செய்யது முஹம்மது கஸ்டடி படுகொலை நிகழ்ந்தது எவ்வாறு?
நவம்பர் 2014
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டிணத்தில் முஹம்மது அலி என்பவரின் இறால் பண்ணையில் வேலை செய்து வந்தவர் செய்யது முஹம்மது. இவருக்கும் அப்பகுதி மெக்கானிக் அருள்தாஸ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட சிறிய சச்சரவு செய்யது முஹம்மதின் கொலையில் முடிந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்ட இடம் காவல்நிலைம் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. அக்டோபர் 14 அன்று இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதை கண்ட காவலர்கள் ரவி மற்றும் மகாலிங்கம் ஆகியோர் இருவரையும் எஸ்.பி. பட்டிணம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அருள்தாஸிடம் செய்யது முஹம்மதுவிற்கு எதிராக ஒரு மனுவை பெற்றுக்கொண்டு செய்யது முஹம்மதுவை சப்-இன்ஸ்பெக்டர் அறையில் உட்கார வைத்துள்ளனர். மதியம் 2.30 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்த SI காளிதாஸ் செய்யது முஹம்மதுவை விசாரணை என்ற பெயரில் அவரது ஆடைளைகளையச் செய்து பல்வேறு வகையான சித்திரவதைகளை செய்து அடித்துள்ளார். சித்திரவதை தாங்காமல் செய்யது முஹம்மது போட்ட அலறலை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்தவர்கள் கேட்டுள்ளனர். அலறலை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சப்தமும் கேட்டுள்ளது.
என்ன நடந்தது என்பதை அறிய காவல் நிலையம் சென்று பார்த்த சிலர் சப்-இன்ஸ்பெக்டர் அறையில் செய்யது முஹம்மது கிடந்ததை கண்டனர். செய்யது முஹம்மதுவின் தாய்மாமன் ஜகுபர் அலி மற்றும் அவரின் தம்பி செய்யது அபுதாஹிர் இருவரும் காவல் நிலையம் சென்ற போது செய்யது முஹம்மது ஆடைகளின்றி படுத்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். காவல் நிலையத்திற்கு மக்கள் வருவது அதிகரிப்பதை கண்ட காவலர்கள் அனைவரையும் வெளியேற்றி காவல் நிலையத்தை இழுத்து பூட்டியுள்ளனர்.
இதன் பின்னர் திருவாடானை டி.எஸ்.பி. சேகர் மற்றும் எஸ்.பி. பட்டிணத்தில் மருந்து கடை நடத்தி வரும் ரமேஷ் ஆகிய இருவரும் காவல் நிலையம் சென்றனர். இந்த ரமேஷ் ஏற்கெனவே போலி டாக்டர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை விபரீதமாவதை கண்ட காவல்துறையினர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆசாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளனர். தனது ரிக்கார்ட் நோட்டில் இந்த அழைப்பை ஆசாத் பதிவு செய்துள்ளார். (மொபைல் எண் : 94981 89426) ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஜான் ரவி மற்றும் பரமசிவம் என்ற இரண்டு காவலர்கள் செய்யது முஹம்மதுவின் உடலை ஏற்றியுள்ளனர். ‘என்ன சார் பாடிய ஏத்துறீங்க” என்று கேட்ட ஆசாத்திற்கு முறையான பதிலை கொடுக்காமல் திருப்பாலைகுடிக்கு செல்லுமாறு கட்டளையிட்டுள்ளனர். ஆசாத் செல்போனில் பேசுவதையும் தடுத்துள்ளனர். வழியில் ஆம்புலன்ஸை நிறுத்தி மேலும் இரண்டு காவலர்கள் ஆம்புலன்ஸில் ஏறியுள்ளனர்.
ஆம்புலன்ஸ் திருப்பாலைக்குடி காவல் நிலையத்திற்கு வந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த இராமநாதபுர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் தனது செல்போனில் செய்யது முஹம்மதுவின் உடலை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துள்ளார். அதன்பின் சுமார் 20 நிமிடங்கள் கழித்து அங்கிருந்த ஆம்புலன்ஸ் இராமநாதபுர அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கிடையில் காவல் நிலையத்தில் இருந்த ஒரு சிப்ஃட் (Swift) காரில் எஸ்.ஐ. காளிதாஸ் ஏறிச் சென்றதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். காயம் ஏற்பட்டதாக கூறி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆனார் காளிதாஸ்.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செய்யது முஹம்மது கத்தியை வைத்து சப்-இன்ஸ் பெக்டரை தாக்க முற்பட்டதாகவும் தன்னை தற்காத்துக் கொள்ள எஸ்.ஐ. காளிதாஸ் செய்யது முஹம்மதுவை நோக்கி சுட்டதில் அவர் இறந்ததாகவும் தங்கள் வழக்கமான கதையை காவல்துறையினர் ஊடகங்களுக்கு கொடுத்தனர். செய்யது முஹம்மதுவின் உடலில் மூன்று இடங்களில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. அத்துடன், அவர் உடம்பில் பல பாகங்களில் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தரவதை செய்து அடிக்கப்பட்ட காயங்களும் இருந்ததை சாட்சிகளும் பிரேத பரிசோதனை அறிக்கையும் தெரிவிக்கின்றன. தான் செய்த கொலையை மறைப்பதற்குதான் எஸ்.ஐ. காளிதாஸ் இறந்த செய்யது முஹம்மது உடம்பில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் கத்தியை எங்கிருந்து பெற்றார். அந்தக் கத்தியை காவல்துறையினர் சமர்பித்தனரா என விடைகள் இல்லாத கேள்விகள் நமது சந்தேகத்தை அதிகரித்துள்ளன. எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அன்றிரவே முஸ்லிம் ஜமாத்துகளும், இயக்கங்களும், கட்சிகளும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த இராமநாதபுர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் மேற்படி நிகழ்வு சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியாதது என்பது போல் அங்கு கூடியிருந்த ஜமாஅத் மற்றும் அனைத்து நபர்களிடமும் எஸ்.ஐ . காளிதாஸ் மீது கொலை வழக்கு (பிரிவு 302) பதிவு செய்து FIR போடுவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றுள்ளனர்.
யார் இந்த காளிதாஸ்?
இளைஞர் செய்யது முஹம்மதுவை மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ. காளிதாஸின் செயல் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. உண்மையிலேயே செய்யது முஹம்மது கத்தியால் குத்த முயன்றிருந்தாலும், அதனை எப்படியேனும் தடுத்திருக்கலாம். துப்பாக்கியை எடுத்து, அதுவும் மூன்று முறை, சுட வேண்டிய அவசியம் என்ன? – பிரச்சனைகள் காளிதாஸிற்கு ஒன்றும் புதிதல்ல. ஒரு வருடத்திற்கு முன்பு மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போது இரண்டு மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை தாக்கியும் உள்ளார். இதனை தொடர்ந்து கையால் அடித்து காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய வழக்குகளின் கீழ் காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இரு தரப்பினர் இடையே சமாதானம் ஏற்பட்டதால் அப்போது சஸ்பெண்ட் ஆவதில் இருந்து தப்பித்தார் காளிதாஸ்.
இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக அனைத்து ஜமாஅத்கள், இயக்கங்கள், கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரை கொண்டு மனித உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கோரிக்கை 1:- செய்யது முஹம்மதுவை சித்தரவதை செய்து கொன்று விட்டு அதை மறைக்க துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ. காளிதாஸை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
கோரிக்கை 2:- அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும்.
கோரிக்கை 3:- இறந்த செய்யது முஹம்மது குடும்பத்திற்கு ரூ.20 இலட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இதனிடையே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செய்யது முஹம்மது காயமடைந்து சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்து விட்டதாகவும் இது தொடர்பாக வழக்கு பதிவுச் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் திருவாடனை துணை கண்காணிப்பாளர் செய்யது முஹம்மதுவின் தாயார் செய்யது அலி பாத்திமாவிற்கு சம்மன் ஒன்றை அனுப்பினார். இதனைக் குறித்து கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் கேட்டற்கு ”தவறுதலாக அனுப்பி விட்டார்கள், அதை நான் சரி செய்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த வழக்கை இராமநாதபுரம் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி வேலுச் சாமி விசாரித்து வந்தார். கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்.ஐ. காளிதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
[button link=”https://www.puthiyavidial.com/custodial-death-nellai/”]14 வருடங்களுக்கு முன் நெஞ்சை பதற வைத்த கஸ்டடி படுகொலை![/button]
வழக்கறிஞர் பசுமலை, வழக்கறிஞர் N.M.ஷாஜஹான், வழக்கறிஞர் செய்யது அப்துல் காதர் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான சட்ட உதவிகளை செய்து வந்தனர். எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய அவரது தாய்மாமன் ஜகுபர் அலி மூலம் புகார் மனு அளிக்கப்பட்டது. (கணவனை இழந்த செய்யதலி பாத்திமா இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒரு மாற்றுத்திறனாளி).
பிரேத பரிசோதனையில் முழுமையாக பங்கு பெற்ற வழக்கறிஞர் குழு, செய்யது முஹம்மதுவின் உடலில் சுமார் 15ற்கும் மேற்பட்ட காயங்களும் குண்டுகள் சுடப்பட்ட காயங்களும் இருந்ததை கண்டனர்.
“நடைபெற்ற தவறான செயலுக்கு உரிய நட வடிக்கை எடுப்பேன்” என்று கண்காணிப்பாளர் மயில்வாகனன் கூறிய போதும் தவறு செய்த காளிதாஸை காப்பாற்றும் முயற்சியில் இவர் ஈடுபட்டு வருவதாகவே தெரிந்தது.
இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. (CBCID)க்கு மாற்ற வேண்டும், சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் மற்றும் Ballistic Expert Doctors களைக் கொண்டு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜகுபர் அலி மூலமாக 16.10.2014 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அதை ஒரு அவசர மனுவாக எடுத்து மேற்படி செய்யது முஹம்மதுவின் உடலை மறு பரிசோதனைக்காக அதே இராமநாதபுர அரசு மருத்துவமனையில் வைக்க வேண்டும் என்ற ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். மேலும் அரசு தரப்பு இதுபோன்ற Ballistic Expert Doctors கள் எங்கிருக்கிறார்கள் என்பதை மறுநாள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை மறுதினத் திற்கு ஒத்தி வைத்தார். (ஒரு நபர் இறப்பதற்கு முன்பு சுடப்பட்டாரா அல்லது இறந்து பின்பு சுடப்பட்டாரா, எவ்வளவு தூரம் இடைவெளியில் சுடப்பட்டார் போன்ற விஷயங்களை அறிய அதற்கென்று நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை – Ballistic Expert Doctors – கொண்டுதான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்து).
துப்பாக்கியை எப்போது பயன்படுத்தலாம்?
காவல்துறையினர் துப்பாக்கியை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 95 முதல் 105 வரை கூறுவதாவது: ஒருவர் தனது உயிருக்கோ, பொது சொத்துகளுக்கோ பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் எனக் கருதினால், வேறு வழியே இல்லை என்ற சூழ்நிலையில் துப்பாக்கியை பயன்படுத்தலாம்.
இந்திய குற்றவியல் சட்டம் 46(3)ன்படி ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கக்கூடிய அளவுக்கு குற்றம் சாட்டப்பட்டவரை கையாளும்போது, அவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்ற சூழ்நிலையில் துப்பாக்கியை பயன்படுத்தலாம். ஆனால், நடைபெற்ற சம்பவத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பது தெளிவாகிறது.
செய்யது முஹம்மது கத்தியால் குத்த முயற்சிக்கும்போது இதர காவலர்கள் உதவியோடு தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது எதிராளியை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், எஸ்.ஐ. காளிதாஸ் 3 ரவுண்டு சுட்டுள்ளார். அதில், 2 குண்டுகளில் மார்பை துளைத்துள்ளன. ஒரு குண்டு மார்பை துளைத்திருந்தாலும் சுருண்டு விழுந்துவிடுவர். ஆனால், எஸ்.ஐ. 3 குண்டுகளை பயன்படுத்தியுள்ளதும் பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ஐந்து லட்சம் வழங்கியது. செய்யது முஹம்மதுவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள், சதை துண்டுகள் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பு கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிரபாகரன் கீழ்க்காணும் உத்தரவுகளை பிறப்பித்தார்.
- தமிழக அரசின் மூலமாக இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. (CBCID) க்கு மாற்றப்பட்டுள்ளதை இந்த நீதிமன்றம் பதிவு செய்கிறது.
- நிவாரண நிதியாக கொடுக்கப்பட்ட ரூ.5 லட்சத்தை இன்னும் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
- இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. (CBCID) மிக விரைவாக (expeditiously) விசாரித்து முடிக்க வேண்டும்.
- சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்களை உரிய தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கும் வரை எந்த மாற்றமும் செய்யக் கூடாது.
- உரிய பாதுகாப்போடு பிரேதத்தை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்நிலையில் கண்துடைப்பு நடவடிக்கையாக எஸ்.பி. பட்டிணம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு S-SI உட்பட 6 காவலர்கள் இராமநாதபுரம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி அன்பு தலைமையிலான குழு விசாரித்து வந்தது.
சட்டத்தின் காவலர்களாக இருக்க வேண்டிய காவல்துறையினர் சட்டத்தை மீறும் போக்கு தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. காவல்நிலைய சித்தரவதைகள் தொடர்கதையாகி விட்டன. இவற்றிற்கு உரிய விசாரணையும் நீதியும் மறுக்கப்படுவதால் காவல் நிலைய மரணங்களும் தொடர்கதையாகி விடுமோ என்ற அச்சம்தான் மக்களிடம் தற்பொழுது எழுந்துள்ளது. அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் இத்தகைய காவல்துறையினர் மீது உரிய விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் மக்களின் அச்சம் நிரந்தரமாகிவிடும்.
காளிதாஸிற்கு ஆதரவு கரம் நீட்டிய ஹெச்.ராஜா
கொலை குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ் பெக்டர் காளிதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியது சந்தேக அலைகளை அதிகரித்தது. தன்னை தற்காத்து கொள்வதற்காக காளிதாஸ் செய்யது முஹம்மதுவை சுட்டுக் கொன்றதில் தவறேதும் இல்லை என்று கூறி நடைபெற்ற கஸ்டடி மரணத்திற்கு வக்காலத்து வாங்கினார்.
அத்துடன் தங்களின் பிராண்டான ‘வெறுப்பு அரசியலை’ இங்கும் பயன்படுத்தினார். பேருந்துகளை மறித்த முஸ்லிம்கள் இந்துக்களை குறிவைத்து தாக்கினர் என்றும் மாவட்டம் முழுவதும் கலவரம் நடத்த திட்டமிட்டனர் என்றும் அவதூறு கூறி சமூக அமைதியை குலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.
பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
தங்களை தற்காத்து கொள்ள அவரை துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் அவர் மரணித்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனை நிரூபிக்க சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் என்பவரின் கையில் சிறிய காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. காவல்துறையின் இந்த கூற்று நம்பும் படியாக இல்லை. காவல் நிலையத்தில் வைத்து ஒருவர் காவலர்களை தாக்குவார் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத செயல். அவ்வாறு நடைபெற்றிருந்தாலும் மூன்று குண்டுகளை சுட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. காவல்துறையினரின் இந்த எதேச்சதிகார போக்கை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டித்தது.
டிசம்பர் 2014
எத்தனை முறை சுட்டேன், எங்கு சுட்டேன் எனத் தெரியவில்லை- காளிதாஸ் கைது
17.10.2014 -அன்று திருவாடனையில் உள்ள விருந்தினர் மாளிகையில் எஸ்.பி. பட்டிணத்தை சேர்ந்த செய்யது முகம்மது (மளிகை கடை) ராவுத்தர் நெய்னா முகம்மது, இறந்த செய்யது முகம்மதுவின் தம்பி நூர் முஹம்மது ஆகியோரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதேப்போன்று, 27.10.2014ல் இருந்து 14.11.14 வரை செய்யது முகம்மதுவின் தாயார் செய்யதலி பாத்திமா, நூர் தாஹிரா, சேக் முகம்மது, சாதிக் அலி, ஆஸாத் அலி, சுல்தான், ஜாவித் அப்துல் பஹி, செய்யது அபுதாஹிர், பைக் ஓனர் ஷாயிபு, செய்யது இப்ராஹிம், நேரில் பார்த்த இரத்தினம், சகுபர் அலி மற்றும் காவல்நிலையத்தில் அன்று பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ. பரமசிவம், ஐயப்பன், தனபாலன், ஜான்ரவி, மகாலிங்கம், (செய்யது முகம்மது மீது) புகார் அளித்த அருள் தாஸ், அவரது தந்தை சிமியோன் மற்றும் ஜோசப் ஆகியோரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன. மேலும், எஸ்.ஐ. காளிதாஸ் வாக்கு மூலத்தில் தான் எத்தனை முறை சுட்டேன், எங்கு சுட்டேன் எனத் தெரியவில்லை என்கிற வாக்குமூலம் நீதிபதியால் பதிவு செய்யப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மேற்கூறிய சாட்சிகள் மட்டுமல்லாது போலி டாக்டர் என வழக்கு பதிவு செய்யப்பட்ட ரமேஷ் என்பவரின் வாக்குமூலத்தையும் சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ளது. மேலும், பல்வேறு சாட்சிகளையும் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் எஸ்.ஐ. தனசேகரன் ஆகியோர் விசாரித்தனர். மேலும் எஸ்.ஐ. காளிதாஸ் இராமநாதபுரத்தில் தங்க வைக்கப்பட்டார். சம்பவம் நடந்த அன்று 1 மணி நேரம் இரண்டு உயர் அதிகாரிகளுடன் எஸ்.ஐ. காளிதாஸ் பேசியுள்ளார். அது சம்பந்தமாகவும் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 07.11.2014 அன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு ஆறுதல் கூறி, கட்சியின் நிதியிலிருந்து நிவாரண மாக ரூ. 25 ஆயிரத்தையும் வழங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வழக்கறிஞர் குழு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து வந்தது.
உண்மை அறியும் குழு அறிக்கை
காவல்நிலைய மரணம் குறித்து மனித உரிமை அமைப்புகளுக்கான தேசிய கூட்டமைப்பு (NCHRO) அக்டோபர் 27 மற்றும் 28 தேதிகளில் அப்பகுதியில் தகவல்களை திரட்டியது. – NCHROவின் தேசிய தலைவர் பேரா. அ. மார்க்ஸ், வழக்கறிஞர் ரஜினி (தலைவர், மனித உரிமைகளுக் கான மக்கள் கழகம்), வழக்கறிஞர்கள் ஏ. சையது அப்துல் காதர் மற்றும் எஸ்.என். ஷாஜஹான் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றனர்.
பல்வேறு தரப்பினரிடமும் ஆய்வுகளை மேற்கொண்ட இவர்கள் காவல்துறையின் கூற்றில் உள்ள முரண்பாடுகளை கோடிட்டு காட்டினர். அத்துடன் கொலை செய்யப்பட்ட செய்யது முஹம்மதுவிடம் கத்தி இருந்தது என்பதும், அதனால் அவர் எஸ்.ஐ. காளிதாஸை கொலை செய்ய முயற்சித்தார் என்று கூறுவதும் அப்பட்டமான பொய் என்றும் கூறினர். மேலும் காளிதாஸ் உடம்பில் உள்ள காயங்கள் அவரே ஏற்படுத்திக் கொண்டவை என்றும் கூறினர்.
[button link=”https://www.puthiyavidial.com/custodial-death-nellai01/”]நெல்லை மசூத் கஸ்டடி கொலை வழக்கு: NCHRO சட்டப் போராட்டம்[/button]
மார்ச் 2015
இந்நிலையில் எஸ்.ஐ.யின் துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டுதான் சையது முகம்மதுவை கொன்றது என்ற தடய அறிவியல் ஆய்வறிக்கையானது விசாரணை குழுவினருக்கு கிடைத்தது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை குழுவில் இடம்பெற்ற அலுவலர்கள் கூறியதாவது:
சம்பவத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரணை நடத்தியதில் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுடும் அளவுக்கு, சையது முகம்மதுவால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கவில்லை. ஓர் உயிரிழப்புக்கு காரணமாக எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை சி.பி.சி.ஐ.டி. தலைமைய கத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. எஸ்.ஐ. மீது குற்றச்சாட்டு பதிய டி.ஐ.ஜி.யிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கான கடிதம் ராமநாதபுரம் டி.ஐ.ஜி.க்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரம் ஆயுதப் படை வளாகத்தில் தங்கியுள்ள எஸ்.ஐ. காளிதாஸ் கைதாகும் நிலை உருவாகும் என்றனர்.
ஜூலை 2015
ஏப்ரல் அன்று எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து ஜூன் 19 அன்று எஸ்.ஐ. காளிதாஸ் கைதானார்.
நவம்பர் 2019
14.11.2019 அன்று இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம், சார்பு ஆய்வாளர் காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும் இரண்டு இலட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூபாய் இரண்டு இலட்சத்தையும் செய்யது முகம்மதுவின் குடும்பத்திற்கே கொடுக்கவும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பதோடு நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்த அனைத்து வழக்கறிஞர்களையும் பாராட்டியது. இந்த தீர்ப்பு தவறு செய்யக்கூடிய அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக அமைந்திடும். ஏற்கனவே உயர் நீதிமன்றம் செய்யது முகம்மதின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், நிவாரணத் தொகையை 5 இலட்சத்திற்கும் அதிகமாக வழங்க வேண்டும் என்ற பரிந்துரைகள் அரசால் நிறைவேற்ற கோரிக்கை வைத்தனர்.
பிப்ரவரி 2020
இந்த வழக்கில் தன்னை விடுவிக்கமாறு மனுதாரர் நீதிமன்றத்தை நாடினார். விசாரணைக்கு பின்னர், நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த தண்டனையை இடைநிறுத்தியதுடன், மேலதிக உத்தரவு வரும் வரை திருச்சி நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கினர்.
You must be logged in to post a comment.