியடித்து சத்தியத்தை உயர்த்திப் பிடிப்பதும் அதற்காக நிலைத்து நிற்பதும் இறையச்சத்தின் அடிப்படை பண்பாகும்.

அசத்தியத்தின் கவர்ச்சியில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது; அதன் அச்சுறுத்தலுக்கு பயந்துவிடக்கூடாது என்று அல்லாஹ் எச்சரிக்கிறான். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே போராட்டம் நடக்கும். துவக்கத்தில் சத்தியம் தோற்றாலும், இறுதி வெற்றி சத்தியத்திற்கே!

முகைதீன் அப்துல் காதர்
மாநில பொதுச் செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா