யோகி ஆதித்யநாத் ஆட்சியின் தோல்வியை மறைக்க நடக்கும் மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான அடக்குமுறை

ஹத்ராஸ்: யோகி ஆதித்யநாத் ஆட்சியின் தோல்வியை மறைக்க நடக்கும் மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான அடக்குமுறை..!

மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதன் மூலம் ஹத்ராஸ்ஸில் நடைபெற்ற குரூரமான பாலியல் குற்றப்படுகொலையில் அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக உருவாகும் மக்கள் எழுச்சியை இல்லாமல் ஆக்க உத்திரபிரதேச காவல்துறை முயல்கிறது.

சமீபத்தில் குரூரமாக கற்பழித்து கொலைசெய்யப்பட்ட தலித் பெண் மனீஷா வால்மீகியின் வீட்டிற்கு கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி மாணவர் அமைப்பைச் சார்ந்த ‘அத்திக்குர் ரஹ்மான், மசூத் கான் மற்றும் பத்திரிகையாளரான சித்தீக் காப்பன்’ ஆகியோர் டிரைவர் ஆலம் என்பவருடன் இணைந்து ஆறுதல் கூற சென்றனர். ஆனால் எவ்வித குற்றப்பின்னணியோ, விதி மீறலோ இல்லாத அவர்கள் அனைவரையும் உத்திரபிரதேச காவல்துறை சட்டவிரோதமாக கைது செய்து யுஏபிஏ (UAPA) என்ற கொடிய சட்டத்தை பாய்ச்சியுள்ளது.

உத்திரப்பிரதேச அரசு கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்து அவர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

சம்பவ இடத்தை பார்வையிட வந்த மற்ற எந்த நபர்களையும் விட மேற்கூறப்பட்ட நபர்கள் மீது அடுக்கடுக்கான பொய்களையும், ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளையும் காவல்துறை முன்வைத்தது. “இனப்பிரிவினைவாத வன்முறைகள்”, ‘நிதி சேகரித்தல்’ மற்றும் ‘ஆபத்தான தகவல்களை எடுத்து வருதல்’ போன்ற காவல்துறையின் பொய்யான குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் மூடத்தனமானவை.

யோகி ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு உத்திரப்பிரதச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து இருப்பது மறுக்கவியலாத உண்மை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி உத்திரபிரதேசம் இந்தியாவின் கற்பழிப்புத் தலைநகரமாக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாறியிருக்கிறது. தற்போழுது சாதாரண மனிதர்களுடைய பாதுகாப்பும் உபி-யில் கேள்விக்குறியாகியிருக்கிறது ஒருவரும் சுதந்திரமாக நடமாட இயலவில்லை.

ஹத்ராஸ் கற்பழிப்பு குற்றத்திற்கு எதிராக போராடுவதும், நீதி கிடைக்க குரல் எழுப்புவதும் அரசுக்கெதிரான சூழ்ச்சி என்று முத்திரைகுத்தப்பட்டு அத்தகைய போராட்டங்கள் பாஜக அரசால் திட்டமிட்டு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. கற்பழிப்பு குற்றவாளிகளான தாக்கூர் இன உயர்சாதி இளைஞர்களை காப்பாற்றுவதற்கு மறைமுகமாக யோகி ஆதித்யநாத் அரசு சூழ்ச்சி செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பெறுவதில் கூட மோசடி நடைபெற்று ஒருகட்டத்தில் கற்பழிப்பு நடந்ததற்கு எவ்வித அடையாளமும் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திடமிருந்து உடலை கைப்பற்றியதிலும் அதை சட்டவிரோதமாக அரசே எரித்து சாம்பலாக்கியதிலும் காவல்துறையின் தடயங்களை அழிக்கும் நோக்கமே வெளிப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சட்ட உதவிகள் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் இருந்த பகுதியை காவல்துறை முற்றுகையிட்டு சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என ஒருவரையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்காமல் பார்த்துக்கொண்டனர். இவையெல்லாம் உயர்சாதி குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக யோகி ஆத்யநாத் அரசு செய்த சூழ்ச்சிகள் என்பது தெளிவாகியுள்ளது.