
48 மணி நேரத்தில் ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு!
ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் வழக்குரைஞர் விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஒன்றிய அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கிய நிகழ்வு இதுவாகும். உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை தொடர்ந்து 48 மணி நேரங்களில் தனது ஒப்புதலை ஒன்றிய அரசாங்கம் வழங்கியது.
பிரசாந்த் குமார் மிஸ்ரா நியமனத்தை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலத்திற்கு உச்சநீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற பாரில் இருந்து நேரடியாக நீதிபதியாக விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி அல்லாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படும் ஒன்பதாவது நீதிபதி இவர் ஆவார்.
அத்துடன் 2030ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பு இவருக்கு இருக்கிறது. அவ்வாறு நியமனம் செய்யப்படும் பட்சத்தில் நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்கும் நான்காவது நபராக இவர் இருப்பார்.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் ராம சுப்ரமணியன் ஆகியோர் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.