சாவர்க்கரின் வாரிசுகள்

-ரியாஸ்

‘யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜி படையினர் விஷ வாய்வு கூடங்களில் இருந்து தொடங்கவில்லை, வெறுப்பு பிரச்சாரத்தின் மூலமே அதனை தொடங்கினார்கள்’ என்று கூறுவார்கள். இந்தியாவில் உள்ள இந்துத்துவ பாசிசவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான இதே வழிமுறையை பின்பற்றி வருகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை கக்குவதற்கு அவர்கள் எந்த வாய்ப்பையும் நழுவ விடுவதில்லை. கொரோனா அச்சத்தில் உலகம் மூழ்கி அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையிலும் இவர்களின் வெறுப்பு தொழில் மட்டும் தடையின்றி நடக்கிறது.

சமூக வலைதளங்களின் வருகைக்கு பின்னர் சங்பரிவார்களின் இந்த வேலை எளிதானது. இதற்கென்று நபர்களை நியமித்து அதற்கான சம்பளத்தையும் வழங்கி வெறுப்பு தொழிலை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் பணிபுரியும் தங்கள் உறுப்பினர்களையும் இதில் பயன்படுத்துகின்றனர். கொரோனாவிற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்ற ஆதாரமற்ற செய்தியை வெற்றிகரமாக பரப்பினர். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் பதிவுகளையும் இட்டனர்.
அரபு நாடுகளில் பணிபுரியும் சங்பரிவார்கள் முஸ்லிம் விரோத செயல்களில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. நிதி திரட்டுவது, இயக்க பணிகளை மேற்கொள்வது, நிறுவனங்களில் முஸ்லிம் தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பது, முஸ்லிம்களை வேலைக்கு எடுக்காமல் தடுப்பது என அனைத்தையும் செய்து வந்தனர். அந்த நாடுகளின் அரசாங்கமும் நிறுவனங்களின் உரிமையாளர்களும் நிர்வாகிகளும் இதனை பெரிதாக இதுவரை எடுக்கவில்லை. இதனால் சங்பரிவார்கள் எவ்வித தடையும் இன்றி தங்கள் வேலைகளை செய்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, கொரோனா முஸ்லிம் விரோத பிரச்சாரத்திலும் அரபு நாடுகளில் வாழும் சங்பரிவார்கள் ஈடுபட்டனர். ஆனால் இம்முறை எதிர்பாராத எதிர்நடவடிக்கையை சங்பரிவார்கள் எதிர்கொண்டனர்.

சங்பரிவார்களின் மோசமான பதிவுகளால் விரக்தியடைந்தவர்கள், சம்பந்தப்பட்டவர்கள் குறித்த புகார்களை அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பினர். இதன் பலனாக, வெறுப்பு பதிவுகளை இட்ட சங்பரிவார்கள் வேலையில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டனர். முஸ்லிம் நிறுவனங்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு நிறுவனங்களில் பணி செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகைய எதிர்வினையை எதிர்பார்க்காத சங்பரிவார்கள் கலக்கமடைந்தனர்.
வீர வசனங்களை பதிவு செய்த இந்த காகித புலிகள் எதிர் நடவடிக்கைகள் எழுந்தவுடன் உடனடியாக காலில் விழுந்தனர். தங்களின் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, முஸ்லிம்களை குறித்து தான் அவ்வாறு கூறவில்லை, அரபு நாடுகளுக்கு என்றும் விசுவாசமாக இருப்போம் என்று ட்விட்டரில் நீண்ட மன்னிப்பு கடிதங்களை எழுதி தாங்கள் சாவர்க்கரின் உண்மையான வாரிசுகள் என்பதை நிரூபித்தனர். தனது நிலை பாதிக்கப்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கு தன்னுடைய எதிரியின் காலில் விழுவதற்கு சங்பரிவார்கள் சிறிதும் தயக்கம் காட்டமாட்டர்கள். மன்னிப்பு கடிதம் எழுதுவதையே தனது வாழ்நாள் பணியாக கொண்டிருந்த சாவர்க்கரை பிதாமகனாக ஏற்றுக் கொண்டவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

உலக முஸ்லிம் விவகாரங்களில் அரபு நாடுகள் தற்போது பெரியளவில் கவனம் செலுத்துவதில்லை. முஸ்லிம்களின் தலையாய பிரச்சனையான ஃபலஸ்தீன விவகாரத்திலும் பெரும்பான்மை அரபு நாடுகள் கள்ள மௌனம் சாதித்து வருகின்றனர். சில நாடுகள் இன்னும் ஒரு படி மேலே சென்று இஸ்ரேல் அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்திய முஸ்லிம்களின் விவகாரத்திலும் அரபு ஆட்சியாளர்கள் இதே நடைமுறையைத்தான் பின்பற்றுகின்றனர். ஆறு ஆண்டுகால மோடி தலைமையிலான பாசிச ஆட்சியில் முஸ்லிம்கள் அடித்து படுகொலை செய்யப்பட்ட போதும், கஷ்மீருக்கு அரசியல் சாசனம் வழங்கிய சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட போதும், பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் அநீதமாக தீர்ப்பளித்த போதும், இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. விவகாரம் தலைதூக்கிய போதும் அரபு ஆட்சியாளர்கள் வாய் திறக்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் உயரிய விருதை மோடிக்கு வழங்கி அழகு பார்த்தன. டெல்லி கலவரங்களுக்கும் இந்தியாவின் அனைத்து தீமைகளுக்கும் மோடியை குற்றம் சாற்றக் கூடாது என்றுகூட அமீரகத்தில் இருந்து வெளிவரும் கல்ஃப் நியூஸ் நாளிதழில் சமீபத்தில் கட்டுரை வெளி வந்தது (Stop blaming Modi for Delhi riots and all things evil in India, Gulf News, March 9, 2020). தங்களின் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைக்க இவர்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

தற்போதைய விவகாரத்திலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் நேரடியாக கருத்து கூறாவிட்டாலும் அரச குடும்பங்களை சார்ந்தவர்கள், முக்கிய நிறுவனங்களின் உரிமையாளர்கள், முக்கிய குடும்பங்களை சார்ந்தவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான, இஸ்லாத்திற்கு எதிரான இந்த போக்கை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்று அமீரகத்தின் அரசு குடும்பத்தை சார்ந்த இளவரசி ஹிந்த் அல் காசிமி காட்டமாக பதிவிட்டிருந்தார். “குவைத்தில் கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள், அவர்கள் மீது எவ்வித பாரட்சமும் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ன?” என்று குவைத்தை சார்ந்த ஒருவர் கேள்வி எழுப்பினார்.. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்களை சர்வதேச நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்ல அனைத்து ஆதாரங்களையும் திரட்ட தயாராக உள்ளதாக வழக்கறிஞர்கள் பதிவு செய்தனர். அரபு நாடுகளில் இருந்து இனவெறி பிடித்த அனைவரையும் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கை உரக்க எழுந்தது. முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி.யும் தனது கண்டனத்தை பதிவு செய்தது. இந்தியாவின் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் வளர்ந்து வரும் இஸ்லாமோஃபோமியா குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்தது.

ஓ.ஐ.சி.யின் கண்டனத்தை தொடர்ந்து மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியை கொண்டு ஒரு அறிக்கையை கொடுத்தது மத்திய அரசு. ‘இந்தியா முஸ்லிம்களுக்கு சொர்க்கமாக இருக்கிறது’ என்று தனது அறிக்கையில் நக்வி தெரிவித்திருந்தார். தலைநகர் டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை நடத்தப்பட்டு முஸ்லிம்களின் உயிர்களும் உடைமைகளும் சேதமாக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் நக்வி இவ்வாறு கூறினார். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நக்வியிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, ‘இந்திய மத்திய அமைச்சரின் கருத்துக்கு ஏற்ப இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படுவதை போல் நாமும் இங்குள்ள இந்துக்களை நடத்த வேண்டும் என நினைக்கிறேன்’ என்று நூரா அல் குரைர் பதில் பதிவிட்டார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய குடும்பங்களில் ஒன்றான அல் குரைர் குடும்பத்தை சார்ந்தவர்.

சங்பரிவார்களின் சமீபத்திய பதிவுகள் குறித்து மட்டுமன்றி அவர்களின் பழைய பதிவுகளையும் தோண்டி எடுத்து கேள்வி எழுப்பினர். கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, சில வருடங்களுக்கு முன் அரபு பெண்கள் குறித்து பதிவிட்ட மோசமான பதிவை சுட்டிக்காட்டி, ‘பிரதமர் மோடி இவர் மீது நடவடிக்கை எடுப்பாரா?’ என்று கேள்விகள் எழுப்பினர். சூர்யா இந்த பதிவை நீக்கிய போதும் அவரால் தப்பிக்க இயலவில்லை. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்த சங்பரிவார்கள் நிலை தடுமாறினர்.

ஏப்ரல் 19 அன்று பிரதமர் மோடி, ‘கொரோனா இனம், மதம், நிறம், சாதி, மொழி அல்லது எல்லைகளை பார்த்து தாக்குவதில்லை. எனவே நமது எதிர்வினையும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக இருக்க வேண்டும்’ என்று பதிவிட்டார். அமீரகம், ஓமன் மற்றும் கத்தார் நாடுகளின் இந்திய தூதரகங்கள் இந்தியவர்கள் பொய் செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என்றும் கொரோனாவை எதிர்கொள்வதில் மட்டுமே நமது கவனம் இருக்க வேண்டும் என்றும் இந்தியர்களுக்கு அறிவுறத்தின.

அடி பலமாக விழவே, சங்பரிவார்கள் வரிசையாக மத நல்லிணக்க பதிவுகளை பதிவு செய்ய ஆரம்பித்தனர். சமூக வலைதள கணக்கை தொடங்கிய நாளில் இருந்து முஸ்லிம் வெறுப்பை தினமும் கக்கி வந்தவர்கள் திடீரென முஸ்லிம்கள் மீது பாசத்தை பொழிந்தனர். ஞானிகளாக மாறி அன்பு மற்றும் சகோதரத்துவம் குறித்து வகுப்புகளை எடுத்தனர். ட்விட்டரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்த கணக்குகள் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டன.
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஏதோ முகம் தெரியாத கீழ்நிலையில் உள்ள சங்பரிவார் உறுப்பினர்கள் செய்வதில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதுகெலும்பே இந்த பொய் பிரச்சாரம்தான். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் பா.ஜ.க. தலைவர்களும் தொடர்ந்து இதனை செய்து வருகின்றனர். ‘இறந்த முஸ்லிம் பெண்களின் உடல்களை தோண்டி எடுத்து கற்பழிக்க வேண்டும்’ என்றும் ‘முஸ்லிம்களை சுட்டுத் தள்ள வேண்டும்’ என்று பேசியவர்கள்தான் இன்று பா.ஜ.க.வின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பவனி வருகின்றனர். சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த போது, ‘போராட்டக்காரர்களை அவர்களின் உடைகளை கொண்டு அறியலாம்’ என்று கூறியவர் இந்த நாட்டின் பிரதமர். வங்கதேசத்தில் இருந்து வந்த முஸ்லிம்களை கரையாண்கள் என்றவர் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா (அவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் ஏதும் கிடையாது என்பது வேறு விஷயம்). இவர்கள் இருவரும் உயர்பதவிகளில் இருந்த போது குஜராத்தில் நடத்தப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையை யாரும் மறக்கவில்லை.

பா.ஜ.க. தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மாளவியா வெறுப்பு பேச்சுகளையும் பொய் செய்திகளையும் கொடுப்பதில் முன்னணியில் உள்ளவர். ‘சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் என்ற பெயரிலும் தற்போது தப்லீக் மர்கஸில் நடத்தப்பட்ட சட்டவிரோத ஒன்றுகூடல் ஆகியவற்றின் மூலம் டெல்லியில் கடந்த மூன்று மாதங்களாக ஒரு இஸ்லாமிய அலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்ய வேண்டும்’ என்றும் ஏப்ரல் 1 அன்று ட்விட்டரில் பதிவிட்டார். கர்நாடகாவின் பெல்காவியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லீக் உறுப்பினர்கள் துப்புவதாகவும் மருத்துவமனை ஊழியர்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் ஆபாச செய்கைகளை காட்டுவதாகவும் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷோபா கரந்த்ஜாலே ஏப்ரல் 6 அன்று பதிவிட்டார். மாவட்டத்தின் இணை கமிஷ்னர் இந்த செய்தியை மறுத்த போதும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தப்லீக் உறுப்பினர்களை மனித வெடிகுண்டுகளுடன் ஒப்பிட்டார் (ஏப்ரல் 4) இமாச்சல பிரதேச பா.ஜ.க. தலைவர் ராஜீவ் பின்தால். மகாராஷ்டிராவில் எப்படியும் முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்று பதவி வெறி பிடித்து அலையும் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் இதே கருத்தை (ஏப்ரல் 9) பதிவு செய்தார். இவை சமீபத்திய சில உதாரணங்கள் மட்டுமே.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமும் அதன் தலைவர்களும் தொடங்கி வைத்த வெறுப்பு பிரச்சாரத்தை அதன் தொண்டர்கள் முன்னெடுத்தனர். தற்போது அதற்கான பலனை அனுபவித்து வருகின்றனர். முஸ்லிம் இன அழிப்பை இலட்சியமாகக் கொண்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பதையும் அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சிதான் தற்போது இந்தியாவை ஆட்சி செய்து வருகிறது என்பதையும் அரபு நாட்டு ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நீதிக்காக தங்கள் நாட்டு மக்கள் எழுப்பிய குரலுக்கு ஆட்சியாளர்கள் செவி சாய்க்க வேண்டும்.

இந்துத்துவத்தின் கரங்களில் கடும் இன்னல்களை சந்தித்த போது இந்திய முஸ்லிம்கள் இந்த விவகாரங்களை வெளியுலகிற்கு கொண்டு செல்லவில்லை. இந்திய ஜனநாயகம், அதன் அரசியல் சாசனம் மீது நம்பிக்கை கொண்ட இந்திய முஸ்லிம்கள் அவற்றின் மூலமே தங்களுக்கான தீர்வுகளை தேடி வருகின்றனர். தற்போதும் இந்த விவகாரத்தை முஸ்லிம்கள் அரபு நாடுகளிடம் கொண்டு செல்லவில்லை. சங்பரிவார்களின் கேவலமான விஷம பிரச்சாரமே இந்தியாவை மீண்டும் ஒருமுறை தலைகுனிய வைத்துள்ளது. ஆனால் சங்பரிவார்கள் இந்த பிரச்சனையில் இருந்து பாடம் பயின்றதாக தெரியவில்லை. இந்தியா தலைகுனிவை சந்திப்பது அவர்களுக்கு ஒருபொருட்டே அல்ல. இத்தகைய வெறுப்பு பதிவுகள் அரபு நாடுகள் உடனான இந்தியாவின் உறவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரச்சனையில் சிக்கியவர்கள் அதில் இருந்து வெளியே வர வழக்கமான தங்களின் கீழ்த்தரமான நடவடிக்கைகளை பயன்படுத்த தொடங்கினர். அரபிகளின் பெயர்களில் போலி ட்விட்டர் கணக்குகளை தொடங்கி இந்து மதத்தை குறித்து தவறாக பதிவிட ஆரம்பித்தனர். தனது தவறில் இருந்து பாடம் படிக்கும் வழக்கம் பாசிசத்திற்கு கிடையாது. அது தொடர்ந்து தனது இலக்கை நோக்கியே பயணிக்கும்.

இந்தியாவில் வெளிப்படும் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை அரபு நாடுகளை சார்ந்தவர்கள் கண்டிப்பதற்கு முன்னரே பல சர்வதேச ஊடகங்கள் கண்டித்தன. சர்வதேச மத உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையம், இந்தியாவில் கொரோனா நோய் பரவலுக்கு முஸ்லிம்களை குற்றப்படுத்துவது குறித்த தனது கவலையை வெளிப்படுத்தியது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்து மற்றும் முஸ்லிம் நோயாளிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதை அது குறிப்பிட்டிருந்தது.

இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான தனது செயல்பாடுகளின் காரணமாக ஈரான், துருக்கி, மலேசியா, இந்தோனேசியா போன்ற முஸ்லிம் நாடுகளுடனான உறவை பா.ஜ.க. அரசாங்கம் சீர்குலைத்துள்ளது. தற்போது அரபு நாடுகளுடனும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு உட்பட்டே நமது வெளியுறவு கொள்கை அமைய வேண்டுமே அல்லாமல், ஆள்பவர்களின் பாசிச சித்தாந்தங்களுக்கு ஏற்ப அதனை அமைக்கக் கூடாது.

(படம்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா)